PUBLISHED ON : அக் 01, 2017
இன்றைய வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் மரங்கள் இல்லாதது. வளர்ச்சிப்பணிகள் என்று, ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. இதனால், நிழல் தந்த பல மரங்கள், இயற்கை எய்தி விட்டன. மழை குறைவுக்கும் ஒரு காரணம் இது தான். மரங்களை வெட்டி விட்டு, மழை இல்லையே என்று குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.
சமூக ஆர்வலர்களின் தொடர் விழிப்புணர்வு, பலரது மனங்கள் மத்தியில், மரங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டிருக்கிறது. நல் உள்ளம் கொண்ட இயற்கை ஆர்வலர்களால், ஆங்காங்கே, வீடுகளிலும், தெருவோரங்களிலும் மரக்கன்றுகளை கொஞ்சமாவது பார்க்க முடிகிறது.
கான்கிரீட் வீடுகளாலும், அவற்றில் இருந்து வெளியேறும் வேதியல் கூறுகளாலும், மரங்களை அழித்ததாலும், காற்று வெப்பமடைந்து வருகிறது. பற்றாக்குறைக்கு, வாகனங்களின் புகையால் காற்றின் வெப்பம் அதிகரிக்கிறது. அதிகப்படியான மின் விளக்குகளாலும் வெப்பம் அதிகரிக்கிறது. காற்றில் உள்ள வெப்பத்தையும், மாசுவையும் குறைக்கும் குணமுள்ளது புங்கை.
அதேபோல், இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றை சுலபமாக, மாசுவில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணிக்கும் திறன் கொண்டது. மரம், அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புறஊதாக்கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. நல்ல சுத்தமான காற்றை கொடுக்கக் கூடியது.
வீட்டுக்கு உள்ளே செல்லக் கூடிய நச்சு கிருமிகளை தடுக்க கூடியது. புங்கை மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது. புங்கை விதைகளை பயன்படுத்தி மூட்டு வலி, தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.
புங்கன் மரத்து விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதைப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இதை தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம். புங்கை மரத்தின் இலைகள், நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கக் கூடியது. இதன் விதைகள், எண்ணெய் நிறைந்ததாக இருக்கிறது. இது, ஆஸ்துமா, நெஞ்சுக் கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்க காய்களை சேர்த்து பயன்படுத்தலாம். புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சோரியாஸிஸ்சுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது.
புங்கன் எண்ணெய், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புங்கை இலையை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். இலைகளை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவலாம். நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சு சளி, இருமல் குறைகிறது. தலையில் பொடுகு இருந்தால் இதை தடவி பத்து நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும்.
புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது. அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது. புங்கன் இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும்.
மரத்தின் வேர் கடினப் பாறைகளை, வீட்டு சுவர்களை துளையிடாமல், மண் பகுதிகளுக்குள்ளேயே சுற்றி சுற்றி செல்லும் திறன் கொண்டதால், வீடுகளின்
அஸ்திவாரங்களையோ, அல்லது சுவர்களையோ பாதிக்காது. அதனால், வீடுகளுக்கு அருகில் எங்கு வேண்டுமானாலும் இந்த மரத்தை நட்டு வளக்கலாம்.

