உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்!
உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்!
PUBLISHED ON : ஏப் 11, 2021

பெண் குழந்தைகள் சராசரியாக, 11 வயதிலும்; ஆண் குழந்தைகள், 12 வயதிலும் வயதுக்கு வருவர். எல்லா குழந்தைகளுக்கும் இது பொருந்தும் என்று பொதுப்படையாக சொல்ல முடியாது.
வயதுக்கு வருவதற்கு நான்கு ஆண்டுகள் முன்பிருந்தே, குழந்தைகளின் உடலில் மெதுவாக, அதே சமயம் சீரான மாற்றங்கள் நடக்கும். 200 ஆண்டுகளுக்கு முன், 14 ஆக இருந்த சராசரி வயது, மெதுவாக குறைந்து, தற்போது, 11 ஆகியிருக்கிறது.
இதற்கு பல காரணிகள் இருந்தாலும், மிக முக்கியமான சில காரணிகள்:
மரபியல் காரணம்: குறிப்பிட்ட குடும்பத்தில் முப்பாட்டி, பாட்டி, அம்மா எந்த வயதில் வயதிற்கு வந்திருந்தனரோ, அதே வயதில் தான் அடுத்த தலைமுறையும் வரும்.
பூகோள அமைப்பு: எந்த ஊரில், எந்த இனத்தில், எந்த சூழலில் பிறக்கிறோம் என்பதை பொருத்தும் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று ஒவ்வொரு கண்டத்திலும், வயதிற்கு வரும் சராசரி வயது மாறுபடுகிறது.
ஊட்டச்சத்து, உடற்பயிற்சி: பிறந்தது முதலே சத்தான உணவு, உடற்பயிற்சி செய்யாமல், உடல் பருமனுடன் இருப்பது.
சமூக, பொருளாதார நிலை: சமூக, பொருளாதார நிலை பொதுவாகவே எல்லா தரப்பு மக்களிடமும் அதிகரித்து உள்ளது. சராசரி வயது, 11 என்று சொன்னாலும், சமீப ஆண்டுகளில், 8 - 10 வயதிற்குள், பருவம் அடைவது அதிகரித்து இருக்கிறது. சராசரி வயதிற்கு முன்பே வயதிற்கு வருவதில் பிரச்னை எதுவும் இல்லை.
உடல்ரீதியில் பிரச்னை இருந்தால், பெண் குழந்தைகள், 8 வயதிற்கு முன்; ஆண் குழந்தைகள், 9 வயதிற்கு முன், பருவம் அடைவது நடக்கும்.
என்ன காரணம்?
மூளைக்கும், கரு குழாய்க்கும் இடையில் ஹார்மோன் சுரப்பால் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. இந்த தொடர்பு எப்போது முழுமையாகிறதோ, அப்போது குழந்தை பருவம் அடையும். பெண் குழந்தைகளுக்கு, 6 - 9 வயதிற்குள் இந்த தொடர்பு ஏற்பட துவங்கும். உயரம் கூடுவது, மார்பகங்கள் பெரிதாவது, பிறப்புறுப்பில் ரோமம் வளர்வது போன்ற உடலளவில் பல மாற்றங்கள் ஏற்படும்; அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வயதிற்கு வந்து விடுவர்.
இதற்கு, உடல், மன அளவில் குழந்தையை தயார் செய்வது முக்கியம். பள்ளியில் இருக்கும் நேரங்களில் மாதவிடாய் வந்தால் என்ன செய்ய வேண்டும், நாப்கினை பயன்படுத்த வேண்டிய முறை, சுய சுகாதாரத்தின் அவசியத்தை கற்றுத் தர வேண்டும். இதற்கு, பெண் குழந்தையின் உடலில் ஏற்படும் மாற்றம் பற்றி தாய்க்கு தெரிந்திருக்க வேண்டும்.
எட்டு வயதிற்கு முன் ஏன்?
ஹார்மோன் 'ஈஸ்ட்ரோஜன்' அதிக அளவில் சுரப்பது. மூளையில் கட்டி, தலையில் அடிபடுவது, தொற்று ஏற்படுவது, தலையில் நீர் கோர்த்து தலை பெரிதாக இருப்பது, அட்ரினலின் சுரப்பி அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது, தைராய்டு கோளாறு, கருக் குழாயில் கட்டி போன்றவற்றால், கருப்பை, கருக் குழாய் துாண்டப்பட்டு, மூளைக்கும், கருக் குழாய்க்கும் உள்ள தொடர்பு, குறிப்பிட்ட வயதிற்கு முன்பே ஏற்பட்டு விடுகிறது.
ஆறு வயது குழந்தைக்கு, வயதிற்கு மீறிய மார்பக வளர்ச்சி ஏற்பட்டால், உடன் படிக்கும் குழந்தைகளை விட பெரிய பெண்ணாக தெரிவதால், கேலி, கிண்டலுக்கு ஆளாகி, மனதளவில் பாதிப்பு ஏற்படலாம். இது இயல்பான விஷயம் என்பதை முதலில் பெற்றோர் புரிந்து, குழந்தைக்கும் சொல்ல வேண்டும்.
ஐந்து, ஆறு வயதிலேயே வயதிற்கு வருவதற்கான மாற்றங்கள் உடலில் தெரிந்தால், ஹார்மோன் ஊசி மூலம், வளர்ச்சியை தற்காலிகமாக தாமதப்படுத்தி, குறிப்பிட்ட வயது வந்ததும், மருந்தை நிறுத்தி விட்டால், சரியான வயதில் வயதிற்கு வந்து விடுவர்.
எட்டு வயதில் இருக்கும் உடல் எடை, வயதிற்கு வரும் வயதை தீர்மானிக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. 30 கிலோ எடை இருக்க வேண்டிய இந்த வயதில், 40 கிலோ இருந்தால், 10 வயதிற்கு முன் வயதிற்கு வந்து விடுவாள்.
டாக்டர் மாதங்கி இராஜகோபாலன்
மகளிர் நல மருத்துவ ஆலோசகர்
ரெயின்போ மருத்துவமனை, சென்னை
044-4012 2444, 95000 64781
