PUBLISHED ON : ஜூன் 23, 2013
எனது சிறுவயதில் பல பற்களில் உலோக நிறத்தில் ஸ்டீல் போன்று பல் அடைக்கப்பட்டது. பேசும்போதும், சிரிக்கும்போதும் இவை தனியாக தெரிகின்றன. இவற்றை, பல் கலரில் மாற்ற முடியுமா?
உங்களுக்கு பல் அடைப்பதற்கு பயன்படுத்தி இருப்பது 'அமால்கம்' எனப்படும் உலோகங்களின் கலவை. இது பல ஆண்டுகளாக பல்மருத்துவத்தில் பல் அடைக்கப் பயன்படுத்தும் ஒன்றுதான். இந்தக் கலவை பற்களின் மேல்படும் விசை, அழுத்தத்தை தாங்கி பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. இவை பார்ப்பதற்கு உலோக நிறத்தில் இருக்கும். எனவே செயற்கையாக தெரியும். இவற்றை தாராளமாக எந்த வலியும் இன்றி, பற்களின் நிறத்திலேயே மாற்றிக் கொள்ளலாம்.
இன்றைய பல்மருத்துவத்தில் 'காம்போசிட்' எனும் ரசாயன கலவை பல் அடைக்க பயன்படுகிறது. இது பற்களின் நிறத்திலேயே இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இவை பின்பற்களை அடைக்கும் அளவிற்கு வலுவானதாக இல்லை. முன்பற்களுக்கு மட்டும் இவை பயன்படுத்தப்பட்டன. இப்போதுள்ள நவீன முறைகளால், புதிய வகை காம்போசிட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை உலோக கலவை போலவே, பின்பற்களின் அழுத்தத்தை தாங்கக் கூடியவை. ஆனால் இவற்றை மிகக் கவனமாக கையாள வேண்டும். காம்போசிட் வைத்து பல் அடைக்கும்போது, துளியளவுகூட தண்ணீரோ, எச்சிலோ அதன்மீது படக்கூடாது. இல்லாவிட்டால் அதன் பலம் வெகுவாக குறைந்துவிடும். சரியான முறையில் காம்போசிட் கலவை கொண்டு பற்களை அடைத்தால், உலோக நிறத்தில் உள்ள பற்களை இயற்கை பற்கள் போலவே மாற்றலாம்.
எனக்கு அடிக்கடி பல்குச்சி உபயோகிக்கும் பழக்கம் உள்ளது. இதுசரிதானா? இதனால் பற்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா? பல் இடுக்குகளை சுத்தம் செய்ய வேறு ஏதேனும் வழி உள்ளதா?
பல்குச்சி உபயோகிப்பது நம்மில் பலரும் சாதாரணமாக செய்வதாகும். இதனால் பற்களுக்கு பலவகைகளில் பிரச்னைகள் வரும். பற்களின் இடையே மாட்டும் உணவை சுத்தம் செய்ய, பல்குச்சி பயன்படுத்தும்போது, இந்த இடைவெளி அதிகமாகும். இதனால் பல் இடுக்குகளில் உணவு மாட்டுவது அதிகரிக்கும். அதேபோல பல்குச்சி கவனக்குறைவால் ஈறுகளில் குத்திவிட்டால் ஈறுகளில் புண் அல்லது கட்டி வரும் அபாயம் உள்ளது.
எனவே முடிந்த அளவு பல்குச்சி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். பற்களின் இடுக்குகளை சுத்தம் செய்வதற்கென்று பிரத்யேக சாதனங்கள் உள்ளன. 'டென்டல் பிளாஸ்' எனப்படும் நூல் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது இடைவெளியை அதிகரிக்காமல் சுத்தம் மட்டும் செய்யும். அந்த இடங்களை சுத்தம் செய்வதற்கென தனி வகை பிரஷ்கள் கூட உள்ளன. இதற்கு இன்டர் டென்டல் பிரஷ் என்று பெயர். 0.4ல் இருந்து 1.3 மி.மீ.,வரை பல நீளங்களில் கிடைக்கும். அவரவருக்கு இருக்கும் இடைவெளிக்கு ஏற்ப பிரஷ்ஷை தேர்வு செய்து பற்களின் நடுவில் முன்னும், பின்னுமாக சுத்தம் செய்ய வேண்டும். சாப்பிட்ட பின்னர் அல்லது உறங்கப் போகும் முன் அவற்றை பயன்படுத்தலாம். ஈறுகள் கீழே இறங்கி உள்ள பற்கள் மற்றும் கோணலான பற்களை இந்த பிரஷ்கள் மூலம் மட்டுமே முழுமையாக சுத்தம் செய்ய முடியும். சரியான சாதனங்களை பயன்படுத்தினால் பற்கள் மற்றும் ஈறுகளை நீண்ட காலம் ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441-54551