PUBLISHED ON : செப் 18, 2016

நீரின்றி அமையாது உலகு. எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை இது. இன்று, நீருக்கு தான் மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டு வருவதை, கண்கூடாக காண முடிகிறது. அடுத்த உலகப் போர் நடந்தால், அது நீருக்காகத் தான் இருக்கும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இன்றைக்கே இந்த நிலை என்றால், வருங்கால தலைமுறையினரை நினைத்தால், கவலை தரக்கூடியதாக உள்ளது.
நீராதாரங்களில் தொடரும் ஆக்கிரமிப்பு, வழித்தடங்கள் மறிப்பு உட்பட காரணங்களால், குளங்களுக்கு வரும் தண்ணீர் குறைந்து விட்டது. சுற்றுவட்டாரத்தில், நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. போர்வெல்லில் கூட, நீர் இல்லாமல் வறண்டு விட்டது. நிலத்தடி நீர், மக்களின் பொதுச்சொத்து என்கிற கருத்து, யாருக்கும் இல்லாமல் போனது. யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற மனப்பான்மையே எங்கும் நிலவுகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 30 ஆண்டுகளில், நிலத்தடி நீர் வற்றி, தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நிலத்தடி நீர், அள்ள, அள்ள குறையாத அமுத சுரபி அல்ல. வங்கியில் பணத்தை சேமித்து வைப்பது போலத்தான். சேமிப்பதை விட்டு விட்டு பணத்தை எடுத்துக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருப்பு இல்லை என்று தான் குறுஞ்செய்தி வரும்; அதை போலத் தான் நிலத்தடி நீரும்.
இயற்கை, மக்களுக்கு வழங்கும் நீரை, தொடர்ந்து சேமித்தால் தான், தேவைக்கு எடுத்துக் கொண்டே இருக்க முடியும். இப்பழக்கம் நம்மிடையே இல்லாமல் போனதால், நீரை பணம் கொடுத்து வாங்கி வருகிறோம். இதற்கு, வீட்டில் இருந்த நடவடிக்கையை துவக்க வேண்டும். வீடு கட்டும் போது, கட்டாயம் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். மழை பெய்யும் காலங்களில், இந்த அமைப்பு மூலம், நிலத்தடி நீர் மட்டம் பெருகும்.
வீடுகளில் மழை நீரைச் சேமிப்பது போல நிலங்களிலும் மழை நீரைச் சேமிக்க வேண்டும். நம் நிலத்தில் பெய்யும் மழை நீரை, நம் நிலத்திலேயே தங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக நிலத்தில் வேகத்தடைகளை உருவாக்க வேண்டும். அதாவது, மழை காலத்துக்கு முன்பாகவோ அல்லது ஒரு மழை பெய்த உடனேயோ, நம் நிலத்தை நன்றாக உழவு செய்து வைக்க வேண்டும். இப்படிச் செய்தால், பெய்யும் மழை நீர், நிலத்தில் உழுத மண்ணால் நன்கு உறிஞ்சப்பட்டு நிலத்தின் அடிமட்டம் வரை சென்று சேமிக்கப்படும்.
இன்று, தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள், மானாவாரி நிலங்களில் இப்படி உழவு போட்டு வைத்தாலே, நிலத்தடி நீர் மட்டத்தைக் கணிசமாக உயர்த்த முடியும் என்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள். ஆறுகளில் தடுப்பணை அமைப்பது போல, நிலங்களில் ஆங்காங்கே சமச்சீர் வரப்புகள் அமைக்க வேண்டும். இதன் மூலம். ஒரு குறிப்பிட்ட வயலில் பெய்யும் மழை நீர், அந்தப் பகுதியில் தேக்கி, மெதுவாக நிலத்துக்குள் இறங்கும். இப்படி வரப்புகளை ஒட்டி, இரண்டடி ஆழம், அரையடி அகலத்தில் நீளமாக வாய்க்கால்களையும் வெட்டி வைக்கலாம்.
வரப்புகளைத் தாண்டி வரும் மழை நீர், அந்த வாய்க்கால்களில் நிரம்பி, முழுவதுமாக பூமிக்குள் ஊடுருவும். மானாவாரி நிலங்களில் மரப்பயிர்களை சாகுபடி செய்பவர்கள், மழைக்காலத்துக்கு முன்பாக, ஒவ்வொரு மரத்தையும் சுற்றி வட்டப்பாத்தி எடுத்து வைக்க வேண்டும்.
நீரைச் சேமிப்பதைப் போலவே அதைச் சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்த வேண்டியது அவசியம். வாய்க்கால் வழி பாசனத்தை தவிர்த்து, சொட்டு நீர் பாசன முறைக்கு மாற வேண்டும்.
