தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பயம் எதுக்கு; தைரியமா இருங்க!

பயம் எதுக்கு; தைரியமா இருங்க!

பயம் எதுக்கு; தைரியமா இருங்க!


PUBLISHED ON : மே 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா குறித்த அச்சம் தவிர்ப்போம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆலோசனை

'கிடைத்த நேரத்தில், தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் சுய பரிசோதனை செய்து திறமைகளை மேம்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா குறித்து அச்சம் கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,' என, மனநல டாக்டர் மற்றும் ஆலோசகர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் தினமும், 50 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகிறது. கடந்த சில நாட்களாக, பொள்ளாச்சி நகரம், வடக்கு, தெற்கு, ஆனைமலை, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில், தினமும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம், இந்த எண்ணிக்கை, 230யை கடந்தது.

மேலும், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு, சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள், மக்களிடம் மன உளைச்சலையும், தேவையில்லாத அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாகிறது.

வீண் பயத்தை தவிர்த்து, மனசை 'ரிலாக்ஸ்' ஆக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என, மனநல டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மன நல டாக்டர் கிருத்திகா, மனநல ஆலோசகர் சிவா கூறியதாவது:

அச்சம் என்பது எந்தவொரு மாற்றங்களுக்கும் சாதாரண எதிர்வினையாகும். அச்சத்தினால் தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால், பயத்தை நமது வாழ்க்கையை கட்டுப்படுத்த அனுமதித்தால், நம்மால் எந்தவொரு ஆக்கப்பூர்வமான செயல்களையும் செய்ய முடியாது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதுடன், தேவையற்ற பதற்றமும் கொள்கின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கை கழுவுதல் போன்றவற்றை கடைபிடித்து சுகாதாரமாக இருப்பதுடன், தேவையற்ற நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா தொற்று குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஆனால், தேவையற்ற எதிர்மறையான தகவல்களை மனதுக்குள் கிரகிப்பதால், மனச்சோர்வு, மனபயம், துாக்கமின்மை போன்றவை ஏற்படும்.

தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி, தேவையான செய்திகளை மட்டும் பார்க்கவும்; நாள் முழுக்க கொரோனா சம்பந்தப்பட்ட செய்திகளை பார்த்து பதற்றப்பட வேண்டாம்.

தொலைபேசி மற்றும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் துாங்க ஆரம்பிக்கும் நேரமும்; எழும் நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். போதுமான நேரம் துாங்க வேண்டும்.

தினமும், அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளையும், காய்கறி, பழங்களை உண்ண வேண்டும்.

புகை பிடித்தல் மற்றும் மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். தினமும் குடும்ப உறுப்பினர்களுக்கு நேரத்தை ஒதுக்கவும் மற்றும் நண்பர்கள், உறவினர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசலாம்.

தோட்டக்கலை, ஓவியம், சமையல், செல்லப்பிராணிகள் வளர்ப்பது போன்ற, மனதுக்கு பிடித்த ஏதாவது ஒரு பொழுது போக்கில், வாரந்தோறும் சில மணி நேரம் செலவிட வேண்டும். மனதுக்கு ஊக்கமளிக்கும் புத்தங்களை படிக்கலாம்.

ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட, ஏதாவது ஒரு செயலை சிறப்பாய் செய்வது நன்று; நம்முடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பற்றி கவலைப்படுவதை காட்டிலும், கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களை பற்றி ஏதாவது செய்ய வேண்டும்.

கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பதை தவிர்த்து, நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள்.

மனம் அலைபாயாமல் இருப்பதற்கு, ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்கான முயற்சியை செய்து வெற்றி காணலாம்.

தற்போது கிடைத்துள்ள நேரத்தில், தங்களை சுய பரிசோதனை செய்து தவறான எண்ணங்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தவிர்த்து, நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us