PUBLISHED ON : பிப் 24, 2015

மாற்றுத்திறனாளிகள், உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றனர்; காரணம், சொந்தத்திற்குள் திருமணம் நடப்பது தான்! அந்நியம், என்று நினைத்து நாம் மணம் முடிப்பது கூட, நேரடியான ரத்த உறவாக இல்லாமல் போகலாம்; ஆனால், ஒரே ஜாதிக்குள்தான், அதுவும் நடக்கிறது.ஜாதி என்பது, தலைமுறை தலைமுறையாக, ரத்த உறவுக்குள் மணம் முடித்து, உருவான ஒரு குழு என்கின்றனர், மரபணு ஆய்வாளர்கள்.
மரபணு மூலம் ஏற்படக்கூடிய, 3,000 வகையிலான நிரந்தர ஊனங்களோடு, சில வகையான மருத்துவ ஊனங்கள், தமிழகத்திலும், ஆந்திராவிலும் மட்டுமே இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம், சொல்கிறது. தசைநார் தேய்வு, உதடுகள் பிளவு, டவுன் சிண்ட்ரோம், சிக்கல் செல் அனீமியா, தலசீமியா, நீரிழிவு, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் மட்டுமல்லாமல், மருத்துவ ரீதியான கருக்கலைப்புகள் எல்லாம், (அதாவது கருவிலிருக்கும் குழந்தை குறைபாடுடையதாக இருந்தால், மருத்துவ சட்டப்படி கருக்கலைப்பு செய்வது) மரபணுக் குறைபாடுகளால் வரக் கூடியதே.இதயநோய், வருவதற்கு காரணமாக உள்ள நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை, மரபணு வழியாகவே வருகின்றன என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், பொதுவாக, 50 வயதிற்கு பின் வரக்கூடிய இதயநோய்கள், உறவு முறையில் திருமணம் செய்தோரின் குழந்தைகளுக்கு, 35, 40 வயதில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆணின் உயிரணுக்களும், பெண்ணின் கருமுட்டையும் இணையும் போது, இருவரின் மரபணுக்களும் இணைகின்றன. அதில், இருவரிடமும் இருக்கும், குறைபாடுள்ள மரபணுக்களும் இணைகின்றன. பொதுவாக குறைபாடுடைய அணுக்களே, ஆதிக்க குணம் கொண்டவை. இந்த குறைபாடுடைய அணுக்களே, மரபணுக் குறைபாடுகள், நிரந்தர ஊனங்கள், குணப்படுத்த இயலாத நோய்களை உருவாக்குகின்றன.
- அரவிந்த் ராமநாதன்,
மரபியல் ஆராய்ச்சி நிபுணர்.

