PUBLISHED ON : ஜூன் 23, 2013
எஸ்.ராஜகோபால், மதுரை: எனக்கு நான்கு ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக ஒரு டாக்டரிடம் 2 வகை மருந்துகளை எடுத்து வருகிறேன். பணிமாறுதலால் வேறு ஊருக்கு சென்றதால், அங்குள்ள டாக்டரிடம் ஆலோசனை பெற்றேன். அவர் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதைவிட, அதற்கு எடுக்கும் மருந்து வகைதான் முக்கியம் என்று கூறி, பழைய மருந்தை நிறுத்திவிட்டு, புதிதாக 3 வகை மருந்து தந்துள்ளார். நான் என்ன செய்வது?
ஒருவருக்கு ரத்தஅழுத்தம் எந்த வயதிலும், எந்த தருணத்திலும் 140/90க்கு கீழ் அவசியம் இருந்தாக வேண்டும். இதற்கு முதற்படியாக வாழ்க்கை முறை மாற்றமாக, உணவில் உப்பை குறைத்து, எண்ணெயை தவிர்ப்பது, நொறுக்குத் தீனியை தவிர்ப்பது, கொழுப்பு, இனிப்பு வகைகளை தவிர்ப்பது, தினசரி நடைப்பயிற்சி, எடையை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். இவை அனைத்தையும் செய்தபின்பும், பலருக்கு மருந்து அவசியம் தேவைப்படும்.
ஒருவருக்கு எந்த வகை மருந்தை உபயோகித்து ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவது என்பதும் முக்கியம்தான். ஆனால் அதைவிட ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது என்பதுதான் முக்கியம். உதாரணமாக புதிதாக மூன்றுவகை மருந்துகளை கொடுத்து, ரத்தக்கொதிப்பு கட்டுப்பாட்டில் வரவில்லை என்றால், பழைய மருந்தை எடுத்தே ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தலாம். ஆகவே எந்த மருந்து எடுப்பதைவிட, ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டில் வைப்பது என்பதே முக்கியம்.
பி.பன்னீர்செல்வம், வத்தலகுண்டு: ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் எனக் கூறுங்களேன்?
நம் இந்திய உணவு வகையை, பிறநாட்டவர்கள் ஆரோக்கியமானதாகவே கருதுகின்றனர். ஆனால் நாமோ அதை ஆரோக்கியம் அற்றதாக மாற்றிவிடுகிறோம். எல்லா உணவிலும் எண்ணெயை ஊற்றி, சர்க்கரையை கூட்டி, உப்பையும் அதிகரித்து, சுவைக்காக ஆரோக்கியம் அற்றதாக மாற்றுகிறோம். உதாரணமாக, நமக்கு காலை உணவுக்கு 3 இட்லி அல்லது எண்ணெய் இல்லாத தோசை எடுத்துக் கொள்ளலாம். மதியம் நிறைய காய்கறிகள், சிறிதளவு சாதம் எடுக்கலாம். இரவு 3 எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது எண்ணெய் இல்லாத தோசை எடுக்கலாம். காலையில் தண்ணீர் சேர்த்த பாலில், சர்க்கரை இல்லாத ஒரு கப் டீ அல்லது காபி எடுக்கலாம்.
நடுவில் பசித்தால் ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யாப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 'நட்ஸ்'சும் ஓரளவு எடுப்பது நல்லது. அசைவ உணவில் மீனை எண்ணெய் இல்லாமலும், முட்டையின் வெள்ளைக்கருவையும் சிறந்த உணவாக கருதுகின்றனர். அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவை, எண்ணெய், வனஸ்பதி, பொரித்த உணவுகள், நெய், ஸ்வீட்ஸ், பேக்கரி உணவுகள், புரோட்டா உணவு வகைகள் போன்றவையாகும். இந்த மாதிரியான உணவு முறையை பழக்கப்படுத்திக் கொண்டால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
வி. விஜயஆனந்தன், ஆண்டிப்பட்டி: எனக்கு 2ஆண்டுகளாக 'டைலேட்டட் கார்டியோ மையோபதி' நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக ஆறுவகை மருந்துகளை எடுத்து வருகிறேன். இம்முறை டாக்டரிடம் சென்றபோது அவர், 'spironolactone' மாத்திரை தந்துள்ளார். இது புதியவகை மாத்திரையா? நான் எடுத்துக் கொள்ளலாமா?
'spironolactone' என்பது மிகப்பழைமையான மருந்து. 1957ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது ரத்தக்கொதிப்புக்கு மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இத்துடன் உங்களுக்கு இருப்பது போன்ற, 'ஹார்ட் பெயிலியர்' வியாதிக்கு மிகவும் பலனளிக்கிறது. இம்மருந்தை எடுக்கும்போது, ரத்தத்தில் பொட்டாசியம் அளவை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி இந்த மாத்திரையை நீங்கள் தாராளமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344