PUBLISHED ON : ஏப் 23, 2021

கொரோனா பாதிப்பின் அறிகுறி காய்ச்சலாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை; தலைவலியாகவும் இருக்கலாம். வைரஸ் பாதித்த பலருக்கு, முதல் அறிகுறி தலைவலியாக உள்ளது. தொற்றின் அறிகுறியாக தலைவலி வந்தால், மற்ற தலைவலிகளில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டியதில்லை.
தலைவலி என்று வருபவர்களில், சிலருக்கு, பிம்பங்கள் இரண்டிரண்டாக தெரிவதாக சொல்கின்றனர். கரு விழியின் அசைவிற்கு காரணமான, 'கிரேனியல்' நரம்புகளை வைரஸ் பாதிக்கும் போது, பிம்பங்கள் இரண்டிரண்டாக தெரியும். முகத்தில் உள்ள தசைகள் வலுவிழந்து, சோர்வடைந்து, முகங்களில் இருக்கும் நரம்புகள் பாதித்து, முக பக்கவாதத்தையும் ஏற்படுத்தலாம்.
சுவாசப் பாதை
இதனால் சுவை நரம்புகள் பாதிப்பும், நுகரும் தன்மை பாதிப்பும் வருகிறது. சுவாசிக்கும் போது, மூக்கின் உள் பகுதியான அண்ணத்தில் உள்ள நரம்புகளின் வழியே வைரஸ் சென்றால், மூளையை பாதிக்கும்; சுவாசப் பாதையில் சென்றால், நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
முதுகு தண்டில் உள்ள புற நரம்புகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கிறது. மூளைக்குள் வைரஸ் சென்றால், மூளை பகுதி முழுதும் ரணமாகி விடுகிறது. மூளையின் மேல் பகுதியில் உள்ள அடுக்கை பாதித்து, வீக்கத்தை ஏற்படுத்தும்.
மூளையின் மேல் அடுக்கின் மேல் படிமம் ஏற்பட்டு, பல சேதங்கள் இருப்பதை, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்தால் தெரியும்; மூளையே புண்ணாகி விடுவதும் உண்டு. காய்ச்சல், வலிப்பு வந்தால், மூளையின் மேல் புறத்தில் உள்ள அடுக்கு பாதித்து இருக்கும் என்று தான் சந்தேகிப்போம். தற்போதைய சூழலில், கொரோனா பாதிப்பு உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
வாய்ப்பு
வலிப்பு நோய் பிரச்னை இல்லாதவர்களுக்கும், வைரஸ் பாதிப்பு பல சமயங்களில், வலிப்பை உண்டு பண்ணுகிறது. மன அழுத்தம், மனப் பதற்றம் போன்றவற்றையும் இவ்வைரஸ் உண்டாக்குகிறது. தொற்று நுரையீரலை பாதிக்கும் போது ஏற்படும் தீவிரமான விளைவுகளை போன்று, நரம்பு மண்டல பாதிப்பு இருப்பதில்லை. தொற்றை கட்டுப்படுத்த ஸ்டிராய்டு மருந்துகள் தரப்படுகிறது.
ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஸ்டிராய்டு மருந்துகளை பயன்படுத்துவதால், சுவாசப் பாதையில், பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தடுப்பு ஊசி
ஆனால், கொரோனா தொற்றுக்கு ஸடிராய்டு மருந்துகள் குறைந்த நாட்களே தருகிறோம்; அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இரண்டு, 'டோஸ்' தடுப்பு ஊசி போட்ட பின்னும், ஆயிரத்தில் ஒருவருக்கு தொற்று வரலாம். ஆனால், உயிரிழப்பு இருக்காது என்று சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன.
டாக்டர் ஆர்.எம்.பூபதி,
நரம்பியல் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
அரசு பன்நோக்கு மருத்துவமனை,
சென்னை.