PUBLISHED ON : ஜூன் 09, 2013
* பி. கார்த்திக்குமார், மதுரை: எனது வயது 42. எனக்கு ரத்தஅழுத்தம் 150/100 என்ற அளவில் உள்ளது. நான் மருந்து வகைகளை எடுக்காமல், வாழ்வியல் முறை மாற்றங்கள் மூலம் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியுமா?
தற்போதைய நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த தருணத்திலும் ரத்தஅழுத்தம் 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவிலேயே இருந்தாக வேண்டும். உங்கள் வயதில், உங்களுக்கு இருப்பது உயர் ரத்த அழுத்தம்தான். எடையை குறைப்பது, உணவில் உப்பு, எண்ணெய், கொழுப்பு சத்துள்ள பொருட்களை நன்கு குறைப்பது, காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வது முக்கியம். இத்துடன் தினசரி நடைப்பயிற்சியும் அவசியம். இருப்பினும் உங்களுக்கு இருக்கும் ரத்தஅழுத்த அளவுக்கு, வாழ்வியல் மாற்றங்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது. அவசியம் மருந்து தேவைப்படும். தற்போது உயர் ரத்தஅழுத்தத்திற்கு பக்கவிளைவு இல்லாத சிறந்த மருந்துகள் உள்ளன. எனேவ உங்கள் டாக்டரிடம் ஆலோசனை செய்து, மருந்துகளை துவக்குவதே நல்லது.
* பி.ஜானகி, மதுரை: எனது கணவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்து சமீபத்தில்தான் வீடு திரும்பினோம். அவரை நலம் விசாரிக்க தினமும் உறவினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவரை பேச அனுமதிக்கலாமா?
பைபாஸ் சர்ஜரி என்பது, இருதயத்தின் ரத்தநாள அடைப்பை சரிசெய்ய, நெஞ்சில் இருந்தோ, கை, காலில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து, அடைப்பை சரிசெய்யும் சிகிச்சை. இதில் அறுவை சிகிச்சை முடிந்த 7வது நாள் வீடுதிரும்பிவிடலாம். இருப்பினும் நெஞ்சில் ஏற்பட்ட புண், காலில் ரத்தநாளம் எடுத்ததால் ஏற்பட்ட புண் ஆகியவை, நன்கு ஆறாமல் இருக்கும். புண் முழுவதுமாக ஆறுவதற்கு 6 வாரங்களாகும். முதல் 6 வாரங்கள் இந்த புண்களில் கிருமிகள் தொற்றாமல் பாதுகாப்பது அவசியம்.
எனவே வீட்டில் அவரை சுத்தமான அறையில் ஓய்வு எடுக்க வைப்பது முக்கியம். மேலும் சர்க்கரை நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரை அளவை, இன்சுலின் போட்டு குறைத்து, சரியான அளவில் வைத்திருப்பதும் அவசியம். முதல் 6 வாரங்கள் வரையில் உறவினர்கள் வருகையை கட்டுப்படுத்துவது நல்லதுதான். ஆனால் அவர் பேசுவதில் தவறில்லை.
* கே.ராஜசேகர், ராமநாதபுரம்: எனக்கு 3 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. இதற்காக, 'மெட்டபுரோலால்' என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தற்போது எனது டாக்டர், அந்த மாத்திரையை நிறுத்திவிட்டு, 'பிசாபுரோலால்'-5மி.கி., (ஆஐகுஅககீOஃOஃ) மாத்திரையைத் தந்துள்ளார். இதைத் தொடர்ந்து எடுக்கலாமா?
பிசாபுரோலால் என்பது 'பீட்டா பிளாக்கர்' வகையை சேர்ந்த மருந்து. இது இருதய துடிப்பை நன்கு குறைத்து, ரத்தக்கொதிப்பையும் கட்டுப்பாட்டில் வைக்கும் மிகநல்ல மருந்துதான். அதுமட்டுமின்றி, இருதய நோய் உள்ள சர்க்கரை நோயாளிக்கும், இருதய பாதிப்பு உள்ளவர்களுக்கும், இது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இதன் பக்கவிளைவும் குறைவே. எனவே நீங்கள் இம்மருந்தை தொடர்ந்து எடுக்கலாம்.
* கே.ராமநாதன், மானாமதுரை: எனக்கு சமீபத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது. நான் காபி, டீயில் சீனிக்குப் பதிலாக மாற்று சீனிவகைகளை பயன்படுத்தலாமா?
நாற்பது வயதாகி விட்டாலே அனைவரும் காபி, டீயில் சீனியை அறவே தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சீனியைப் பயன்படுத்தி காபி, டீ குடித்தால் உடல்பருமன் அதிகரித்து, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு வரும் தன்மையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சர்க்கரை நோயாளிகள், அறவே சீனி, இனிப்புகள், அரிசிவகை உணவுகளை குறைத்தாக வேண்டும். சீனிக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் மாற்று வகைகளையும் அறவே தவிர்ப்பதே நல்லது.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344