PUBLISHED ON : பிப் 24, 2015

தொட்டதற்கு எல்லாம் கோபப்படுகின்றனர்; கத்துகின்றனர். அவர்களிடம் எதை சொல்வது? தயக்கமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்று, சிலர் கூறுவதை கேட்டிருக்கிறோம். அந்த மாதிரி நடந்து கொள்வோரும், 'நான் ஏன் இப்படி இருக்கிறேன். என்ன மாற்று வழி' என்று தம்மையே நொந்து கொள்கின்றனர்.
உணர்வு மற்றும் உணர்ச்சி என்பது, அடிப்படையில் உடல் சார்ந்தது. உணர்ச்சியை உணரவும், அனுபவிக்கவும் அளவு உள்ளது. அது, ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபடும். அந்த அளவை வைத்து தான் ஒருவரை, 'தொட்டாச்சிணுங்கி' அல்லது 'எருமை மாட்டுத்தோல்' என்று கூறுகிறோம்.எங்கெங்கு, உரிமை இருக்கிறதோ, சலுகை எடுத்துக்கொள்ள முடியுமோ, அங்கெல்லாம் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டோடு வெளிப்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் தான், ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாட்டை, அலசி ஆராய வேண்டும். பொதுவாக, எரிச்சல்படுகிறோம் என்றால், அங்கு உரிமை அதிகம் என்று அர்த்தம்.
உரிமை உள்ள இடத்தில், நாசூக்காக, நாகரிகமாக, வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. சம்பந்தம் இல்லாத, மூன்றாவது நபரிடம்தான் நாகரிகத்தையும், நாசூக்கையும் காட்ட வேண்டும். அதை, உரிமை உள்ளோர் புரிந்து கொள்ளாமல், 'என்னை புண்படுத்திவிட்டான்' என்று, வெறுப்பை வளர்த்து கொள்கின்றனர். அவர்கள், நிலைமையை புரிந்து கொண்டு, தீர்வு காண வேண்டும். அப்போது தான், இணக்கம் மற்றும் நெருக்கம் எற்படும். யாரிடம் நமக்கு உரிமை இருக்கிறதோ, அவர்களை சரிசெய்ய வேண்டியது, நமது கடமையும் பொறுப்பும் கூட. அதை விட்டுவிட்டு, வெறுப்பை வளர்த்தால், அது இருவருக்குமே இழப்பாகவே முடியும். தொட்டால் சிணுங்குவதே உரிமையின் அடையாளம். அதை சீர்படுத்த வேண்டியது, உரிமை உள்ளவர்களின் கடமை.
- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்.

