என் உயரத்தை அதிகரிக்க முடியுமா? சில சந்தேகங்கள்... சில பதில்கள்!
என் உயரத்தை அதிகரிக்க முடியுமா? சில சந்தேகங்கள்... சில பதில்கள்!
PUBLISHED ON : ஜூலை 18, 2010

எம்.சந்தானம், இளையான்குடி: என் வயது: 19; உயரம்: 165 செ.மீ.,; எடை: 58 கி.கி., நான் காவல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். காவல்துறையில் பணியாற்றுவதற்கு உயரம் 170 செ.மீ., என் லட்சியத்திற்கு இடையூறாக உள்ள, என் உயரத்தை அதிகரிக்க, ஏதேனும் பயிற்சிகள் உண்டா?
ஒருவரின் உடல் உயரம், அவர் தாய், தந்தையின் சராசரி உயரத்தைப் பொறுத்து தான் அமையும்; பாரம்பரிய உடல் வளர்ச்சி முறை இது. எனினும், பாரம்பரியமாகக் குறைந்த உயரத்துடன் பிறந்த ஜப்பானியர்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின், சத்துணவு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம், தங்கள் உயரத்தை, 2 அங்குலம் வரை கூட்டினர்.
ஆண்களுக்கு, 21 வயது வரை வளர்ச்சி உண்டு. உங்கள் உயரத்தை அதிகரிக்க, தினமும் 40 நிமிடம் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். 10 முதல் 20 முறை, 'புல்-அப்' எடுங்கள். உடல் உயரத்தைக் கூட்ட, அற்புத மாத்திரைகள் ஏதும் இல்லை. உங்கள், பி.எம்.ஐ., எண், 22. அதை, 23 ஆக அதிகரிக்கும் வகையில் உணவு உண்ணுங்கள்.
சி.சாவித்ரி, கோவை: என்னுடைய 9 வயது மகள், நீர் அதிகம் குடிக்க மறுக்கிறார். அதனால், தினமும் ஓரிருமுறை கூட சரியாக சிறுநீர் கழிப்பது இல்லை. வியர்வையும் துர்நாற்றமும் வீசுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
பருவ வயது வரை, உடல் வியர்வைக்கென தனி மணம் கிடையாது. சுய சுத்தம் குறைதல் அல்லது நோய்வாய்ப்பட்டால் மட்டுமே, வியர்வையில் நாற்றம் உண்டாகும். உங்கள் மகளின் வாயில், சொத்தை ஏற்பட்டுள்ளதா என்பதைப் பாருங்கள். காதில் சீழ் ஏற்படுகிறதா என்பதையும் கண்காணியுங்கள். தினமும் இருவேளை, நீக்கோ சோப்பு போட்டு, பீர்க்கங்காய் நார் தேய்த்துக் குளிக்க வேண்டும். டால்கம் பவுடர் பயன்படுத்தக் கூடாது. நைலான், பாலியஸ்டர் ஆகியவற்றால் ஆன உடைகளைத் தவிர்த்து, பருத்தி உடைகளை அணிந்து கொள்ளச் செய்யுங்கள். தினமும் இரண்டு வேளை, உடைகளையும், சாக்சையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அவருடைய உடைகளை, டிடர்ஜன்ட் பவுடரால் துவைக்க வேண்டும். அவர் தினமும், 2 முதல் 3 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் முன் ஒரு லிட்டர், பள்ளியில் ஒரு லிட்டர், பள்ளியிலிருந்து வந்ததும் ஒரு லிட்டர் நீர் குடிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதைச் செய்ய வேண்டியது, தாயாகிய உங்கள் பொறுப்பு.

