PUBLISHED ON : அக் 17, 2010

மல்லிகா அன்பழகன், கே.கே.நகர், சென்னை:
எனக்கு சிசேரியனில் குழந்தை பிறந்து, ஐந்து ஆண்டுகளாகின்றன. தையல் போட்ட இடத்தில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறது. என்ன காரணம், இதற்கு ஏதேனும் மருந்து உள்ளதா?
சில நேரங்களில் அறுவை சிகிச்சை அல்லது காயம் போன்றவைகளால் தோலில் ஏற்படும் தழும்பால் அரிப்பு ஏற்படலாம். இதனால், அப்பகுதியில் இளஞ்சிவப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் பொறுக்கு தட்டும். நீங்கள் முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், அரிப்பு ஏற்படும் போது, இந்தப் பகுதியை நீங்கள் சொறிந்து விடக் கூடாது என்பது தான். சொறியச் சொறிய, அப்பகுதியிலிருந்து ரசாயனம் வெளிப்பட்டு, அரிப்பு அதிகரிக்கும். எனவே, இரவில் ஸ்டிராய்டு க்ரீமையும், காலையில் குளித்த பிறகு பேபி ஆயிலையும் தடவுவதன் மூலம், அரிப்பை தவிர்க்கலாம். அப்படியும் சரியாகவில்லை என்றால், உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி, அவர் போடும் ஊசி மூலம் அரிப்பிலிருந்து விடுபடலாம்.
கே.மோகன பிரியா, குரோம்பேட்டை, சென்னை:
அதிக மனஅழுத்தத்தில் இருந்த போது தியானம் அல்லது ரிலாக்ஸ் செய்தால் கடுமையான தலைவலி உண்டானது. டாக்டரிடம் கேட்டதற்கு, தியானம் செய்ய வேண்டாம் என்றார். மன அழுத்தத்திலிருந்து விடுதலையான பிறகும், தியானம் அல்லது ரிலாக்ஸ் செய்யும் போது தலைவலி உருவாகிறது ஏன்? எப்போது அமைதியை கடைப்பிடிக்க வழி சொல்லுங்கள்...
யோகாவில் செய்யப்படும் ஒரு சில ஆசனங்களின் போது, கழுத்து எலும்பு மற்றும் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தினால், தலைவலி ஏற்படலாம். அல்லது தவறான உடற்பயிற்சியாலும் நிகழ வாய்ப்புண்டு. எனவே, யோகா ஆசிரியரை அணுகி, உங்களின் பிரச்னையை கூறுங்கள். அவர் நீங்கள் செய்யும் யோகாவில் தவறு இருந்தால் திருத்துவார் அல்லது தலைவலியை தவிர்க்கவும் உடற்பயிற்சி சொல்லித் தருவார். யோகா உங்களை அமைதிப்படுத்தும். எனினும், அதற்கு இணையாக, 40 நிமிட நேரம் தூய்மையான காற்றை சுவாசிக்கும் வகையில், ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங் அல்லது நீச்சல் மேற்கொள்ளலாம். இதன் மூலம் கெண்டைக்காலில் வெளியேற்றப்படும் என்டோர்பின் என்ற ரசாயனம், மனநிலையை மாற்றி மன அழுத்தத்தை குறைக்கும். இவ்விரண்டையும் செய்வதன் மூலம் அமைதி மற்றும் சந்தோஷம் ஏற்படும்.
எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம், சென்னை:
என் வயது 69. சர்க்கரை, ரத்த அழுத்தம் எதுவும் இல்லை. வலது கண் கருவிழியில் சிறு பூச்சி அமைந்திருப்பது போல் உணர்கிறேன். பார்க்க, படிக்க சிரமம் இல்லை என்றாலும், விழி அசையும் போது கூடவே பூச்சி ஒட்டி இருப்பது போன்ற உணர்வு உள்ளது. 'இது ஒரு சிலருக்கு வயதானால் வருவது தான்' என, டாக்டர் கூறி, கண் மருந்து கொடுத்துள்ளார். இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுமா?
நீங்கள் சென்னையில் வசிப்பதால், சங்கர நேத்ராலயா சென்று, உங்கள் பிரச்னையை கூறினால், அவர்கள், 'பண்டோஸ்கோபி' செய்து, மேலும் சில பரிசோதனைகளைச் செய்வர். கண் இமைகளின் ஒழுங்கற்ற வளர்ச்சி அல்லது கண்ணின் விழித்திரையில் பிரச்னை போன்ற சாதாரண காரணங்களாகவும் இருக்கலாம். நோய்க்கான காரணத்தை கண்டறிவதன் மூலம், அதை சரி செய்ய முடியும். வயது மூப்பு மேல் பழி போட்டு, சொட்டு மருந்து போட்டு குணப்படுத்திக் கொள்ளலாம் என்பது சரியல்ல.
எஸ்.முருகன், ஆவாரம்பாளையம்:
37 வயதான எனக்கு எக்கோ பரிசோதனை செய்ததில்,Mitral Valve Prolapse, Trivial M.R., என வந்துள்ளது. இதற்கு மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்?
