PUBLISHED ON : செப் 26, 2010

வி.புஷ்பமாலதி, வத்தலகுண்டு: 'ஹேர் டை' அடித்து ஒரு சில நாட்களில், தொடர் தும்மல், மூக்கில் முணுமுணுப்பும், இரு கண்களிலும் அரிப்பு ஏற்படுகிறது. இது எதனால்? அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
தலைக்கு போடும் சாயம், பல வகைகளில் உள்ளது. நிரந்தர நிறமாற்றி, சில காலத்திற்கு மட்டும் நிறமாற்றி, திரவ வடிவில், பவுடர் வடிவில், எண்ணெய் வடிவில் இவை உள்ளன. அவை அனைத்திலுமே ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். நீங்கள் சொன்ன அறிகுறிகள் இதனால் ஏற்பட்டிருக்கலாம். சாயத்தை மாற்றிப் பாருங்கள். தரமான சாயங்கள் சந்தையில் கிடைக்கின்றன. 250 ரூபாய்க்கு மேல் விலையுள்ள சாயங்கள் பாதுகாப்பானவை. அதுவும் சரிப்படவில்லை எனில், மருதாணி இலைகளை அரைத்து முடியில் தடவிக் கொள்ளலாம். மருதாணி இலை, பொதுவாக எந்த பிரச்னையையும் உண்டாக்குவதில்லை.
ஸ்ருதி, கோயம்புத்தூர்: சில காலங்களாக மார்பகத்தில் வலி, சில நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது. எந்த மருத்துவரை அணுகுவது?
உங்கள் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. மார்பு எலும்புக்கூடில் வலியா, தசை வலியா, மார்பகத்தின் உட்புறத்திலா, வெளிப்புறத்திலா என்பதையும் குறிப்பிடவில்லை. மாதவிடாய் துவங்குவதற்கு முன்போ, அந்த வாரத்திலோ இது போன்று வலி ஏற்படுகிறதா என கவனியுங்கள். இ.சி.ஜி.,யும், மார்பகத்தில் அல்ட்ரா சவுண்டு ஸ்கேனும் எடுத்துப் பாருங்கள். இந்த பரிசோதனை முடிவுகளை பொதுநல மருத்துவரிடம் காண்பித்து, ஆலோசனை பெறுங்கள்.
ஆர்.சரவணன், திருப்பூர்: 40 வயதான நான், 10 வருடங்களாக மூல நோயால் அவதிபடுகிறேன். என் நண்பர்கள் சிலர், பன்றிக் கறி தொடர்ந்து சாப்பிட்டால் மூல வியாதி முற்றிலும் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர்? இது உண்மையா?
பழங்காலத்து வைத்தியமாக பல வழிமுறைகள் கூறப்படுகின்றன. வாத்து சாப்பிடுவது, வாத்து முட்டை சாப்பிடுவது போல, பன்றிக் கறியும் சாப்பிட்டால் சரியாகும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணர் தான் மூல நோய் குறித்து சரியான சிகிச்சை முறையைச் சொல்வார். மூலத்தைக் கட்டி வைப்பது, லேசர் சிகிச்சை முறை, ஊசி மூலம் சிகிச்சை அளித்தல் ஆகியவை மேற்கொள்வது வழக்கம். சிகிச்சை முறை தேவை எனில், சிகிச்சை மேற்கொள்ளலாம். இல்லையெனில், தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது, மூன்று அல்லது நான்கு வகை பழங்கள் சாப்பிடுவது, மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பது, மலம் இறுகிப் போவதைத் தவிர்ப்பது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

