sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

/

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?


PUBLISHED ON : அக் 17, 2010

Google News

PUBLISHED ON : அக் 17, 2010


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 - 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?

இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா.

மாரடைப்பு என்றால் என்ன?

ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.

சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது.  இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.

இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து  (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது.  இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.

கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் - புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய்.

கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் - வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை.

இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்?

 மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.

சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு 'அமைதியான மாரடைப்பு' என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்: பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு 'ஆஞ்சைனா' என்று பெயர்.

நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.






      Dinamalar
      Follow us