sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

சுகப் பிரசவத்திற்கு ஆசைப்படுவதில் தவறில்லை!

/

சுகப் பிரசவத்திற்கு ஆசைப்படுவதில் தவறில்லை!

சுகப் பிரசவத்திற்கு ஆசைப்படுவதில் தவறில்லை!

சுகப் பிரசவத்திற்கு ஆசைப்படுவதில் தவறில்லை!


PUBLISHED ON : செப் 26, 2010

Google News

PUBLISHED ON : செப் 26, 2010


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை முறை கையாளுவது குறித்து இப்போதெல்லாம் அடிக்கடி செய்திகளில் வருகிறது. ஏனெனில், பல பெண்கள் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விழைகின்றனர். வலி இல்லாமல் பிரசவம் ஏற்பட வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பதால், டாக்டர்களும் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய நிலை இருப்பதாலும், பணத்திற்காகவும் இச்சிகிச்சை முறையை நாடுகின்றனர்.   பத்தொன்பதாம் நூற்றாண்டில், 10 சதவீத பெண்களே, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றனர். இப்போது மருத்துவப் பாதுகாப்பு, விழிப்புணர்வு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை இருப்பதால், 40 முதல் 50 சதவீத பிரசவம், அறுவை சிகிச்சை மூலமே மேற்கொள்ளப்படுகிறது. பெண்களே இதை விரும்புகின்றனர்.சுகப் பிரசவம் நன்றாக நடக்க வேண்டுமே என்ற கவலை, குழந்தை வெளிவரும் போது ஏற்படும் வலி ஆகியவற்றுக்கு பயந்து, 'சிசேரியன்' முறையை பெண்கள் நாடுகின்றனர்.  பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும், சிறந்த நாள், நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையில், 'சிசேரியன்' முறைக்கு ஆகும் அதிக செலவையும் பொருட்படுத்துவதில்லை. டாக்டருக்கும், கர்ப்பிணிக்கும் ஏற்ற வசதியான, நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து, 'சிசேரியன்' செய்யுமாறு கூறுகின்றனர்.  விதியை ஒதுக்கித் தள்ளி, நல்ல ஜாதகத்தில் குழந்தை பிறக்கிறது என்ற நம்பிக்கையில், 'சிசேரியனுக்கு' முன்னுரிமை கொடுக்கின்றனர். 'சிசேரியன்' முறை இவ்வுலகிற்கு புதிதல்ல. ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர் எழுதிய விதிப்படி, வயிற்றில் உள்ள குழந்தை உயிருடன் பிறப்பதற்கு, ரோம் நாட்டில் அறுவை சிகிச்சை கட்டாயமாக்கப்பட்டது. மயக்க மருந்து இல்லாமல், கத்தரிக்கப்பட்ட வயிற்றுக்கு தையல் போடும் கருவிகளும் இல்லாமல், தொற்று இல்லாத அறுவை சிகிச்சை தொழில்நுட்பமும் இல்லாமல், இச்சிகிச்சையை மேற்கொள்ளும் பெண்கள் இறக்க நேரிட்டது. இப்போது மருத்துவ முறைகளே மாறி விட்டன.எனவே, சுகப் பிரசவத்திற்கு ஆசைப்படும் பெண்கள், சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியவர்களாகக் கருதப்படுகின்றனர்.  'அதிக வலியுடன் எதற்கு சுகப் பிரசவம் செய்து கொள்கிறீர்கள்? 'சிசேரியன்' முறை சிறந்ததாக உள்ளது...' என, கர்ப்பிணிகளிடம் பரிந்துரை செய்வதும் நடக்கிறது. பொதுவான, ஏற்றுக் கொள்ள முடியாத ஆலோசனைகளால் குழம்பிக் கிடக்கும் கர்ப்பிணிக்கு, போதுமான அறிவுபூர்வமான அறிவுரை தேவைப்படுகிறது. குழந்தை பிறப்பது, சந்தோஷ எதிர்பார்ப்புடன், மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். கர்ப்பம் அடைவது என்பது ஒரு நோய் அல்ல என்பதையும் அனைவரும் அறிவர். பிறப்பு, இறப்பு சுழற்சியின் இடையே ஏற்படும் ஒரு நிகழ்வு தான், கர்ப்பம். உயிரினங்கள் பிறப்பை அதிகரிக்க, இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த வழிமுறை இது. பிரசவத்தின் போது, தாங்க முடியாத வலி இருக்கும்; அந்த வலி, நிரந்தரம் அல்ல என்பதை உணர வேண்டும். பிரசவம் முடிந்ததும், வலியும் பறந்து விடும்.

எந்த சூழ்நிலையில், 'சிசேரியன்' முறை மேற்கொள்ள வேண்டும்?

* பிரசவ வலி சரியான முறையில் ஏற்படவில்லை எனில்.

* சுகப் பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் ஏற்படாமல், குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது.

