PUBLISHED ON : மார் 06, 2016
பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே, நரைமுடி பிரச்னைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரை காரணமாக நரைமுடி வந்தால், ஒன்றும் செய்ய முடியாது. சிலருக்கு, முடிக்கு நிறமளிக்கும் மெலனின் என்ற சுரப்பிகளை உற்பத்தி செய்யும், மெலனோ சைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருப்பது, ஒரு காரணமாக இருக்கும்.
மெலனின் அளவு குறைந்தால், கூந்தல் நரைக்க துவங்கும். இத்தகைய நரைமுடி, 30 வயதுக்கு மேல்தான் ஏற்படும். தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழலில், சிறு வயதிலேயே முடி நரைக்க துவங்கி விடுகிறது. இத்தகைய நரைமுடிக்கு, நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. அவை அனைத்தும் வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடியவை.
நரைமுடியைப் போக்க, பிளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின், அதை குளிர வைத்து, முடியில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்காமல், முடியை நீரில் அலச வேண்டும்.
கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது, முடியை கருமையாக்கும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடி கருமையாகும்; அடர்த்தியாகும்.
கருமையை இழந்த முடிக்கு, மீண்டும் கருமையை கொடுப்பதற்கு, முளைக்கீரை சாற்றை முடியில் தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும்.
நெல்லிக்காய், முடியை கருமையாக்குவதில் மிகச்சிறந்த பொருள். நெல்லிக்காய் சாற்றில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து முடிக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் இழந்த கருமையை மீண்டும் பெறும். இத்தகைய சிகிச்சைகள் ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவானவையே.