PUBLISHED ON : ஜூலை 28, 2013

உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் என, இன்றைய இளம் தலைமுறையினரை இம்சிக்கும் நோய்களின் வரிசையில், முதுகு மற்றும் கழுத்து வலி பிரச்னையும் சேர்ந்துள்ளது. இன்றைய இளைஞர்களில், சராசரியாக, நான்கில் ஒருவர், இந்த வலிகளை
அனுபவித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முதுகு மற்றும் கழுத்து வலிக்கான காரணங்கள், தவிர்க்கும் முறைகள் குறித்து விளக்குகிறார், மலர் மருத்துவமனை, நரம்பியல் சிகிச்சை நிபுணர் சவுண்டப்பன்.
முக்கிய காரணங்கள்: இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, பணிநிமித்தமாக தினமும், இருசக்கர வாகனங்களில் மேற்கொள்ளப்படும் நீண்ட தூர பயணம், 'டிவி' மற்றும் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது போன்றவை, முதுகு வலி மற்றும் கழுத்து வலிக்கு முக்கிய காரணங்கள். இவற்றால், முதுகு தண்டு மற்றும் கழுத்துப் பகுதியில், நீர்ச் சத்து குறைந்து, அப்பகுதிகளில் உள்ள சவ்வு தேய்மானம் அடைந்து, நாளடைவில் விலகவும் செய்கிறது.
உடற்பயிற்சி அவசியம்: இதனால் முதுகுதண்டு வழியாக, உடல் உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தத்தால், முதுகுவலி, கழுத்துவலி உண்டாகிறது. மேலும், கை, கால் போன்ற இடங்களிலும், 'ஷாக்' அடிப்பது போல, வலி ஏற்படுகிறது. இந்த பாதிப்பு தீவிரம்அடைந்தால், கட்டுப்பாடற்ற சிறுநீர், மலம் கழிக்கும் நிலைக்கு உடல்நிலை தள்ளப்படுகிறது.
உடம்பில் சூரிய ஒளி படும்படி, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன், பணிநிமித்தம் அதிக தூரம் வாகன பயணம் மேற்கொள்வோர், நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணிபுரிவோர் போன்றவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி, பிரத்யேக உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், முதுகுத்தண்டு பாதிப்பிற்கு ஆளாகாமல் இருக்கலாம்.
தண்டு வட அறுவை சிகிச்சை: முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஆளாவோர், வலியின் தாக்கத்தை பொறுத்து, பிசியோதெரபி சிகிச்சை முதல் நவீன தண்டுவட அறுவை சிகிச்சை வரை பெற்று, இவ்வலிகளில் இருந்து விடுபடலாம். எப்போதும், முதுகு நிமிர்ந்தபடி நேராக உட்காருவது, அலுவலக பணியாளர்கள் தங்கள் இருக்கைக்கு, 15, 'டிகிரி' சாய்வில், கம்ப்யூட்டரை பார்க்கும்படி அமர்வது, மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவோர், பணிக்கு இடையே, அவ்வப்போது சில நிமிடங்கள் நடப்பது, குண்டும் குழியுமான சாலையில், வாகன பயணம் மேற்கொள்வதை முடிந்தவரை தவிர்ப்பது போன்ற, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், முதுகு மற்றும் கழுத்து வலி வராமல் தடுக்கலாம்.
டாக்டர் சவுண்டப்பன்,
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்,
மலர் மருத்துவமனை, சென்னை.