புல், பூண்டுகளுக்கு கூட மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. அதிலும், வறண்ட நிலங்களில் வளரும் தும்பைக்கு, மருத்துவக் குணம் அதிகம். தும்பையில், ஸ்டீரால், ஆல்கலாய்டு, காளக்டோஸ், ஒலியனாவிக் அமிலம், பீட்டா சிட்டோஸ்டீரால் போன்ற வேதிப் பொருட்கள் கலந்துள்ளன.
அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும்; தும்பை இலை, தேள் கொடுக்கு இலையை அரைத்து தேய்த்தால், தேள் கடி விஷம் நீங்கும்.
தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து, கடுகு எண்ணெயில் கலந்து, காய்ச்சி வடித்து வைத்து, சொட்டு மருந்தாகக் காதுக்குள் விட்டால், காதில் சீழ் வடியும் பிரச்னை நீங்கும்.
தும்பை இலைச்சாறு 10 மி.லி,. எலுமிச்சை பழச்சாறு 10 மி.லி., வெங்காய சாறு 5 மி.லி., எண்ணெய் 5 மி.லி., கலந்து, காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்று உபாதைகள் நீங்கும்.
தும்பைப் பூவை, வெள்ளாட்டுப் பாலில் கலந்து, காய்ச்சி வடிகட்டி, பாலை மட்டும், காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து,
40 நாட்கள் சாப்பிட்டால், பெண்களுக்கான, கர்ப்பப்பை நோய்கள் குணமாகும்.
தும்பைப் பூவையும், ஒரு மிளகையும் அரைத்து, நெற்றியில் பற்றுப் போட தலைவலி, தலைபாரம், நீர் கோர்வை நீங்கும்.
பூச்சிக்கடி குணமாக, தும்பை இலையை அரைத்து, சிறிதளவு உண்டு, பூச்சிக் கடிபட்ட இடத்தில் தேய்த்தால் கடி குணமாகும்; அதனால் ஏற்பட்ட தடிப்பு, அரிப்பு மறையும். தும்பைச் சாறு 500 மி.லி., தேங்காய் எண்ணெய் 500 மி.லி., இரண்டையும் கலந்து, காய்ச்சி வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்தினால் வெட்டுக்காயம், ஆறாத புண் ஆறும்; தும்பைச் செடியை அரைத்து, தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசினால் தேமல் குணமாகும்.