PUBLISHED ON : செப் 18, 2016

மகிழ்ச்சி. 'கபாலி' திரைப்படத்தில் ரஜினி சொன்ன பின், இதை பலர் கொண்டாடி வருகின்றனர். நம்மிடையே மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது. அதை, நாம், முறையாக கையாள்கிறோமா என்பது, முக்கியமான கேள்வி. அப்படி இருந்தால் எல்லோரிடமும் புன்முறுவல் செய்து கொண்டிருப்போம்.
ஏதோ ஒன்றை இழந்தது போல், நமக்கு நாமே பேசி, மன உளைச்சலுடன் இருப்பதை, பலரின் வாழ்வில் காண முடிகிறது. குடும்ப பாரம், அலுவலகத்தில் கூடுதல் பணி, யாராவது ஒருவர் நம்மை பற்றி தவறாக பேசி விட்டால், அவர் மீது தொடர் கோபம் என்று, மனதில் போட்டு, குப்பை தொட்டியாக வைத்திருக்கிறோம்.
குப்பை தொட்டியில், குப்பை அகற்றாமல் வைக்கப்பட்டிருந்தால் என்னவாகும்? துர்நாற்றம் ஏற்பட்டு விடும் அல்லவா. அதுபோல் தான் நம் மனமும். மனம் எப்போதும், மகிழ்ச்சியை தான் எதிர்பார்க்கிறது. நம்மை பற்றி குறை சொல்ல, இந்த சமூகத்தில் யாராவது ஒருவர் காத்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கான முக்கிய பணி இதுதான். நம்மை பற்றி, அடுத்தவர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று. இது, அவர்களின் வளர்ச்சியை தடைபடுத்தி விடும் என்பது, அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.
குறிப்பிட்ட நபரிடம், நம்மை பற்றி குறை சொன்னால், அவருக்கு விசுவாசமாக இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். குறை சொல்வதை விட்டு விட்டு, நம்மை பற்றி சிந்தித்தால், வளர்ச்சிக்கு நல்லது. ஒருவர், உங்களை பாராட்டினாலும், குறை சொன்னாலும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள். பாராட்டும் போது பறப்பதும், குறை சொல்லும் போது சோர்வதும் என இருந்தாலும், நம்முடைய வளர்ச்சி வேகத்தடையாய் ஆங்காங்கே நிற்கும்.
மன உளைச்சலில் இருந்த ஒருவரிடம், மேலதிகாரி ஒருவர் கேட்டார், 'ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்' என்று. 'என்னைப் பற்றி அவர் தவறாக சொல்லி விட்டார்' என்று பதில் வந்தது.
மேலதிகாரி சொன்னார், 'ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனம். பாரத்தை இறக்கி வைத்து விடுங்கள். வாழ்வில் கிடைக்கக் கூடிய ஒவ்வொரு நொடியும் மிகவும் உன்னதமானது. அதை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சிந்தியுங்கள். உலகம் ஆயிரம் சொல்லும்; ஏனென்றால் நாக்குக்கு எலும்பு கிடையாது. உங்கள் வேலையை நீங்கள் ஆராதித்தால், குறை சொன்ன சமூகமே உங்களை பாராட்டும்' என்றார்.
உண்மை தான். யார் என்ன சொன்னால் என்ன? உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். அடுத்தவர்களை பற்றி நீங்கள் புறம் பேசியிருந்தால், உங்கள் மனமே உங்களை தண்டித்து விடும். அதற்கு தயவு செய்து இடம் கொடுத்து விடாதீர்கள். வீட்டுக்கு சென்றவுடன், செருப்பை கழற்றி வைப்பது போல், சுமந்துக் கொண்டிருக்கும் பாரத்தையும், வாசலிலேயே இறக்கி வைத்து விடுங்கள். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அடுத்தவர் பற்றி, உங்களிடம் யாராவது குறை கூற வந்தால், அதை தவிர்த்து விடுங்கள்.
ஒவ்வொருவருக்குள்ளும் சாதிக்கும் ஆற்றல் ஏராளமாக உள்ளது. இதை கண்டுபிடித்து, அதன் வழியில் பயணிக்கும் போது, இன்று கிடைக்காவிட்டாலும், என்றாவது ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும். ஏனென்றால், உண்மையான உழைப்புக்கு என்றும் தோல்வி இல்லை.
வரலாறு கற்றுக் கொடுக்கும் பாடம் இது தான். சந்தோஷமாக இருந்தால், எல்லோருக்கும் உங்களை பிடிக்கும். மகிழ்ச்சி இருந்தால், எந்த வேலைகளையும் இயல்பாக முடிக்க முடியும். அடுத்தவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். இந்த உலகத்தை கொண்டாடுங்கள்.
