PUBLISHED ON : ஏப் 13, 2020

உலகத்தையே ஆட்டிப் படைக்கும், கொரோனா வைரசிற்கு, நாம் பயப்படுவது அவசியமா?
உண்மையாகச் சொல்லப் போனால், பாம்பைப் போல் வினயமாகவும், புறாவைப் போல் சமாதானமாகவும் இருக்க வேண்டும். அதாவது, அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டு, அவற்றைச் செவ்வனே கடைப்பிடித்து, அமைதியாக இருக்க வேண்டும். பயப்படத் தேவையில்லை; பாதுகாப்பாக இருப்பது மிக மிக அவசியம்.
எந்த வகையில் பாதுகாப்பு தேவைகள்?
முடிந்தவரை அவசியமானவற்றிற்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டும். வீட்டில் குடும்பத்துடன் இருப்பது நல்லது.வெளியில் சென்று வருபவர்கள் கை, கால்களைக் கழுவிச் சுத்தம் செய்து விட்டுத் தான், எந்த வேலையிலும் ஈடுபட வேண்டும். கைகளைக் கழுவுவதற்கு, பிரத்யேக முறையை பின்பற்ற, உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது. குறைந்தது, 20 வினாடிகளுக்கு சோப்பு போட்டுத் தண்ணீரால் கழுவ வேண்டும். இந்த தற்காப்பு முறை மிகமிக அவசியம். ஏனெனில், இந்த வைரஸ் பரவும் விதமே, தொற்று உள்ளவர்களின் சளி, நம் மீது படிவதனால் தான்!
தும்மல், சளி, காய்ச்சல், மூச்சு விடுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலே, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமா?
வைரஸ் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கோ அல்லது பாதிக்கப்பட்ட நம் நாட்டின் பிற மாநிலங்களுக்கோ சென்று வந்த பின், இந்த பிரச்னைகள் இருந்தால்; உங்கள் குடும்பத்தார் யாரேனும் மேற்படி பகுதிகளுக்குச் சென்று திரும்பி இருந்தால்; வெளிநாட்டில் இருந்த திரும்பிய நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வந்திருந்தால்; சமீபத்தில் வேறு உடல் கோளாறுகளுக்காக, உறவினர், நண்பர்களை பார்க்க மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தால்; அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தில், நாமாகவே சென்று, பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சம்பந்தப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தாரையும் சோதனைக்கு உள்ளாக்குவது அவசியம்.
இந்த தொற்று வந்திருந்தால் இறப்பது உறுதியா?
கண்டிப்பாக இல்லை. இதற்கு முன் வந்த சார்ஸ், மார்ஸ் போன்ற வைரஸ் தொற்று போன்றது தான் இதுவும். 100 பேருக்கு வந்தால், 85 பேர் தானாகவே முழுதும் குணமாகி விடுவர்; 15 பேர் தான் சிரமப்படுவர். இறப்பு இரண்டு சதவீதம் தான். முறையான மருத்துவ சிகிச்சை பெற்றால், பாதிப்பிலிருந்து தப்பி விடலாம்.கொரோனா வைரஸ், தும்மல், சளியாலும், அவற்றை தொடுவதாலும் வேகமாகப் பரவுகிறது; எனவே, ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து, சுய சுகாதாரத்துடன், மற்றவர்களிடம் இருந்த விலகியே இருக்க பழக வேண்டும். பொறுப்புள்ளவர்களாக இருந்தால், வைரஸ் பரவாது என்பதை உணர்ந்தால் நல்லது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு வைத்தியம் இல்லை என்கின்றனர்; பின் எப்படி சரியாக முடியும்?
நம் உடம்பிற்கு, இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தி உண்டு. அதற்காகத் தான், எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, முறையாக உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், எந்த ஒரு தொற்றையும் எதிர்கொள்ள முடியும்.ஆனால், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, சிறுநீரக பாதிப்பு, இதய நோய், புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், நீண்ட நாள் புகைப்பிடிப்பவர்கள், குடிகாரர்கள் இவர்களுக்கெல்லாம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, குழந்தைகளை இந்த தொற்று அதிகம் தாக்குவதில்லை.
தடுப்பு ஊசி இருக்கிறதா?
இந்த புதிய தொற்றுக்கான தடுப்பூசி ஆராய்ச்சி நடக்கிறது; விரைவிலேயே தயாராகி விடும். அதுவரை, மத்திய, மாநில சுகாதாரத்துறை சொல்லும் வழிகாட்டுதல்களையும், உலக சுகாதார மையம் சொல்லும் அறிவுறுத்தல்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.
டாக்டர் கே.கே.அவந்திகாபாய்,
முதுநிலை குழந்தை நல சிறப்பு மருத்துவர்,
மதுரை.
9344246436.
