PUBLISHED ON : ஜூன் 23, 2013
எனது நண்பர், ஆஸ்துமா பாதிப்பில் உள்ளார். இந்நோய் பரம்பரையாக வரும் என, கேள்விப்பட்டுள்ளேன். எனது நண்பரோ, தொழில் ரீதியாகவும் ஏற்படும் என்கிறார். எந்தெந்த தொழில்கள் மூலம், இந்நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது?
ஆஸ்துமா நோய்க்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. தொழில் ரீதியான காரணமும் உள்ளது. உதாரணமாக, பறவை புரதத்தினால்- கோழிப்பண்ணையில் வேலை பார்ப்போருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விலங்குகளின் புரதத்தினால்- விலங்கியல் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வேதிப் பொருட்களால், பிளாஸ்டிக், சோப் மற்றும் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோர் பாதிக்கப்படுகின்றனர்.
பூச்சிகளின் புரதத்தினால்- ஆய்வுக் கூடங்களில் வேலை பார்ப்போர் பாதிக்கப்படுகின்றனர். தாவர புரதத்தினால்- பேக்கரி துறையில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மீன் புரதத்தினால்- மீன்களை பதப்படுத்துவோர் பாதிப்புக்கு ஆளாகின்றனர். பருத்தி, சிமென்ட் ஆலைகளில் வேலை பார்ப்போரும், சிலசமயங்களில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். தொழிற்சாலைகள் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தால், ஆஸ்துமாவை எளிதாக கட்டுப்படுத்தலாம். இந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், அவ்வப்போது உடலில் ஏற்படும் சிறு உபாதைகளுக்கு டாக்டரிடம் சென்று, சிகிச்சை எடுத்துக் கொண்டாலே போதும். தொழில் ரீதியான பாதிப்பை தவிர்க்கலாம்.
எனது வயது 40. சில நாட்களாக இருமல் இருந்தது. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் 'நெறிகட்டி' என்று கூறினர். பின், 'பிராங்கோஸ்கோபி' செய்து பார்த்தபோது, 'சார்கோய்டஸிஸ்' என்றனர். அப்படி என்றால் என்ன?
சார்கோய்டஸிஸ் (Sarcoidosis) என்பது உடலில் உள்ள பலவகையான செல்களிலும் ஏற்படக் கூடிய ஒரு நோய்.
இந்நோயால் நுரையீரல், கண், தோல், கல்லீரல், நிணநீர் நாளங்கள் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்நோய்க்கு காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. சில சமயங்களில் சிலிகா, போட்டோகாபி டஸ்ட், பூச்சிகள், இரும்பு, தூசி போன்றவையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், இது உறுதி செய்யப்படவில்லை. இந்நோய் பல நிலைகளில் காணப்படுகின்றன. நிலை 1, நிலை 2 ல், மருந்துகள் தேவையில்லை. நிலை 3 ல், ஸ்டீராய்டு, இம்யூன் மாடுலேட்டர்ஸ் போன்ற மருந்துகள் தேவைப்படலாம்.
- டாக்டர் எம். பழனியப்பன்,
மதுரை. 94425-24147