தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூலிகை மருத்துவம் : மாற்றம் உண்டு

மூலிகை மருத்துவம் : மாற்றம் உண்டு

மூலிகை மருத்துவம் : மாற்றம் உண்டு


PUBLISHED ON : ஜூலை 24, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது உடலை போர்த்தி இருக்கும் தோலில் ஏதாவது தொல்லை என்றால் மனதும் சேர்ந்து துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. நாம் கருவாக தாயின் வயிற்றில் இருக்கும்பொழுதே நமது தோலின் நிறம் மரபணுக்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது.



கருவின் ஐந்தாவது வாரத்திலிருந்து தோல் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. மூன்றாவது மாதத்தில்தான் நமது தோலானது மூன்று முக்கிய அடுக்குகளாக பிரிவடைகிறது. ஆறாம் மாதத்தில் முழுமையான, ஆரோக்கியமான தோல் தோன்றிவிடுகிறது. அப்பொழுதே தோலானது ரோமத்தையும் சீபம் என்னும் மெழுகு கோளங்களையும் வியர்வை கோளங்களையும் உள்ளடக்கி, ஒரு முழுமையான தோலின் பணிகளை சீராக செய்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும்பொழுது ஐந்தாவது வாரத்திலிருந்து 20வது வாரத்திற்குள் தாய் உட்கொள்ளும் ஒவ்வாத மாத்திரைகள், வேதிப் பொருட்கள், எக்ஸ்ரே, நியூக்ளியர் கதிர்வீச்சுகள், மரபணு கோளாறுகள், ரத்த சொந்தத்தில் திருமணம் போன்றவற்றால் தோலடுக்கு பரிணாம வளர்ச்சியில் பலவிதமான கோளாறுகள் ஏற்பட்டு, தோலின் இயல்பான நிலை பாதிக்கப்படுகிறது.



நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் தோலின் நிறமாற்றம், காயம், தழும்பு, மினுமினுப்பு குறைதல், தடிப்பு, கடினத்தன்மை ஆகியவற்றிற்கு மேலடுக்கின் குறைபாடும், வியர்வை நாற்றம், வறட்சி, தோலில் எண்ணெய் பிசுக்கு, உணர்ச்சியின்மை ஆகியவற்றிற்கு நடு அடுக்கின் குறை பாடும், தோல் இறுக்கம், சுருக்கம் மற்றும் மடிப்புகளுக்கு கீழ் அடுக்கின் குறைபாடும் காரணமாகும். தோல் நமக்கு அழகைத் தருவதுடன் வெப்பம், குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பது, நரம்பு மூலமாக தொடுதலை உணர்த்துதல், வியர்வை மற்றும் எண்ணெய் பசையை சுரக்கவைத்து நீர், உப்பு மற்றும் கொழுப்பை வெளியேற்றுதல், நுண்ணிய துவாரங்கள் மூலமாக தசை மற்றும் தோல் அடுக்கில் தங்கிய கழிவு காற்றுகளை வெளியேற்றுதல் போன்ற பணிகளை செய்கின்றன. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. தோலின் அனைத்து அடுக்குகளிலும் ஊடுருவி, அவற்றில் தங்கியுள்ள மலினங்களை வெளியேற்றி, சாதாரணமாக இருந்த தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.



ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை என்றும், இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது. இந்த எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன. இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது. ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும். ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.



அறுவை சிகிச்சையின்பொழுது ரத்தக்குழாய்களில் ஏற்படும் ரத்தக்கசிவை நீக்க குறிப்பிட்ட பகுதிகளில் மின்தாக்குதல் கொடுக்கப்படுகிறது. இதனால் ரத்தக்குழாய்கள் கருகி, ரத்தக்கசிவு நிற்கிறது. மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் ரத்தக்கசிவை நிறுத்துவதற்கும், வேண்டாத கட்டிகள், கழலைகள், மருக்கள், துர்மாமிச வளர்ச்சிகள் ஆகியவற்றை நீக்க இவை பயன்படுகின்றன. காட்டரைசேஷன் என்று அழைக்கப்படும் இந்த முறையைப் பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேரையர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். சுட்டிகை என்ற பெயரில் தேவையற்ற ரத்தக் கசிவை நீக்கவும், மாமிச வளர்ச்சியை வெளியேற்றவும் சுக்கு, மஞ்சள் கிழங்கு, வசம்பு மற்றும் வெள்ளி, செம்பு, பொன் போன்ற உலோகங்களை சூடாக்கி, தேவையான இடத்தில் சூடு வைத்து நோயை தீர்க்கலாம் என்பது தேரையர் கருத்து. இதே முறையில் நவீன மருத்துவத்தில் உலோகங்களை மின்சாரத்தின் உதவி கொண்டு சூடாக்கியோ அல்லது சில்வர் நைட்ரேட், டிரைக்குளோரோ அசிடிக் அமிலம், திரவ நைட்ரஜன் போன்றவற்றைக் கொண்டோ காட்டரைசேஷன் செய்யப்படுகிறது. நவீன மருத்துவத்தில் பல கண்டுபிடிப்புகளுக்கு நமது பாரம்பரிய மருத்துவம்தான் அடித்தளம் அமைத்து வருகிறது.



எனக்கு அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்கு என்ன செய்வது?



உணவுப்பாதையை உறுத்தக்கூடிய உணவுகள் மற்றும் காரத்தினால் இவ்வாறு உண்டாகலாம். அஷ்டச் சூரணம் மற்றும் மயிலிறகாதி சூரணத்தை தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் நீங்கும்.



-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,

மதுரை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us