PUBLISHED ON : மார் 11, 2012
எனது வயது 45. வலது காலில் திடீர் வீக்கம் ஏற்பட்டது. பரிசோதனையில் DVT என வந்துள்ளது. இது என்ன வியாதி? எஸ்.பாலகிருஷ்ணன், சாத்தூர்
Deep Vein Thrombosis என்பதன் சுருக்கமே DVT.. இதில் காலில் உள்ள, 'வெயின்'களில் ரத்தக்கட்டி ஏற்பட்டுள்ளது என பொருள். இது காலில் வீக்கமாகவும், வலியாகவும், நிறம் மாறியும் தென்படலாம். அல்லது Thrombosis எனப்படும் ரத்தக் கட்டிகள், மெதுவாக மேலே சென்று, இதயம் வழியாக, நுரையீரல் ரத்தக் குழாயை அடைத்துக் கொண்டு, Pulmonary Embolism எனப்படும் கொடூர பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இது மூச்சுத் திணறல் மற்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தும். ஆகவே, இதற்கு சிகிச்சை முறையாக, முதலில், ரத்தக் கட்டிகளை கரைக்கும் மருந்து வகையாக, Thrombolysis, Heparin F அல்லது Acitrom என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த ரத்தக்கட்டிகள் நுரையீரல் உள் செல்லாமல் இருக்க, 'ஐ.வி.சி., பில்டர்' என்ற, வலை போன்ற உபகரணமும் உள்ளது. இது, வயிற்றில் உள்ள ஐ.வி.சி., ரத்தக் குழாயில் பொருத்தப்படும். இதனால், காலில் இருந்து மேலே செல்லும் ரத்தக் கட்டிகள் தடுக்கப்படும்.
எனது வயது 71. நான்கு ஆண்டுகளுக்கு முன் பை-பாஸ் சர்ஜரி செய்துள்ளேன். நான் 'கிரீன் டீ' அருந்தலாமா? ராமன், மதுரை
ஜப்பான், சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளில், 'கிரீன் டீ' அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது, பதப்படுத்தப்படாத தேயிலையில் தயாரிக்கப்படுகிறது. இதில், 'ஆன்டி ஆக்சிடென்ட்' அதிகம் உள்ளது. தினமும் மூன்று டம்ளர், 'கிரீன் டீ' அருந்தினால் அது பல வழிகளில் நமக்கு நன்மை தருகிறது. மாரடைப்பு வரும் தன்மை குறைகிறது. சில வகை புற்றுநோய்களையும் ஓரளவு தடுக்கிறது. கிரீன் டீ அருந்துவதால், ஞாபக சக்தியும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே, தினமும் கிரீன் டீ அருந்துவது நல்ல பழக்கம்தான்.
எனது வயது, 28. எக்கோ பரிசோதனை செய்ததில் எனக்கு, ''RHDN on Calcific MS' என்ற வியாதி உள்ளதாக வந்துள்ளது. நான் திருமணம் செய்து கொள்ள லாமா?
பி. சித்ராதேவி, வேடசந்தூர்
MS என்பது Mitral Stenosis என்பதன் சுருக்கம். இதில் இதயத்தின் இடதுபுறம் உள்ள மைட்ரல் வால்வில் சுருக்கம் ஏற்பட்டுள்ளது என அர்த்தம். இது சிறுவயதில் ஏற்படும் ருமாட்டிக் பீவரின் பாதிப்பாகும். இதற்கு பலூன் சிகிச்சை மூலம், 'மைட்ரல் வால்வோ பிளாஸ்டி' என்ற ஆபரேஷன் இல்லாமல், காலில் ரத்தக்குழாய் வழியாக பலூனை செலுத்தி, எளிதில் சரிசெய்யலாம். இச்சிகிச்சையை வால்வுகளில் சுண்ணாம்பு படியாமல் இருந்தால் செய்யலாம். சுண்ணாம்பு படிந்திருந்தால் ஆபரேஷன் செய்ய வேண்டியதிருக்கும். சுண்ணாம்பு படிவதை, எக்கோ மற்றும், கூஉஉ பரிசோதனைகளின் மூலம் அறியலாம். நீங்கள் பலூன் சிகிச்சையை மேற்கொண்டு திருமணம் செய்து, கர்ப்பமும் தரிக்க முடியும்.
டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை
