எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஹார்மோன்!
எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஹார்மோன்!
PUBLISHED ON : ஏப் 25, 2021

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இருப்பது தான் பெண்களுக்குப் பாதுகாப்பு; எலும்புகள் வலுவாக இருப்பதற்கும், இதய செயல்பாட்டிற்கும் இந்த ஹார்மோன் உதவுகிறது. மாதவிடாய் நிற்கும் வயதில் இந்த ஹார்மான் சுரக்கும் அளவு குறைந்து விடும்.
கருப்பை, கருக் குழாய் சீராக செயல்படும் வரை தான் இந்த ஹார்மோன் சுரப்பு நன்றாக இருக்கும். அதனால் தான் மாதவிடாய் சீராக இருக்கும் பெண்களுக்கு மாரடைப்பு வருவது அபூர்வமான விஷயம்.
பிரச்னை
தானே மாதவிடாய் நின்றாலோ, வேறு ஏதேனும் பிரச்னை காரணமாக, கர்ப்ப்பை, கருக்குழாயை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிட்டால், அதன் செயல்பாடுகள் இல்லாததால், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பும் குறைந்து, எலும்புகளின் தேய்மானம் துவங்கி விடும்.
இதைத் தவிர்க்க கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும. உடற்பயிற்சியை தவிர்க்கவே கூடாது. யோகா, தியானம் செ்யவதால் மன அழுத்தம் இல்லாமல், நீண்ட நாடகளுக்கு எலும்பு தேய்மானத்தையும் தவிர்க்கலாம்.
தினமும் உடற்பயிற்சி செய்து, சத்தான உணவு சாப்பிடும் பெண்களுக்கு, மேனோபாஸ் நிற்பதற்கு முன் வரும் அறிகுறிகளான ஏ.சி., அறையில் இருந்தாலும் வியர்ப்பது, படபடப்பு, பதட்டம் இருக்காது. உடல், மனதை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பெண்களுக்கு, மாதவிடாய் நிற்கும் வயதில் வரும் அறிகுறிகள் இருப்பதில்லை; சிலருக்கு, மிதமான அறிகுறிகள் மட்டுமே வரும்.
நாற்பது வயதிற்கு மேல், பால், பால் பொருட்கள், ராகி, சோயா போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இயல்பாக உடம்பில் இருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் போன்று, சோயாவில் தாவர ஈஸ்ட்ரோஜென் உள்ளது.பத்து வயதிற்குள் வயதிற்கு வரும் பெண்கள், தாமதமாக திருமணம் செய்து, தாமதமாக குழந்தை பெற்றால், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் வரும். கரு முட்டையின் எண்ணிக்கை குறைந்து, ஆரோக்யிமான முட்டையாகவும் இருக்காது.
பிறக்கும் போது, கருப் பையில் குறிப்பிட்ட எண்ணிக்கை முட்டையுடன் தான் பிறப்பார்கள்; எண்ணிக்கை நபருக்கு நபர் வேறுபடும். மாதா மாதம் மாதவிடாய் வரும் போது, வளர்ச்சி அடைந்த கரு முட்டை உடைந்து வெளியில் வரும். இது ஒன்றோ, இரண்டோ, மூன்றாகவோ இருக்கலாம். கரு முட்டைகள் முழு வளரச்சி பெற்று வெளியில் வரும் போது, கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். 35 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை வருவது கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைவதால் தான்.
உயரம்
வயதிற்கு வரும் வயதை வைத்து, எவ்வளவு உயரமாக வளர்வாள் என்பதை சொல்லி விடலாம். சராசரி வயதிற்கு முன், சீக்கரமே வயதுக்கு வந்து விட்டால், அதிக உயரமாக வளர்வது கிடையாது; எலும்புகளின் வளர்ச்சி நின்று விடும்.
டாக்டர் மாதங்கி ராஜகோபாலன்,
மகளிர் நல மருத்துவ ஆலோசகர்,
ரெயின்போ மருத்துவமனை,
சென்னை
044 4012 2444, 9500064781
