PUBLISHED ON : ஜூன் 09, 2013
எனக்கு பல் எடுத்து சில ஆண்டுகளாகிறது. எனது டாக்டர் 'கேப்' போடலாம் அல்லது இம்பிளான்ட் வைத்து பல்கட்டலாம் என்கிறார். எது நல்லது?
பல் இல்லாத இடத்தில் பல் கட்டுவது, அதனருகில் உள்ள பற்கள் அதனை சுற்றி உள்ள எலும்பு ஆகியவற்றை பொறுத்தது. சில ஆண்டுக்கு முன்பு வரை ஒரு பல் இல்லாவிட்டால், அதற்கு இருபக்கத்தில் உள்ள பற்களையும், கரைத்து, அதனை ஆதாரமாகக் கொண்டு, இல்லாத பல்லையும் சேர்த்து, 'கேப்' போடுவர். இதற்கு 'பிரிட்ஜ்' என்று பெயர்.
இதனால் பல தொந்தரவுகள் உள்ளன. சொத்தையே இல்லாத நல்ல பற்களை பல் கட்டுவதற்காக கரைப்பது தவறு. இதன்மூலம் நாமே அந்த பற்களில் சொத்தை வர வழிவகுக்கிறோம். கேப் அல்லது பிரிட்ஜ் உள்ள இடத்தை சுத்தம் செய்வதும் கடினம். அதற்கான பிரத்யேக பிரஷ்கள் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அங்கு உண்ணும் உணவு மற்றும் கிருமிகள் தங்கி ஈறுநோய் வரும்.
ஆனால் டென்டல் இம்ப்ளான்ட் சிகிச்சை முறையில், இதுபோன்ற பிரச்னைகள் எதுவும் கிடையாது. அருகில் உள்ள பற்களை எதுவும் செய்ய வேண்டியதில்லை. பற்களின் வேர் இருந்த இடத்தில் இம்ப்ளான்டை வைத்து அதனோடு செயற்கை பற்களை நிலையாக பொருத்திவிடலாம்.
முன்பெல்லாம் இம்ப்ளான்ட் வைத்து சில மாதங்கள் கழித்தே, அதன்மீது பல கட்ட முடியும். இப்போது உள்ள உயர்ரக இம்ப்ளான்ட்கள் மற்றும் சிகிச்சை முறைகளால் இம்ப்ளான்ட் வைத்த அதேநாளில் நிலையான பற்களையும் பொருத்திவிடலாம். பார்ப்பதற்கும் உபயோகப்படுத்துவதற்கும் இயற்கை பல் போலவே இருக்கும்.
எனது பல்லின் சொத்தையை கவனிக்காமல் விட்டுவிட்டதால், இப்போது பல்லின் ஈறுவரை உடைந்துவிட்டது. பல்லின் உயரம் குறைவாக உள்ளது. இப்போது இந்தப் பல்லை எடுக்காமல் கேப் போட முடியுமா?
ஒரு பல்லில் கேப் போடுவதற்கு, குறிப்பிட்ட அளவு உயரம் தேவை. இதுகுறையும்போது, கேப் கழன்று விழுவதற்கு வாய்ப்பு அதிகம். ஆனால் எல்லா பற்களிலும் ஒரே அளவு உயரம் இருக்காது. அதிலும் சொத்தை வந்தோ அல்லது பல் உடைந்தாலோ பல்லின் உயரம் மிகவும் குறைந்துவிடும். இதுபோன்ற பற்களில் கேப் போடும்போது ஈறுகளுக்கு அடியில் வரை கேப் இருக்கும். இதனால் அங்கு கிருமி சேர்ந்து ஈறு மற்றும் எலும்பு நோய் வரும்.
இந்த நிலையை தவிர்ப்பதற்கு கேப் போடும் முன், 'கிரவுன் லென்தனிங்' அதாவது, பற்களை நீளப்படுத்துதல் என்றொரு சிகிச்சையை செய்தால் உயரம் கம்மியான பற்களில்கூட கேப் போட முடியும். இச்சிகிச்சை முறையில் பற்களை சுற்றி உள்ள ஈறுகளை சற்று கீழே இறக்கி, பல்லின் உயரம் கூட்டப்படும்.
இதன்மூலம் கேப் போடுவதற்கு அளவு எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ஈறுகள் பழைய நிலைக்கே வந்துவிடும். இச்சிகிச்சை முறையால் உடைந்த அல்லது சிதைந்த பற்களில்கூட சிறந்த முறையில் கேப் போடலாம்.
டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441-54551