PUBLISHED ON : டிச 19, 2010

சாம்சன், அம்பத்தூர்:
ஆணுறையை நீண்ட காலம் பயன்படுத்தலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா? ஆணுறையில் பயன்படுத்தப்படும் திரவம், பாதுகாப்பானதா?
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ஆணுறையை மறுபடியும் பயன்படுத்தக் கூடாது. நீண்ட காலத்திற்கு ஆணுறையைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதே. இதை பயன்படுத்தியவர்களில், 15 சதவீதத்தினரே மீண்டும் கர்ப்பம் தரித்திருக்கின்றனர். உங்கள் மனைவிக்கு மாதவிலக்கு ஏற்படாமல் போனால், மகப்பேறு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். 'லேட்டக்ஸ்' என்ற மரப் பாலிலிருந்து தயாரிக்கும் பொருளால் ஒவ்வாமை ஏற்படாது என்றால், இந்த ஆணுறையாலும் பக்க விளைவுகளை ஏற்படாது. ஆணுறையில் போடப்படும் திரவம், சிலிகான், நீர் அல்லது வேறு சில பொருட்களாலானதாக இருக்கலாம். வழவழப்பு தன்மைக்காக அது பயன்படுத்தப்படுகிறது.
கனகவல்லி, கோவை:
இறுதி மாதவிலக்கு கண்டு ஆறு ஆண்டுகளாகிறது. ஆறு மாதங்களாக திடீரென ரத்தப்போக்கு ஏற்படுகிறது; ஒரு சில சொட்டுகள் மட்டும். பின், நின்று விடுகிறது. இப்படி ஏற்படுவது ஆபத்தின் அறிகுறியா?
இறுதி மாதவிலக்குக்கு பிந்தைய ரத்தப்போக்கு இது. 30 சதவீத பெண்களுக்கு இது போன்று ஏற்படலாம். உடல் எடை அதிகரிப்பு அல்லது ஹார்மோன் மாற்றங்களால் இது போன்று ஏற்படலாம். சில நேரங்களில், கர்ப்பப்பையின் உள் பூச்சு ஜவ்வு திடீரென வளர்வதாலும் இப்படி ஏற்படலாம். இது, சில நேரங்களில் புற்றுநோயாக மாறும் என்பதால், மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதித்து கொள்வது நல்லது.
தயாளன், வேலூர்:
என் தந்தை, படியேறும் போது மூச்சிறைப்பதாகக் கூறினார். எக்கோ மற்றும் டாப்லர் பரிசோதனை செய்ததில், மகாதமனியில் அடைப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 79 வயதாகிறது... முதியோர்களில் 4 சதவீதம் பேருக்கு மகாதமனி சுருக்க நோயோ, மகாதமனி ஒழுக்கு நோயோ ஏற்படுகிறது. எந்த நோயாக இருந்தாலும், இருதயத்தின் கீழ் இடது அறைக்கு அதிக வேலை ஏற்படுகிறது. இது வெளியேற்றும் ரத்தம், அடைபட்ட குழாய் வழியே வெளியேற வேண்டியுள்ளதால், இதற்கு வேலை அதிகம். இருதயத்திற்கு ரத்தம் கொடுக்கும் குழாய், இதனருகிலேயே இருப்பதால், அதில் அழுத்தம் ஏற்பட்டு, இருதயத்திற்கே ரத்த சப்ளை குறையும் அபாயம் ஏற்படுகிறது. இதனால், உடற்பயிற்சி செய்யும் போது மயக்கம், நெஞ்சு வலி ஆகியவை ஏற்படும். உங்கள் தந்தை படியேறும் போது, அதற்கான முயற்சி அதிகளவில் தேவைப்படுவதால், மூச்சிறைப்பு ஏற்படுகிறது. சுருங்கிய குழாயை சீர் செய்யவோ, மாற்று குழாய் பொருத்தும் வகையிலோ அறுவை சிகிச்சை மேற்கொள்வது, முதியோரின் ஆயுளை நீட்டிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
சங்கரநாராயணன், நெல்லை:
என் மகனுக்கு இருதயத்தில் துளை இருப்பதாக கண்டறியப்பட்டது. ஒரு வயதான போது, அதை மருந்து மூலமே, ஒரு மருத்துவர் குணப்படுத்தினார். இப்போது என் மகன் தொடர் இருமலால் அவதிப்படுகிறான். இருதயத்தில் துளை இருப்பதால் தான் இதுபோன்று இருமல் ஏற்படுகிறது என, இன்னொரு டாக்டர் கூறுகிறார். எது உண்மை? குழந்தைகளில் 2 முதல் 5 சதவீதத்தினருக்கு, இருதய துளை இருக்கிறது. பிறந்த சில மாதங்களில், 90 சதவீதத்தினருக்கு, இந்த துளை தானாகவே அடைபட்டு விடுகிறது. அது போன்று அடைபடவில்லை என்றாலோ, துளை பெரிதாக தெரிந்தாலோ, அறுவை சிகிச்சை தான் பரிந்துரைக்கப்படுகிறது.