PUBLISHED ON : மார் 03, 2013

எனது வயது 45. நாக்கு, ஈறுகளில் சில இடங்களில் வெள்ளை திட்டுகள் உருவாகி உள்ளன. பல் தேய்க்கும்போது அவற்றின் மேல்பட்டால் ரத்தம் வருகிறது. சாப்பாடு விழுங்க சிரமமாக உள்ளது. நான் என்ன செய்வது?
வாயினுள் உள்ள 'காண்டிடா' என்ற வகை பூஞ்சையால் ஏற்படும் வாய்ப்புண் இது. சாதாரணமாகவே எல்லோருக்கும் வாயில் சில வகை கிருமிகளும், பூஞ்சைகளும் இருக்கும். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இவற்றால் புண்கள் மற்றும் வெண்மை படலங்கள் ஏற்படும். இப்புண்கள் உடலில் உள்ள மற்ற பிரச்னைகளின் அறிகுறியாகும். ஸ்டீராய்டு மாத்திரை அல்லது கர்ப்பத்தடை மாத்திரை சாப்பிடுவோர், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதோர், சிலவகை புதுநோய் உள்ளவர்கள், புகைபிடிப்போர், பொருந்தாத பல்செட் அணிவோருக்கு, இவ்வகைப் புண் வருவதற்கு வாய்ப்பு அதிகம். இதை உரியநேரத்தில் கவனிக்காமல் விட்டால் தொண்டைவரை பரவிவிடும். இதை முறையாக பரிசோதனை செய்து 10 முதல் 14 நாட்கள் வரை மாத்திரை சாப்பிட வேண்டும். முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். இதன் மூலம் அவற்றை சரிசெய்யலாம்.
என் மகள் கர்ப்பமாக இருக்கிறாள். அவளுக்கு சில நாட்களாக பல்வலி உள்ளது. ஈறுகளில் ரத்தம் வருகிறது. கர்ப்பமாக இருப்பவர்கள், பல் சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பானதா?
கர்ப்ப காலத்தில் பற்களையும், ஈறுகளையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது. ஏனெனில், கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன்களால் ஈறுநோய்கள் உருவாகும். சரியான இடைவெளியில் பற்களையும், ஈறுகளையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களும், கடைசி 2 மாதங்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சமயங்களில் பல் சிகிச்சையை தவிர்ப்பது நல்லது. மற்ற நேரங்களில் வலியோ, வீக்கமோ ஏற்பட்டால் அதற்குரிய சிகிச்சையை மட்டும் செய்தால் போதும். கர்ப்பகாலம் முடிந்தபின், முழு சிகிச்சையை செய்து கொள்ளலாம். பல்லுக்கான எக்ஸ்ரேயை தவிர்ப்பது அவசியம். பல் டாக்டரிடம் நீங்கள் சாப்பிடும் அனைத்து மருந்து மாத்திரைகளையும் கூறுங்கள். அதற்கேற்ப உங்களுக்கு சிகிச்சையும் கொடுக்கப்படும். மாத்திரைகளும் அமையும். முறையான அணுகுமுறையும், சரியான பராமரிப்பும், கர்ப்ப காலத்தில் பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441-54551