PUBLISHED ON : ஏப் 28, 2013
எனது வயது 65. இருஆண்டுகளாக மூட்டுவலி உள்ளது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்புகிறேன். சிகிச்சைக்குப் பின், நான் மண்டியிட்டு வணங்க முடியுமா?
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தபின், உங்கள் முழங்கால்வலி நீங்கும். சிறந்த தொழில்நுட்பத்தில் மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்பட்டால், முழங்காலை வலியின்றி நன்றாக மடக்க முடியும். சிலநிமிடங்கள் முழங்காலை மண்டியிடுவது தவறில்லை. வலியும் இருக்காது. ஆனால் மண்டியிடும்போது, உங்கள் செயற்கை மூட்டினில் அதிக விசைகள் செல்ல, நேரிடும் என்ற காரணத்தால், நீண்ட நேரம் மண்டியிடுவதை தவிர்ப்பது நல்லது.
மூன்றாண்டாக இடுப்பு வலி உள்ளது. இடுப்பு மூட்டு தேய்மானம் அடைந்ததாக கூறிய டாக்டர், ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும்படி ஆலோசனை கூறினார். கூச்சமாக உள்ளது. இதனால் பலனுண்டா?
மூட்டு தேய்மானத்தின் வலி அந்த மூட்டில் செல்லும் விசைகளை சார்ந்து உள்ளது. வலது இடுப்பு மூட்டினில் வலி இருந்தால், நீங்கள் இடது கையில் ஊன்றுகோல் வைத்து நடக்கலாம். இதனால் வலது இடுப்பில் செல்லும் விசைகள் குறைந்து, உங்களுக்கு
வலியும் குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த மாதிரி ஊன்றுகோல் வைத்து நடந்தால் மூட்டு மாற்று சிகிச்சையை சிறிது காலத்திற்கு தள்ளிப் போட முடியும். உறுதியான மனப்பான்மையோடு உபயோகியுங்கள், இதற்கு கூச்சப்படத் தேவையில்லை.
மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ள நான், உணவு வகைகளில் மாற்றம் செய்தால், மூட்டுவலிக்கு நிவாரணம் கிடைக்குமா?
மூட்டு வலிக்கு பொதுவாக, 'பிரைமரி ஆஸ்டியோத்ரைட்டிஸ்' என்ற நோயே காரணம். இந்நோய்க்கும் உணவு வகைகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை. இருப்பினும், ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்கள், தங்கள் எடையை சரியாக வைத்துக் கொள்ள, அளவான உணவு எடுத்துக் கொள்வது நல்லது. கீரை வகைகள், நார்ச்சத்து வகைகள், பழங்கள் உண்டால் எடை அதிகரிக்காது. மூட்டுக்கும் நல்லது. 'எணிதt' என்ற நோயால் ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு சிலருக்கு வருகிறது. இந்நோய் உள்ளவர்கள் மட்டும் மாமிசம் மற்றும் உயர்ந்த புரதச்சத்து கொண்ட உணவுகளை குறைப்பது நல்லது.
மூட்டு வலிக்கு எனது டாக்டர், 'குளுகோஸ்மைன்' என்ற மருந்தை பரிந்துரைத்துள்ளார். ஒரு ஆண்டாக எடுத்து வருகிறேன். வலியில் வேறுபாடு எதுவும் தெரியவில்லை. இதை நான் எடுத்துக் கொள்ளலாமா?
ஆரம்ப காலத்தில் உள்ள மூட்டு தேய்மானத்திற்கு இம்மருந்து கொடுக்கப்படுகிறது. மூட்டின் ஜவ்விற்கு ஒரு ஆகாரமாகவும், தேய்மானம் அடைந்த ஜவ்வை மறுவளர்ச்சி அடைய உதவும் என்ற நோக்கத்துடன் இது கொடுக்கப்படுகிறது. ஆரம்பகால மூட்டு தேய்மானம் உள்ளவர்கள், சிலர் இதில் பயன் உள்ளது போல உணர்கின்றனர். பக்க விளைவுகள் மிகக்குறைவு. ஆனால் உண்மையான பயன் கேள்விக்குறியே!
- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,
மதுரை. 93442-46436