PUBLISHED ON : ஏப் 14, 2013

கே. சக்திவேல், மதுரை: என் வயது 32. கடும் வெயில் காரணமாக அடிக்கடி 'கூல் டிரிங்க்ஸ்' அருந்துகிறேன். இதனால் பாதிப்பு வருமா?
சமீபத்தில் நடந்த ஒரு மருத்துவ ஆய்வின்படி, கூல் டிரிங்க்ஸ் அதிகம் குடிப்பவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு ஏற்படுவதுடன், மாரடைப்பு வரும் தன்மையும் கூடுகிறது என தெரிய வந்துள்ளது. கூல் டிரிங்க்ஸ் அதிகம் குடிப்பதை தவிர்த்தாக வேண்டும். வெயில் காலத்திற்கு என்றுமே ஏற்றது 'பிரஷ்' பழச்சாறு, இளநீர் மற்றும் தண்ணீர் அதிகம் குடிப்பது தான் சிறந்ததாகும். இந்தக் கோடையில் நாள் முழுவதும் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. என்றாவது ஒருநாள் கூல்டிரிங்க்ஸ் குடிப்பது தவறல்ல.
ஆர். லட்சுமணன், திண்டுக்கல்: 'கொரனரி ஆஞ்சியோகிராம்' என்றால் என்னவென்று விளக்கமாகக் கூறுங்களேன்...?
இருதயம் என்பது தசையால் ஆன ஒரு 'பம்ப்'தான். இந்த தசைக்கே ரத்த ஓட்டம், இடதுபுறம் உள்ள 2, வலதுபுறமுள்ள ஒரு ரத்தநாளம் வழியாகத்தான் செல்கிறது. இதைத்தான், 'கொரனரி ஆர்ட்டரீஸ்' (Coronary Arteries) என்பர். இந்த ரத்த நாளங்களில் ஏதும் அடைப்பு உள்ளதா என கண்டறியும் பரிசோதனைக்கு பெயர்தான், 'கொரனரி ஆஞ்சியோகிராம்' என்பது. இதற்கு காலில் இருந்தோ, கையில் இருந்தோ ஒரு ரத்தநாளத்தின் மூலம், 'கதீட்டர்' (சிறிய குழாய்) ஒன்றை இருதயம் வரை செலுத்தி, அந்தக் குழாயின் வழியாக ஒரு திரவத்தை (Controst) ரத்தநாளத்திற்குள் செலுத்துவர்.
இந்தத் திரவம் ரத்தநாளங்களுக்குள் செல்லும்போது, இது பல்வேறு கோணங்களில் எக்ஸ்ரே கதிர் மூலம் படம் பிடிக்கப்படுகிறது. இப்பரிசோதனையின் போதே, ரத்தநாளங்கள் சரியாக அமைந்துள்ளனவா, அதில் அடைப்பு உள்ளதா, அடைப்பு இருந்தால் எந்த இடத்தில், எத்தனை சதவீதம் உள்ளது என கண்டறிய முடியும். இதன் முடிவுக்கு ஏற்ப சிகிச்சை முறையும் அமையும். சிகிச்சை முறையானது, 3 வகைகளில் உள்ளது. அதாவது மருந்து மூலமோ, பலூன் அல்லது ஸ்டென்ட் சிகிச்சையோ, பைபாஸ் சர்ஜரியோ செய்யப்படுகிறது.
ஜி. பாலமுரளி, காரைக்குடி: எனக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது 9 வகை மாத்திரைகளை எடுத்து வருகிறேன். இம்மாத்திரைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே மருந்தாக எடுத்துக் கொள்ள முடியுமா?
தற்போது பல மருந்துகளை ஒருங்கிணைத்து ஒரே மாத்திரையாக பயன்படுத்தும் வகையில், மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தான், 'Polypill' என்பர். 'பாலி' என்றால் 'பல' என்றும், 'பில்' என்றால் 'மருந்து' என்றும் பொருள். இதில், தற்போது ஐந்து வகை மருந்துகள் ஒருங்கிணைந்து அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் உள்ளடங்கி இருப்பது என்னவெனில், 3 ரத்தக்கொதிப்பு, ஒரு ஆஸ்பிரின், ஒரு ஸ்டேட்டின் வகை மருந்துகளாகும். இதே 'பாலிபில்' 2, 3, 4 மருந்துகளாக உள்ளதாகவும் கிடைக்கிறது. தற்போது , மாரடைப்புக்கான தடுப்பு மருந்தாகவே இம்மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் டாக்டரிடம் கலந்து ஆலோசனை செய்து, இந்த ஒருங்கிணைக்கப்பட்ட மாத்திரையை உங்களுக்கு பொருந்துமா என கண்டறிந்து பயன்படுத்தலாம்.
பி. நிர்மலா, விருதுநகர்: கணவருக்கு ஆறுமாதங்களுக்கு முன் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அவரது உடல் நிலை நன்றாக உள்ளது. அவர் எப்போதும் படுத்து ஓய்வு எடுத்து வருகிறார். அவர் மற்றவர்களைப் போல பணிக்கு செல்ல இயலுமா?
இருதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய, நெஞ்சில் இருந்தோ, காலில் இருந்தோ, கையில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து, இருதய ரத்தநாளத்தில் பொருத்துவது பைபாஸ் சர்ஜரி. இந்த பைபாஸ் சர்ஜரி செய்வதே, சுறுசுறுப்பான இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காகத்தான். பொதுவாக இந்த ஆப்பரேஷன் செய்து கொண்டவர்களுக்கு மூன்று மாதங்கள் கழித்து, மீண்டும் ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, எக்கோ மற்றும் டிரெட்மில் பரிசோதனை செய்யப்படும். இவை அனைத்தின் முடிவுகளும் நார்மல் என்றால், ஒருவர் எளிதில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலும். சரியான உணவுப் பழக்கம், தினசரி நடைப்பயிற்சி, வேளை தவறாமல் மருந்து எடுத்துக் கொள்வது, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வதும் அவசியமாகும்.
இவை அனைத்தையும் சரியாக அமைத்து, உடல், மனதளவில் அதிக சிரமமின்றி அனைத்து வேலைகளிலும் நன்கு செயல்பட முடியும். எனவே உங்கள் கணவரை ஊக்குவித்து மீண்டும் பணிக்கு செல்ல உதவுங்கள்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344