PUBLISHED ON : மார் 03, 2013
எனது வயது 62. இரண்டு ஆண்டுகளாக மூட்டுவலி உள்ளது. மூட்டு தேய்மானம் அடைந்துள்ளது என டாக்டர் கூறுகிறார். வலிநிவாரண மருந்து எடுத்தால் சிலமணி நேரம் வலி குறைகிறது. அதை தொடர்ந்து எடுக்கலாமா?
வலி நிவாரண மருந்துகள், பாராசிட்டமால், NSAID மற்றும் OPIOD டெரிவேடிவ்ஸ் ஆகிய மூன்று குழுமங்களாக உள்ளன. பாரசிட்டமால் மருந்து, வலி நிவாரணத்தை மிதமாக கொடுத்தாலும், பக்கவிளைவுகள் குறைவு. NSAID வகையைச் சேர்ந்த மருந்துகள் (உம்: இபுப்புரோபென், டைக்ளோபெனாக்) வலிநிவாரணம் நன்றாக இருந்தாலும், இதன் பக்கவிளைவுகள் அதிகம். வயிற்றுப் புண், வயிற்றில் ரத்தக்கசிவு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறு சகஜமாக காணப்படுகிறது.
OPIOD டெரிவேடிவ்ஸ் மருந்துகள் வயிறு, குடல்சார்ந்த தொந்தரவுகள் கொடுக்கும் சற்று மயக்கத்தையும் உண்டாக்கும். ஆகவே நீங்கள் எந்த வகை வலிநிவாரண மருந்து எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை டாக்டரிடம் கேட்டு, அவர் கண்காணிப்பு இல்லாமல் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
எனது வயது 34. மாடிப்படி ஏறி, இறங்கும்போதும், தரையில் அமரும்போதும் முழங்காலில் அதிகமான வலி உண்டாகிறது. இதற்கு காரணம் என்ன?
நீங்கள் கூறும் வலி, முழங்கால் மூட்டில் உள்ள சிரட்டை எலும்பில் உண்டாகிறது. மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப அறிகுறி.
சிலருக்கு மூட்டு வீக்கமும் ஏற்படலாம். சிரட்டை எலும்பின், பின்பகுதியில் உள்ள ஜவ்வின் தன்மை, முழங்காலில் இணையும் முன், தொடை தசைகளின் வலிமையை பொறுத்ததே ஆகும். இந்த தசைகளை, முறையாக பிசியோதெரபி மூலம் வலுப்படுத்தினால் 2 மாதங்களில் இந்த வலியில் முன்னேற்றத்தை காணமுடியும். அவ்வாறு செய்து வலி நிவாரணம் கிடைக்காதவர்கள் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்து, குருத்தெலும்பிலோ, ஜவ்விலோ நெரிசல் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். எலும்பு மூட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. ஆறு மாதங்களாக தோள்பட்டையை உயர்த்த முடியாமலும், வலியினாலும் தவிக்கிறேன். மருத்துவரிடம் ஆலோசித்ததில், இதை 'புரோசன் ஷோல்டர்' என்றனர். இதற்கு நான் என்ன செய்வது?
புரோசன் ஷோல்டர் என்பது தோள்மூட்டை சூழ்ந்திருக்கும் திசுக்களும், சுற்றுப்பட்டை தசையிலும், உள்வீக்கமடைந்து இறுகிக் கொண்டு இருக்கிறது என்று பொருள். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சகஜமாக காணப்படுகிறது. இது குணமடைவதற்கு பல மாத காலம் ஆகலாம். குணமாவதை துரிதப்படுத்த முறையான பிசியோதெரபி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிசியோதெரபி எடுத்தும் குணமாகாதவர்கள் நவீன தொழில் நுட்பத்தில், நுண்துளை சிகிச்சை வழியாக பூரணமாக குணப்படுத்த முடியும். இதை ஆர்த்ராஸ்கோபிக் காப்சுலர் ரிலீஸ் என்பர். கூடிய விரைவில் தோள்மூட்டின் வலி நீங்கி, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,
மதுரை. 98941-03259