மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியம் 'நல்ல கொழுப்பு!'
மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியம் 'நல்ல கொழுப்பு!'
PUBLISHED ON : ஜூலை 02, 2023

இதயத்திற்கு எந்த கெடுதலும் வந்துவிடக் கூடாது என்று, கொழுப்பு அறவே இல்லாத அல்லது குறைந்த கொழுப்புள்ள உணவுகளை மட்டும் சாப்பிடுகிறவர்கள் அதிகம். இது மூளைக்கு நல்லதல்ல. காரணம், மூளையில் 60 சதவீதம் கொழுப்பு உள்ளது.
மூளை ஆரோக்கியமாக செயல்பட வேண்டும் என்றால், ஹெச்.டி.எல்., எனப்படும் நல்ல கொழுப்பு உணவுகள் அதற்கு அவசியம். எனவே, நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட கற்றுக் கொள்ள வேண்டும். முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் உட்பட அனைத்து 'நட்ஸ்' வகைகள், மீன், அவகோடா, தேங்காய் எண்ணெய், முழு தானியங்கள் போன்றவற்றில் நல்ல கொழுப்பு உள்ளது.
தினமும் உடற்பயிற்சி செய்யும் போது, மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் செல்லும். 'பிரைன் டிரைவ் நியூரோ டிராபிக் பேக்டர்' என்ற வேதிப்பொருள் வெளிப்படும். இது, புதிய நரம்பு செல்கள் உருவாகவும், சிதைந்த செல்களை சரி செய்வதற்கும் உதவி செய்யும். சரியான அளவு துாக்கம் இல்லாவிட்டால், மூளை செல்கள் சிதைந்து விடும். இந்த பாதிப்பு, 60 வயதில் தான் வெளிப்படும்.
ஒருவரின் வாழ்நாளில் முழு மூளையையும் பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் சில பாகங்கள் அதிகம் வேலை செய்யலாம்.
சில நேரங்களில் குறைவாக சில பாகங்கள் வேலை செய்யலாம். அவ்வளவுதானே தவிர, மூளையில் குறிப்பிட்ட சதவீதம் தான் பயன்படுகிறது என்று பல காலமாக நிலவி வரும் நம்பிக்கை தவறானது.
டாக்டர் பிரித்திகா சாரி,
நரம்பியல் மருத்துவர், சென்னை

