தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கால்சியம் மாத்திரையால் பற்கள் பலம் பெறுமா?

கால்சியம் மாத்திரையால் பற்கள் பலம் பெறுமா?

கால்சியம் மாத்திரையால் பற்கள் பலம் பெறுமா?


PUBLISHED ON : ஜூலை 24, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

பற்கள் வலுவிழக்க என்ன காரணம்? இதை தவிர்க்க கால்சியம் மாத்திரைகள் எடுக்கலாமா?



பற்கள் தாடை எலும்புடன் உறுதியாக நிலைக்க பற்களை சுற்றியுள்ள ஈறுகளே காரணம். பற்காரை எனப்படும், பல நாட்களாக படியும் படிமம் ஈறுகளை சேதப்படுத்தி பல்லின் வேரில் இருந்து விலக செய்கிறது. இதனால் பற்கள் வலுவிழக்கும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் ஈறுகள் வலுவிழக்கும். இதை தவிர ஆழமாக பரவியுள்ள பற்சொத்தை, பல்லின் பெரும்பகுதியை அரிப்பதாலும் பற்கள் அதன் உறுதியை இழக்கின்றன. கால்சியம் மாத்திரைகள் நான்கு மாத கர்ப்பத்தின்போது, மகப்பேறு மருத்துவர் பரிந்துரைப்பார். ஏனெனில் அச்சமயத்தில்தான் கருவில் உள்ள குழந்தையின் பற்கள் மற்றும் எலும்புகள் வளர்கின்றன. சிறுகுழந்தைகளுக்கு வளர்ச்சி பருவத்தின்போது கால்சியம் மாத்திரைகள் உதவலாம். அனைவருக்கும் இது பொருந்தாது. பல்லின் உறுதியை பரிசோதித்து தகுந்த சிகிச்சை முறைகள் எடுத்துக் கொண்டால் பற்கள் உறுதியுடன் நிலைக்கும்.



எனது மகனின் வயது 20. கீழ்த்தாடையில் உள்ள ஞானப்பல் பாதி முளைத்துள்ளது. எலும்பை 'கட்' செய்து பல்லை எடுக்க வேண்டும் என டாக்டர் கூறுகிறார். வலி அதிகமாக இருக்குமா? இதனால் பின்விளைவு ஏதும் உண்டா?



பொதுவாக தாடையில் இடமின்மை காரணமாக ஞானப் பற்கள் எனப்படும் கடைவாய் பற்கள் எலும்பினுள் புதைந்து இருக்கும். சிலசமயம் பாதிமுளைத்து ஈறுகளுக்கு கீழ் இருக்கக் கூடும். நாம் சாப்பிடும் உணவு பொருட்கள், ஈறுகள் மற்றும் பல்நடுவில் தங்க நேரிட்டால் பல் சொத்தை, ஈறுகளில் வலிவீக்கம் ஆகியவை ஏற்படலாம். பக்கத்தில் உள்ள பல்லுக்கும் இவை பரவக்கூடும். எனவே இப் பிரச்னை இருந்தால் இப்பல்லை எடுப்பது நல்லது. தாடை எலும்பினுள் புதைந்துள்ள பல்லின் பகுதியை எடுக்க மிகச்சிறிதளவு எலும்பை மட்டுமே கரைத்து பல்லை எடுக்க நேரிடும். 30 முதல் 45 நிமிடங்களுக்குள் சிகிச்சை முடிந்துவிடும். ஓரிரு நாட்களுக்கு வீக்கம் இருக்கக் கூடும். சிலருக்கு வாய்திறப்பதிலும் சிறிதளவு சிரமம் ஏற்படலாம். சிகிச்சைக்கு பிறகு மாத்திரைகள் மூலம் வலி, வீக்கம் குறைந்துவிடும். ஆகையால் பயப்பட தேவையில்லை.



என் கீழ்த்தாடையில் இருபுறமும் கடைவாய் பற்கள் இல்லை. நிரந்தரமாக பல் கட்ட ஏதாவது வழி உண்டா?



கீழ்த்தாடையில் இருபுறமும் கடைவாய் பற்கள் இல்லாவிட்டால், உணவை அரைத்து மெல்வது சிரமம். இம்ப்ளான்ட் முறைப்படி ஸ்குரு மூலம் கடைவாய் பற்களை நிரந்தரமாக பொருத்தலாம். இதனால் பல் எடுத்த இடத்தில் தாடை எலும்பு தேய்மானத்தை தவிர்க்கலாம். இதற்கு அடுத்தபடியாக பற்கள் இல்லாத இடத்திற்கு முன்னால் இருக்கக் கூடிய இரு பற்களை சற்று கரைத்து அதன்மேல் 'கேப்' செய்து பொருத்த வேண்டும். இதனுடன் பல் இல்லாத இடத்தில் ஒரு சிறிய பட்டன் போன்ற அமைப்பு நீண்டு நிரந்தரமாக ஈறுகளின் மீது அமையப் பெற்றிருக்கும். இதன் மேல் இரு கடைவாய் பற்கள் மட்டும் பொருத்தலாம். இந்தப்பகுதி மட்டும் கழற்றி மாட்டக் கூடியவை. இதை அடுத்து கழற்றி மாட்டுகிற முறையில் உள்ள பல்செட் மட்டுமே உபயோகிக்கலாம்.



- டாக்டர் எஸ்.முத்துராமன்,

மதுரை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us