sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 12, 2026 ,மார்கழி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

மூளை செயல்திறன் குறைபாடு வளரும் நோய் அல்ல!

/

மூளை செயல்திறன் குறைபாடு வளரும் நோய் அல்ல!

மூளை செயல்திறன் குறைபாடு வளரும் நோய் அல்ல!

மூளை செயல்திறன் குறைபாடு வளரும் நோய் அல்ல!


PUBLISHED ON : அக் 17, 2010

Google News

PUBLISHED ON : அக் 17, 2010


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சில குழந்தைகள் அசாதாரணமாகத் தோற்றமளிப்பர். அவர்கள் கால் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும். கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர்.

நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் அவர்கள் பேசவோ, அமரவோ மாட்டர். இந்த பாதிப்பை, 'மூளை செயல்திறன் குறைபாடு' என்று அழைக்கிறோம். ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடும் சீராக இருக்காது என்பதால், இவர்களை கவனமாகக் கையாள வேண்டும். பார்வைக் குறைபாடு, காதுகேளா நிலையும் இவர்களிடையே காணப்படும்.

தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன. மூளை வளர்ச்சி குறைவதற்கு, முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவர்கள் மீது பழி போடப்பட்டது. கரு பாதுகாப்பில் குறைபாடு, சந்தேகமான அறிகுறிகளைக் கண்டறிவதில் தோல்வி, குழந்தை பிறப்பதில் சிக்கல், மூச்சுத் திணறல், குழந்தை பிறந்ததும் அதை உயிர்பித்தலில் குறைபாடு ஆகியவையே காரணம் என, கருதப்பட்டது. இந்த கருத்துக்கள் அனைத்தும் தற்போது பழங்கதையாகி விட்டன. மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு கூட, மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் பிறப்பு எண்ணிக்கை குறையவில்லை. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர், பிறப்பிலேயே மூச்சுத் திணறலால் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக, மருத்துவக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.

அம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால், குணப்படுத்த முடியாது. எனினும், வருமுன் காக்கலாம். குழந்தையாக இருக்கும்போதே, எம்.எம்.ஆர்., ஊசி போடுவது அல்லது தனியாக ருபெல்லா நோய் எதிர்ப்பு ஊசி போடுவதோ மேற்கொள்ளலாம். மகளுக்கு திருமண ஏற்பாடு செய்வதற்கு முன், இது போன்ற தடுப்பூசிகளை, அவளுக்குப் போட வேண்டும் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்வதில்லை.

தாய்க்கும், சேய்க்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் போகும்போது, குழந்தையின் ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்து, மஞ்சள் காமாலை உருவாகும். இதை கண்டறியாமல், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், மூளை பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு விடும்.

பிறக்கும்போது சாதாரண நிலையில் உள்ள குழந்தை, பின் மூளையில் ரத்தக்கசிவோ, தொற்றோ, மூளையின் மேற்புறத்தில் தொற்றோ ஏற்பட்டால், மூளை செயல்திறன் குறைபாடு உருவாகும்.

மூளை செயல்திறன் குறைபாட்டின் பிரதான தாக்குதலுக்கு உள்ளாவது, மத்திய நரம்பு மண்டலம் தான். மூளை கொடுக்கும் உத்தரவுகளை, தசைகள் செயல்படுத்தாது. தசைகள் தானாகவே விரைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது இயக்கமே இல்லாமல் கிடக்கும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் தன்மை கொண்டதல்ல. இந்தத் தன்மையின் காரணமாக, குழந்தை வளரும் போது, நோயும் வளரும் என்ற நிலை ஏற்படாது. தசை செயல் திறன் இழப்பு போன்ற, வளரும் தன்மை கொண்ட நோய்களிலிருந்து, இதை எளிதில் வித்தியாசம் காணலாம்.

மூளை செயல்திறன் குறைபாடு, பல வகைகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காணப்படுவது, தசை இறுக்க நோய். தசைகள் இறுக்கமாக, விரைப்பாகக் காணப்படும். இதனால் கால், கைகளை வளைப்பது கடினம். உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம்; கால்கள் மட்டுமோ, கைகள் மட்டுமோ அல்லது கால், கை மட்டுமோ பாதிக்கப்படலாம். குழந்தைக்குத் துணி மாற்றும் போது, தாய் இதை கண்டுபிடிக்கலாம்.

விரைத்த காலை மடக்க முடியாமல் போவது தான் இதன் அறிகுறி. தவழும் போது, காலுக்கு விசை கொடுக்காமல், அதை இழுத்து இழுத்து தவழ்வதும் ஒரு அறிகுறி. நடக்க துவங்கும் போது, கால் பின்னிக் கொண்டு, சீரான நடை இல்லாமல் போகும்.

இதில் இன்னொரு வகை, தசைகளின் வளர்ச்சி குறையும். இதனால், குழந்தையின் தலை, 'லொடலொட'வென ஆடிக் கொண்டே இருக்கும். தலை சீராக நிற்க வேண்டிய மாதத்தில் நிற்காது. தலை சாய்ந்த நிலையிலேயே இருக்கும். இதனால், குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டிருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்தபடி இருக்கும். பேச்சும் சீராக இருக்காது; 'வழவழ' உச்சரிப்பில் இருக்கும். சொல்லின் வடிவம் மாறும். மூன்றாவது வகையில், உடலின் இயக்கம் நடுக்கத்துடன் காணப்படும். எனவே, எந்த வகை பாதிப்பு என்பதை, நுணுக்கமாகக் கவனித்துக் கண்டறிய வேண்டும். 3 வயது நிரம்பியதும், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இதைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும்.

பார்வைத் திறன், செவித்திறனையும் ஆராய வேண்டும். மயக்கம் ஏற்பட்டால், இ.இ.ஜி., (எலக்ட்ரோ என்செபலோகிராம்) எடுத்து பார்க்க வேண்டும். இதில் ஏதும் தெரியவில்லை எனில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும்.

மூளை செயல்திறன் குறைபாடு கொண்டவர்கள், தாமதச் செயல்பாடு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால், அவர்கள் திறமையை மேம்படுத்த, பல்திறன் மேம்பாட்டு அணுகுமுறை தேவை.

* உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை பராமரிக்கவும், மூச்சு திணறல், நுரையீரல் பிரச்னை, வலிப்பு ஆகியவற்றின் கடுமையைக் குறைப்பதற்காகவும், நிரந்தரமாக குழந்தை நல மருத்துவரை பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்.

* எலும்பு முறிவு, எலும்பு அழற்சி ஆகியவற்றைக் கையாள, எலும்பு சிகிச்சை மருத்துவர் தேவை.

* தசை பலம் குறைவதால், அடிக்கடி கீழே விழும் நிலை ஏற்படும். அதைத் தவிர்க்க, உடல் இயக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) தேவை.

* சுய பாதுகாப்புத் திறனை வளர்க்க, பணி மேம்பாட்டு நிபுணர் தேவை.

மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள், அறிவுத் திறனில் சிறந்தவர்களாகவே உள்ளனர். கல்வியில் முழுமையாக ஈடுபட்டு, சிறப்புப் பணி தகுதிகள் பெற்று, கை நிறைய சம்பாதிக்கும் திறனுடன் திகழலாம். அவர்களுக்கு முக்கிய தேவை, மற்றவர்களின் உதவி, பெற்றோரின் ஊக்குவிப்பு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் அதிசயங்களால் கிடைக்கப் பெறும் உதவிகள் தான்!






      Dinamalar
      Follow us