கொரோனா தொற்றும் அபாயம் குழந்தைகள் பத்திரம்! வீட்டுக்கு வெளியே விடாதீங்க!
கொரோனா தொற்றும் அபாயம் குழந்தைகள் பத்திரம்! வீட்டுக்கு வெளியே விடாதீங்க!
PUBLISHED ON : மே 09, 2021

பெற்றோரே...உஷார்!கொரோனா முதல் அலை போல் அல்லாமல், தற்போதைய இரண்டாம் அலையில், குழந்தைகளும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவதாக,மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இதனால், குழந்தைகளை வெளியே விளையாட விடுவதை,தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்து, தமிழக சுகாதாரத்துறை சில புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 6ம் தேதி நிலவரப்படி, 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 46,527 குழந்தைகள், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்., 1ம் தேதிக்குள், 1,306 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஏப்., 1ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை மட்டும், 10 ஆயிரத்து 133 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு நாட்களில் மட்டும், 3,871 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அந்த புள்ளி விபரம் கூறுகிறது.
இதன் மூலமே குழந்தைகள் மத்தியில், தொற்று பரவலின் வேகத்தை நம்மால் உணர முடிகிறது.இதை உறுதிபடுத்துவது போல், கோவை ரேஸ்கோர்சில் உள்ள, மசானிக் குழந்தைகள் மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென, தனி வார்டு துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மசானிக் குழந்தைகள் மருத்துவமனை தலைமை மருத்துவர் கிருஷ்ணசாமியிடம் பேசினோம்.
''நீங்கள் கூறுவது உண்மைதான். தற்போதைய சூழலில், யாருக்கு பாதிப்பு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. தொற்று பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் இருந்தே, குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார் அவர்.
அறிகுறிகள் என்னென்ன டாக்டர்?
பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, தொண்டைவலி, காய்ச்சல், பொதுவான அறிகுறியாக உள்ளது. சிலருக்கு இருமல், மூச்சு திணறலும் ஏற்படுகிறது. ஒரு சில வளர்ந்த குழந்தைகளுக்கு கை, கால் வலியும் ஏற்படுகிறது.
இவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?
சிகிச்சையை பொறுத்தவரையில், மல்டிவிட்டமின் மருந்துகளும், பேரசிட்டமல் மட்டுமே வழங்கப்பட்டு, முழுமையான கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். சத்தான உணவு வழங்கப்படுகிறது. தனிமையில் குழந்தைகள் இருந்தால், அதுவே அவர்களின் பாதிப்பை அதிகப்படுத்தி விடும். இதனால், தாயை மட்டும் உடன் இருக்க அனுமதிக்கிறோம்.
குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதை தவிர்க்க, பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
இறப்பு வீடு, திருமண நிகழ்வுகள் போன்றவற்றுக்கு, குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.முடிந்த வரை வெளியிடங்களில் விளையாட அனுமதிப்பதை தவிர்க்கலாம். சத்தான உணவு, முட்டை, பால், தயிர், பருப்பு வகைள், பழங்கள், காய்கறி கொடுக்க வேண்டும்.
வெளியிடங்களுக்கு அதிகம் செல்ல வேண்டியுள்ள பெற்றோர், வீட்டில் குழந்தைகளிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. குழந்தைகளிடமோ, நம்மிடமோ சிறு அறிகுறி தென்பட்டாலும், உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
எல்லா குழந்தைகளையும் தொற்று பாதிக்கிறதா?
சர்க்கரை, இருதய பாதிப்பு, கிட்னி பாதிப்பு, ஆஸ்துமாபோன்ற பிற பாதிப்பு உள்ள குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இவர்களுக்கு சாதாரண குழந்தைகளை விட, பாதிப்புகள் அதிகம் இருக்கலாம். தற்போது, ஆக்சிஜன், வென்டிலேட்டர் தேவைப்படும் குழந்தைகள் பெரிதாக இல்லை எனினும், ஒரு சிலருக்கு இதுபோன்ற தேவை எழுகிறது என்பது உண்மை.
வீட்டில் இருந்தே குணப்படுத்த முடியுமா?
மருத்துவமனையை விட, டாக்டரின் அறிவுரையுடன் வீட்டில், தனியறையில் பத்திரமாக பார்த்துக்கொள்வதுதான் நல்லது. குழந்தையை கவனிக்கும் தாய்க்கும் பரவலாம். ஆகவே கவனம் தேவை. உணவு உண்ண மறுப்பது, கட்டுப்படாத காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
