PUBLISHED ON : டிச 19, 2010

வி.ராமசாமி, அருப்புக்கோட்டை:
நான் ஹார்ட் பெயிலியர் நோய்க்காக, கடந்த இரு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன். எக்கோ பரிசோதனையில் E.F., 35 சதவீதம் என வந்துள்ளது. இது எதை குறிக்கிறது?
Ejection Fraction என்று, இருதயத்தின் ரத்தம் வெளியேற்றும் திறனை குறிக்கும் அளவு இது. தேவையான அளவு 60 சதவீதம். இத்திறன் குறைய, பல காரணங்கள் உள்ளன. ரத்தக்குழாய் அடைப்பு, இருதய தசை நோய்கள், வால்வுகளில் கோளாறு, ரத்த அழுத்தம், பிறவி இருதய நோய், ரத்தசோகை போன்றவை இருக்கலாம். என்ன பாதிப்பு என்பதை கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சாப்பிடும் நீர் மற்றும் உப்பு அளவை குறைப்பது அடிப்படை சிகிச்சை.
எஸ்.சண்முகம், ஆண்டிப்பட்டி:
எனக்கு பை-பாஸ் சர்ஜரி செய்து இரண்டாண்டு ஆகிறது. எனது L.D.L., கொழுப்பின் அளவு, 95 மி.கி.,யாக உள்ளது. 'ஸ்டேட்டின்' மாத்திரை தேவையில்லை என, டாக்டர் கூறுகிறார். நண்பரோ, அதை சாப்பிட வேண்டும் என்கிறார். என்ன செய்வது?
கொழுப்பை குறைக்கும் மாத்திரை இது. மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கிறது. வந்தவருக்கு மீண்டும் வராமல் தடுக்கிறது. எனவே சர்க்கரை, ரத்தக்கொதிப்பு நோயாளிகள், ரத்தக்குழாய் நோய்கள், பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக கோளாறு போன்ற வியாதி உள்ள அனைவரும், 'ஸ்டேட்டின்' வகை மாத்திரை சாப்பிட வேண்டும்.
உங்களுக்கு ஏற்கனவே பை-பாஸ் சர்ஜரி செய்து இரண்டாண்டு ஆகிறது. உங்களுக்கு எல்.டி.எல்.,ன் அளவு 95 மி.கி., என்றாலும் அவசியம், 'ஸ்டேட்டின்' மாத்திரை சாப்பிட வேண்டும். ரத்தக்குழாய் நோய்களுக்கு இந்த மாத்திரை அவசியம் என்பது நிரூபணமான ஒன்று.
கே.ராமகிருஷ்ணன், மதுரை:
எனக்கு சில ஆண்டுகளாக ரத்தத்தில் Triglyceride அளவு 300 மி.கி., என்ற அளவிலேயே உள்ளது. இரண்டாண்டுகளாக, Atorva Statin மாத்திரை சாப்பிடுகிறேன். இருந்தும் டி.ஜி.எல்., அளவு குறையவில்லை. என்ன செய்வது?
ரத்தத்தில் டி.ஜி.எல்., அளவு 150 மி.கி., கீழ் இருக்க வேண்டும். இது கெட்ட கொழுப்பு. இந்தியர்களுக்கு, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு, டி.ஜி.எல்., அளவு பொதுவாகவே அதிகமாக உள்ளது. இதை குறைக்க முதலில் வாழ்க்கை முறை மாற்றம் அவசியம். உணவில் எண்ணெயை தவிர்ப்பது, சர்க்கரை, உப்பின் அளவை குறைப்பது, பொரித்த உணவை அறவே தவிர்ப்பது, அரிசி மற்றும் பால் வகை உணவை குறைப்பது முக்கியம். இத்துடன் தினமும் நடைபயிற்சியும் அவசியம். டி.ஜி.எல்., அளவை குறைக்க, நல்ல மாத்திரைகள் உள்ளன. குறிப்பாக Fibrate, Niacin மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகள் டி.ஜி.எல்., அளவை குறைக்கின்றன. ஸ்டேட்டின் வகை மாத்திரைகளில் Rosuva Statin வகை மாத்திரைகள் டி.ஜி.எல்., அளவை குறைக்கிறது. எனவே உங்கள் டாக்டரிடம் ஆலோசனை செய்து, எந்த மாத்திரை தேவையோ அதை எடுத்து கொள்ளவும்.
ஆர்.நிர்மலா, கோவை:
தினமும் உடற்பயிற்சி செய்யும் நான், இடையிடையே சில மாதங்கள் விட்டு விடுகிறேன். இது சரியானதா? உடற்பயிற்சி செய்யும் பலரிடமும் காணப்படும் குறைபாடு இது. சில மாதங்கள் தீவிரமாக செய்து விட்டு, பின்னர், பல மாதங்கள் லீவு எடுக்கின்றனர். இது சரியானதல்ல. உடற்பயிற்சி என்பது தீவிரமாக இருக்க வேண்டும் என்பது தவறான கருத்து. உடற்பயிற்சியை தீவிரமாக இல்லாமலும், மிகவும் லேசாக இல்லாமலும் செய்ய வேண்டும். உடற்பயிற்சியை ரெகுலராக மேற்கொள்வது முக்கியம். அதாவது தற்போதுள்ள மருத்துவ வழிகாட்டுதல்படி, தினமும் அரை மணி நேரமாவது, வாரம் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். முடிந்தால் தினமும் 45 நிமிடங்கள், வாரத்தின் ஏழு நாட்களிலும் செய்வது மிகவும் நல்லது.
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.