Mitral Valve என்பது இதயத்தின் இடதுபுறம் மேலிருக்கும் ஆட்ரியத்திற்கும், கீழ் உள்ள வென்ட்ரிக்கிளுக்கும் நடுவில் உள்ள ஒரு வால்வு. சிலருக்கு பிறவியிலேயே இந்த வால்வின் இருகதவுகளும் நேராக மூடாமல், சற்று மடங்கி மூடும் ஒரு நிலையை Mitral Valve Prolapse என்பர். இதனால் பொதுவாக எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் சிலருக்கு அந்த வால்வில் ரத்தக்கசிவு ஏற்படும் தன்மை உள்ளது. அப்படி ரத்தக்கசிவு அதிகமாக இருந்தால் பிற்காலத்தில் அந்த வால்வுக்கு ஆபரேஷன் தேவைப்படும். உங்களுக்கு Trivial M.R., என்பது ரத்தக்கசிவு லேசாக உள்ளது என்று பொருள். இருந்தாலும் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை நீங்கள் எக்கோ பரிசோதனை செய்து பார்ப்பது சிறந்தது. உங்களுக்கு தற்போது மருந்து, மாத்திரை எதுவும் தேவைப்படாது.
ச.கண்ணன், கன்னிவாடி:
எனது மார்பு பகுதியில் சில சமயங்களில், 'சுருக், சுருக்'கென வலி ஏற்படுகிறது. பிறகு அதுவே சரியாகி விடுகிறது. இது இதய வலியின் அறிகுறியா?
மார்பு பகுதியில் சுருக், சுருக்கென வலி ஏற்பட்டால் அது இதயவலியாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவே. ஏனெனில் இதயவலி பொதுவாக நெஞ்சில் அழுத்தமாகவும், பாரமாகவும் இருக்கும். இருந்தாலும் இந்த வலி இதயவலி அல்ல என்பதை உறுதிப்படுத்த எக்கோ பரிசோதனை, டிரெட் மில் பரிசோதனை அவசியம். இந்த இரண்டு பரிசோதனைகளிலும் முடிவு நார்மலாக வந்தால், இது இதயவலி இல்லை என்று பொருள். இதற்கு சாதாரண தசைவலி மாத்திரையை எடுத்தாலே போதுமானது.
கே.ராமநாதன், கோவை:
எனது மகளுக்கு 12 வயதாகிறது. இதயத்தில் எக்கோ பரிசோதனை செய்து பார்த்ததில், 'A.S.D.,' உள்ளதாக வந்துள்ளது. இதற்கு என்ன சிகிச்சை முறை உள்ளது?
Atrial Septal Defect (A.S.D.,) என்பது, இதயத்தில் உள்ள மேல் 2 பாகங்களுக்கு இடையே உள்ள ஒரு ஓட்டையை குறிப்பதாகும். இது பிறவியில் இருந்தே ஏற்படும் நோய். இதற்கு தற்போதுள்ள மருத்துவ தொழில்நுட்பத்தில் எளிதில் ஆபரேஷன் இன்றி சரிசெய்ய முடியும். காலில் ஒரு சிறிய துவாரமிட்டு, ஒரு சிறிய குழாயை செலுத்தி A.S.D., Closure Device என்ற உபகரணத்தை எடுத்து அந்த ஓட்டையை எளிதில் மூடிவிடலாம். இதற்கு மயக்க மருந்தும் தேவையில்லை; உடம்பில் தழும்பும் ஏற்படுவதில்லை.
கே.சேகரன், சிவகங்கை:
பை-பாஸ் சர்ஜரி செய்தவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியுமா?
இதய ரத்தநாளங்களில் உள்ள அடைப்பை சரி செய்யும் ஆபரேஷன் பை-பாஸ் சர்ஜரி. இதில் நெஞ்சில் இருந்தோ, கையில் இருந்தோ, காலில் இருந்தோ, ரத்தநாளங்களை எடுத்து இதயத்தில் பொருத்தப்படுகிறது. பொதுவாக இந்த சிகிச்சை எடுப்பதற்கு ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியாக வேண்டும். பின் வீட்டுக்குச் சென்று ஆறு வாரங்களாவது ஓய்வு எடுப்பது நல்லது. பை-பாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதங்களுக்கு பிறகு பொதுவாக ரத்தம், நீர், மார்பு எக்ஸ்-ரே, எக்கோ பரிசோதனை, டிரெட் மில் பரிசோதனைகளை செய்ய வேண்டும். இவற்றின் முடிவுகள் அனைத்தும் நார்மலாக இருந்தால் இயல்பான வாழ்க்கையை மீண்டும் துவங்கலாம்.
உடலளவிலும், மனதளவிலும் பதட்டம் இன்றி, அனைத்து வேலைகளையும் எளிதாக செய்ய முடியும். தாம்பத்திய வாழ்க்கையை பொறுத்தவரை இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இருந்தாலும் சில இதய, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு மாத்திரைகளால் ஆண்மை குறைவு ஏற்படலாம். இதற்கு உங்கள் இதய டாக்டரிடம் கலந்து ஆலோசனை பெற்று, மாத்திரையை மாற்றி அமைத்து, எளிதில் சரி செய்ய முடியும்.
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.

