PUBLISHED ON : அக் 23, 2016

அவசர, அவசரமாக எழுந்து, பணிக்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில், காலை உணவை தவிர்ப்பவர்கள் பலர். ஆனால், காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் என்பது மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என, இன்று காலை உணவை தவிர்ப்பது அதிகரித்து விட்டது. இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் குளுக்கோசின் அளவு குறைந்து விடும். இதை உடனடியாக திரும்ப பெற, காலை உணவு அவசியமாகிறது. காலை உணவை உட்கொண்டால், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும்.
ஒரு நாள் கலோரி தேவையை, கட்டுக்குள் வைத்திருக்கும். வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவை காலை உணவு தான் என்பது, ஆய்வில் தெரியவருகிறது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள், காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூளையின் செயல்பாடுகளுக்கு, பசி பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கு பதிலாக பிஸ்கெட்டும், பிரெட்டும் சாப்பிட்டு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, வகுப்பில் தூக்கம் வந்து விடுகிறது. குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளார்கள் என்றால், காலை உணவை தவிர்ப்பது முக்கிய காரணம்.
உற்சாகம் இருக்காமல், படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். படிப்பு ஒரு சுமையாக மாறக் கூடும். படித்தவற்றை நினைவுக்கு கொண்டு வருவது கடினம். குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவை அளிப்பதில், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இதனால், குழந்தைகளுக்கு, இரவு, 8:00 மணிக்குள்ளாகவே உணவு கொடுத்து விட வேண்டும்; அந்த உணவு, எளிதில் ஜீரணமாகக் கூடியதாக இருக்க வேண்டும்.
இரவு, 9:00 மணிக்கு தூங்க அனுமதிக்க வேண்டும். அப்போது, காலையில் விரைவாக எழுந்து விடுவர்.
