தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சர்க்கரை கோளாறால் ஏற்படுமா?

சர்க்கரை கோளாறால் ஏற்படுமா?

சர்க்கரை கோளாறால் ஏற்படுமா?


PUBLISHED ON : ஏப் 12, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கொரோனா வைரஸ் தொற்று, சர்க்கரை கோளாறு உள்ளவர்களை அதிகம் தொற்றும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனரே... உண்மையா?' என, தினமும் என்னிடம் கேட்கின்றனர்.

சர்க்கரை கோளாறு உள்ளவர்களை, பலவிதமான தொற்றுகள் பாதிக்கும் அபாயம் உள்ளது; அது போல் தான், கொரோனா தொற்று பாதிப்பும்.கொரோனா தொற்றின் பாதிப்பு இருக்கும் சர்க்கரை கோளாறு இல்லாதவர்களுக்கும், முதல் நிலை தொற்றான வைரஸ் பாதிப்பிலிருந்து, இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றான, நிமோனியா ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை கோளாறு இருப்பவர்கள், ஏற்கனவே அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, மற்றவர்களை ஒப்பிடும் போது குறைவாக இருக்கும் என்பதால், தொற்று பாதிப்பு வராமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தற்காப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?

முழுமையான சுய சுகாதாரத்தை கடைப்பிடிப்பது அவசியம். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு தேய்த்து, தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். அவ்வப்போது, திரவ கிருமி நாசினியையும் பயன்படுத்த வேண்டும். தும்மும் போது, இருமும் போது தெறிக்கும் நீர்த் துளிகளின் வழியே, கிருமி பரவும் என்பதால், தும்மல், சளி, இருமல் இருப்பவர்களின் அருகில் செல்லாமல் இருப்பது பாதுகாப்பானது; காரணம், சர்க்கரை கோளாறு இருப்பவர்களை, சற்று விரைவாக, நோய் தொற்றலாம்.முக கவசம் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. சர்க்கரை கோளாறு இருப்பவர்களுக்கு சளி, இருமல் இருந்தால் மட்டும் முக கவசம் அணிந்து கொள்ளலாம். இது, நமக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் பாதுகாப்பு.

பிரத்யேக முன்னெச்சரிக்கைசர்க்கரை கோளாறு உள்ளவர்கள், ரத்த சர்க்கரையின் அளவை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உடலில் ஏற்படும் எல்லா தொற்றுகளும், ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது, தொற்றின் தன்மையை மேலும் மோசமாக்கும்.சுயமாக பயன்படுத்தும், 'குளுக்கோ' மீட்டரை வைத்து, அவ்வப்போது சர்க்கரை அளவை பார்த்துக் கொள்வது நல்லது. ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் அதிரித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, சர்க்கரையை கட்டுப்பாட்டில் கொண்டு வர, தேவையான ஆலோசனைகளை பெற வேண்டும்.

டைப் - 1 சர்க்கரை கோளாறு உள்ளவர்கள் அல்லது டைப் - 2 சர்க்கரை கோளாறு இருந்து, ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல், இன்சுலின் ஊசி போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் சர்க்கரை அதிகரித்து, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலைமை, உடனடியாக ஏற்பட வாய்ப்புகள் இல்லை. எனவே, உங்கள் மருத்துவரின் ஆலோசனையை முறையாக பின்பற்ற வேண்டியது முக்கியம்.

பொதுவாக, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியது, மற்றவர்களிடம் இருந்து குறைந்தது, 1 மீட்டர் துாரம் தள்ளி இருப்பது, சளி, இருமல் இருப்பவர்களிடம் இருந்து, 6 அடி துாரம் தள்ளி நிற்பது, கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது, முகத்தை தொடாமல் கவனமாக இருப்பது போன்றவற்றை, சர்க்கரை கோளாறு உள்ளவர்களும் பின்பற்ற வேண்டும்.ரத்த குளுக்கோஸ் அளவை பரிசோதிக்க பயன்படுத்தும் ஊசிகள், இன்சுலின் போடும் ஊசிகளை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே கூடாது. சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், தாங்கள் பயன்படுத்தும் மருத்துவப் பெட்டகத்தை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், தனியே வைத்திருக்க வேண்டும்.

முடிந்த அளவு வெளியில் எங்கும் செல்லாமல், தொற்று பாதித்தவருடன் நெருங்காமல், பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும். ஒருவேளை, சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக தேவையான மருத்துவ உதவிகளை பெற வேண்டும்.

மற்றவர்களுக்கு தொற்று பரவாதவாறு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.தொற்று பாதித்த இடத்திற்கோ, பாதித்த பிற நாடுகள், மாநிலங்களுக்கோ சென்று திரும்பியவர்கள், அறிகுறிகள் இல்லாவிட்டாலும், இரண்டு வாரங்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது; குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்கவும்.இது, பொறுப்புள்ள யாரும் செய்ய வேண்டியது.

டாக்டர் வி.மோகன்,

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம்,

சென்னை.


7825888631

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us