PUBLISHED ON : செப் 16, 2012
நான் ரத்தக்கொதிப்புக்காக, 2 ஆண்டுகளாக 'Telmisartan' மாத்திரை எடுத்து வருகிறேன். இம்முறை டாக்டர் அதை நிறுத்திவிட்டு,'Olmesartan'மாத்திரை தந்தார். இதை தொடரலாமா? கே. ரத்தினபாண்டியன், சிவகங்கை
இந்த இரண்டு மாத்திரைகளுமே அகீஆ மருந்து வகையை சேர்ந்தவை. இவ்விரண்டுமே பக்கவிளைவின்றி, ரத்தக்கொதிப்பை நன்கு கட்டுப்படுத்தும் மாத்திரைகள்தான். இவற்றால் இதயத்திற்கும், பலவழிகளில் பலனுண்டு எனத் தெரியவந்துள்ளது.
'Telmisartan' ' மாத்திரையைவிட, 'Olmesartan' ' மாத்திரை ரத்தக்கொதிப்பை நன்கு கட்டுப்படுத்துகிறது. எனவே உங்கள் டாக்டர் ரத்தக்கொதிப்பை மேலும் குறைக்க, இந்த மாத்திரையை தந்திருக்கலாம். எனவே நீங்கள் தாராளமாக இம்மாத்திரையை தொடரலாம்.
சர்க்கரை நோயாளிக்கு ஸ்டென்ட் சிகிச்சையைவிட, பைபாஸ் சர்ஜரிதான் சிறந்ததா? பி.முத்துக்குமரன், மதுரை
இதயத்தில் உள்ள ரத்தநாள அடைப்பின் தீவிரம் 60 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் மருந்து, மாத்திரை சிகிச்சையே போதுமானது.
எந்த இடத்தில் அடைப்பு உள்ளது என்பதை பொறுத்தே ஸ்டென்ட் அல்லது பைபாஸ் சர்ஜரி சிகிச்சை முறைகள் அமைகிறதே தவிர, எத்தனை இடத்தில் என்பதை பொறுத்தல்ல. ஸ்டென்ட் சிகிச்சையை பொறுத்தவரை, அதிநவீன 'Medicated Stent'கள் தற்போது வந்துள்ளன. இவை பொருத்தப்பட்ட ரத்தக்குழாய்களில், மறுபடியும் அடைப்பு வரும் வாய்ப்பு மிகக் குறைந்த அளவே உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தக்குழாயின் அளவு, அடைப்பின் நீளம், எந்த இடத்தில் அடைப்பு என்ற 3 முக்கிய தன்மையைப் பொறுத்தே, சிகிச்சை முறை தீர்மானிக்கப் படுகிறது. சிறிய ரத்தநாளம், நீளமான அடைப்பு, 'லெப்ட்மெயின்'-ல் அடைப்பு போன்றவற்றுக்கு, இன்றும் பைபாஸ் சர்ஜரி சிகிச்சைதான் சிறந்தது. மற்ற அடைப்புகளுக்கு ஸ்டென்ட் சிகிச்சை முறை, பைபாஸ் சர்ஜரி அளவுக்கு சிறப்பானதாக உள்ளது. மேலும் ஒருவரது வயது, பொருளாதார நிலையை பொறுத்தும் சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது. ஸ்டென்ட் சிகிச்சையில், அடைப்பின் எண்ணிக்கைக்கு ஏற்ப, செலவு கூடும். ஆனால், பைபாஸ் சர்ஜரியில் எத்தனை அடைப்புக்கும், ஒரே செலவுதான்.
எனது வயது 46. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இல்லை. இதய நோயை தவிர்க்க, நான் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கம் பற்றிக் கூறுங்களேன்? பி.சண்முகசுந்தரம், பழநி
காலை 3 இட்லி அல்லது 3 எண்ணெய் இல்லாத தோசைகள் சிறப்பானது. மதிய உணவுக்கு காய்கறி, குறைவான சாதம் நல்லது. அதாவது காய்கறி அதிகம் இருக்கும் வகையில், உணவு தட்டையே திருப்பி வைத்து உண்ணும் வகையில், சாதம் குறைவாக இருக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவை அறவே தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு அளவை நன்கு குறைக்க வேண்டும். இரவு உணவுக்கு 3 எண்ணெய் இல்லாத சப்பாத்திகள் எடுப்பது நல்லது. காலையிலும், மாலையிலும் சர்க்கரை இல்லாமல், ஒரு கப் டீ அல்லது காபி அருந்தலாம். 'ஸ்நாக்ஸ்' அறவே கூடாது. பசித்தால் பழங்கள் உண்ணலாம். தினசரி ஐந்து வகை காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், ரத்தக் குழாய் நோய்களை பெருமளவு தவிர்க்கலாம்.
டாக்டர் விவேக்போஸ், மதுரை.