PUBLISHED ON : செப் 18, 2016

பணம் சம்பாதிப்பதில் இருக்கும் அக்கறை, அதை முறையாக சேமிப்பதிலும் இருக்க வேண்டும். ஆனால், பணத்தை, குறுக்கு வழியில் இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில், பலர் முனைப்பு செலுத்துகின்றனர். குறுக்கு வழியில் சேர்க்கும் பணம், நிச்சயமாக நம்மை தூங்க விடாது. அலைபேசியில் ஏதாவது ஒரு அழைப்பு வந்தாலும், இதைப் பற்றி தான் விசாரிக்கப் போகிறார்களோ என்று, மன உளைச்சல் அதிகரிக்கும்.
நம்முடைய அறியாமையையும், பணத்தின் மீதான ஆசையையும் பயன்படுத்தி, ஏமாற்றும் செயல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
ஏமாற்றுவோர் இருக்கும் வரை ஏமாறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. நீங்கள் கொடுக்கும் பணம், குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாக்கி தருகிறோம் என்று பலர் களமிறங்கி உள்ளனர். இது நல்ல விஷயமாக இருக்கே என்று எண்ணி, எதையும் ஆராயாமல், பணத்தை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் கொடுக்கின்றனர். அவர்களும், சொன்ன தேதியில், பணத்தை இரட்டிப்பாக்கி தருகின்றனர். இது எப்படி சாத்தியம்? என்பது குறித்தெல்லாம் நாம் யோசிப்பதில்லை.
இரட்டிப்பு பணம் தரும் போது, அதில் கள்ள நோட்டுகள் இருக்கும் என்பது ஊரறிந்த விஷயம். இரட்டிப்பு பணம் சம்பாதிப்பவர்களுக்கும் இது தெரிந்திருக்கும் போது, ஏதாவது ஒரு வகையில் செலவழித்து விடலாம் என்று நினைக்கின்றனர் போலும். ஒரு வகையில் செலவு செய்யும் போது, கள்ள நோட்டுகளின் பரிமாற்றத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டால், கம்பி எண்ண வேண்டியது தான். இதுவரை நீங்கள் சேர்த்து வைக்கும் நல்ல பெயர், ஒரே நொடியில் அவப்பெயரை தேடி தந்து விடும்.
இவ்வளவு வருஷமா, கள்ள நோட்டுகளில் தான் இவர் வாழ்ந்து கொண்டிருந்தாரா? என்ற சமூகத்தின் பேச்சுக்கு ஆளாகி விடும். அடுத்தது, நம்முடைய அலைபேசிக்கு பலமுறை வந்து கொண்டிருக்கும் ஜாக்பாட் விளம்பரம். உங்களுடைய மொபைல் எண், பரிசுக் குலுக்கலில், 5 கோடி பரிசு பெற்றுள்ளது; சுய விபரம் தேவை என்றவுடன், கோடிக்கு ஆசைப்படுகின்றனர். சமீபத்தில், காங்கேயம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஏமாற்றப்பட்டார். இதுபோன்ற சம்பவங்களில், குற்றவாளிகளை கைது செய்வதும், தேடி வருவதும், போலீசாரின் நடவடிக்கையில் ஒன்றாக மாறி விட்டது.
மோசடி கும்பலிடம் நம்ப வேண்டாம் என, மத்திய, மாநில அரசுகள் எச்சரித்தாலும், கேட்கும் மனப்பான்மையில் பலர் இல்லை. நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும், இதுபோன்று தினம் வரும் செய்திகளை பார்த்தாலே, நாம் ஏமாறக் கூடாது என்ற சிந்தனை ஆழமாக பதிய வேண்டும்.
குறிப்பிட்ட காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கும் வகையில், வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும், பல சேமிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; இதை முறையாக பயன்படுத்தி கொள்ளலாம். உடனடியாக பணக்காரர் ஆக, திரைப்படத்தில் மட்டும் தான் முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மூன்று மணி நேர திரைப்படம் அல்லவே நமது வாழ்க்கை. குறைந்த விலையில் வீட்டு மனை தருகிறோம் என்று யாராவது சொன்னாலும், கொஞ்சம் கவனம் தேவை. என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று, இதிலும், ஆயிரம் முறை ஆராய வேண்டும். காலம் கடந்து, பணம் கைவிட்டு போனதே என்று வருந்துவதை விட, இருக்கும் பணத்தை வைத்து சந்தோஷமாக இருப்பது தானே சாமர்த்தியம். நமக்கு நாமே தீங்கை வரவழைத்து கொள்ளக் கூடாது. உணர்வுப் பூர்வமாக புரிந்துக் கொண்டால், மகிழ்ச்சியை தேடி எங்கும் சுற்றித்திரிய வேண்டியதில்லை.