* குழந்தை வெளியே வருவதற்கான நிலையில், தாய் வயிற்றின் கீழ் பகுதிக்கு குழந்தையின் தலைப் பகுதி வராத நிலையில்.

* ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வயிற்றில் இருந்தால்.

* தாயின் இடுப்புப் பகுதி மிகவும் சிறுத்து இருந்து, வயிற்றில் குழந்தை பெரிதாக இருந்தால்.

* கர்ப்பம் தரித்தவர், வயதானவராக இருந்தால்.

* சோதனைக் குழாயில் குழந்தை உருவாக்கப்பட்டு, தாயின் வயிற்றில் வைக்கப்பட்டிருந்தால்.

* சுகப் பிரசவம் மேற்கொள்வதற்கு முடியாமல், தாயின் உடல் நிலை சீர்கேடு அடைந்திருந்தால்.

'சிசேரியன்' முறை வேகமாகவும், எளிதாகவும் செய்யக் கூடியதே. எனினும், மயக்க மருந்து கொடுப்பது, வயிற்றைக் கிழிப்பது போன்ற பெரிய அறுவை சிகிச்சை முறைகள் அடங்கியது. மிகச்சிறந்த மருத்துவர்கள் கையாளும், 'சிசேரியன்' முறையில் கூட, 0.5 முதல் 3 சதவீத உயிரிழப்பு ஏற்படுகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பின், சில சிக்கல்கள் உள்ளன; ஆனால் அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல. அதிக ரத்தப்போக்கு, குழந்தையை வெளியேற்றிய பிறகு, கர்ப்பப் பை தானாக சுருங்காமல் போதல், தையல் போட்ட இடத்தில் தொற்று ஆகியவை ஏற்படலாம். கால்களில் ரத்தக்கட்டால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து உண்டாகும் நிலையும் மிக அரிதாக ஏற்படுகிறது.

முன்கூட்டியே தேதி குறித்து குழந்தையை வெளியே எடுக்கும் போது, குழந்தை போதுமான வளர்ச்சி அடையாமல் போகும் நிலை ஏற்படலாம். குழந்தை தானாகவே மூச்சு விடாமல் இருக்கும். அதை உயிர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். அறுவை சிகிச்சைக்குப் பின், வலி தெரியாமல் இருக்க, தாய்க்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டி இருக்கும். சொட்டு நீர் ஏற்ற, கைகளில் டியூப் சொருகப்பட்டிருக்கும். சிறுநீரை வெளியேற்ற, பிறப்புறுப்பில் கத்தீட்டர் போடப்பட்டிருக்கும். அடி வயிற்றில் தையல், அதன் மேல் பேண்டேஜ் போடப்பட்டிருக்கும். இத்தகைய கட்டுப்பாடுகளால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க இயலாத நிலை ஏற்படும். இத்தடைகளையும் மீறி, குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் உள்ளனர்.

சிலருக்கு போதுமான அளவு பால் சுரக்காது. பிறந்த சில நாட்களிலேயே மாட்டுப் பால் அல்லது பவுடர் பால் கொடுக்கும் நிலை ஏற்படும். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் கெடும்; நோய் எதிர்ப்புத் திறன் குறையும். தாய்ப்பால் கொடுக்காத போது, வேறு யாராவது குழந்தைக்கு பால் கொடுக்கும் நிலை ஏற்படும். இதனால், தாய் - குழந்தை தொடுதல் குறையும்.'சிசேரியன்' மூலம் குழந்தை பெற்றவர்களின் இடுப்பும் பெறுத்து விடுகிறது. தையல் போட்ட வயிறாக இருப்பதால், தசைக்கு மீண்டும் வலுவூட்டவோ, இடுப்பு அளவைக் குறைக்கவோ, உடனடியாக உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு வாரங்களிலேயே மெதுவாக நடனப் பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்ளலாம் என, தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சுகப் பிரசவம் அதிக நேரம் எடுக்கும். குடும்பம், கர்ப்பிணி, மருத்துவர் என அனைவருக்கும் பொறுமை தேவைப்படும். எனவே, சுகப் பிரசவத்திற்கு பதில், 'சிசேரியன்' முறை எளிதாகக் கருதப்படுகிறது.முதல் பிரசவம், 'சிசேரியன்' முறையிலானால், அடுத்ததும் அதேபோல் ஆகும் எனக் கூற முடியாது. அறுவை சிகிச்சை தான் தேவைப்படும் என்ற அறிகுறி தென்படாத வரையில், சுகப் பிரசவமும் ஏற்படலாம்.சுகப் பிரசவம் ஏற்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவமனையின் முந்தைய வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். சுகப் பிரசவம் எவ்வளவு நடத்தப்பட்டுள்ளன, 'சிசேரியன்' எவ்வளவு நடந்துள்ளது என்பதை அறிய வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும், 40 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது தாயின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, சகிப்புத் தன்மையை வளர்த்து, சுகப் பிரசவத்திற்கு, அவளை தயார்படுத்தும்.






      Dinamalar
      Follow us