PUBLISHED ON : ஏப் 14, 2013

என் வயது 30. பத்தாண்டுகளாக ஆஸ்துமாவுக்கு 'இன்ஹேலர்' பயன்படுத்துகிறேன். இப்போது தொந்தரவு இல்லை. கோடையில் வெப்பத்தை சமாளிக்க, 'ஏசி'யை பயன்படுத்தலாமா?
மிக குளிர்ந்த காற்று நம் மூச்சுக் குழாய்க்குள் செல்லும்போது, அதில் சுருக்கம் ஏற்பட்டு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படலாம். மிதமான குளிர்காற்று நம் மூச்சுக் குழாய்க்குள் சென்றால் சுருக்கம் ஏற்படுவதில்லை. மிதவெப்ப நிலையில் 'ஏசி'யை பயன்படுத்தலாம்.
'ஏசி' இயந்திரத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். ஈரமாக இருக்கும் 'ஏசி' அறைக்குள் பூஞ்சைகள் இருக்க வாய்ப்பு உண்டு. இது நுரையீரலில் அலர்ஜியை உண்டு பண்ணலாம். நன்கு சர்வீஸ் செய்த 'ஏசி' இயந்திரத்தை மித வெப்பநிலையில் பயன்படுத்தலாம். 'ஏசி' அறைகள் பெரும்பாலான நேரம் மூடி இருந்தாலும், தினமும் சுத்தப்படுத்த வேண்டும். 'ஏசி'யின் காற்று உங்கள் முகத்திற்கு நேராக இல்லாமல் பயன்படுத்தலாம். இக்குறிப்புகளை நிறைவேற்றி இருந்தாலும், 'ஏசி' அறைக்குள் இருக்கும்போது தொடர்ந்து இருமல் ஏற்பட்டால், 'ஏசி'யை தவிர்ப்பது நல்லது.
என் தாய் வயது 50. அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக டாக்டர் கூறுகிறார். புகை பிடிப்போருக்குத்தானே இந்நோய் வரும். தாயாருக்கு புகையிலை பழக்கம் இல்லாத நிலையில் இந்நோய் ஏற்பட்டது எப்படி?
சிகரெட் பிடிப்போருக்கு நுரையீரல் நோய் ஏற்படுகிறது. அவர்களுக்கு அருகில் இருப்பவர்களை 'பாசிவ் ஸ்மோக்கர்'கள் என்பர். அவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். உதாரணமாக, உங்கள் தந்தை புகைபிடித்தால், அவரது அருகில் இருக்கும் தாய்க்கும் பாதிப்பு ஏற்படும். புகைப்பவர் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். அடுப்புப்புகை, குப்பை எரிக்கும் போது ஏற்படும் புகை, தொழிற்சாலைகளில் வெளியேறும் புகை, கொசுவர்த்திச் சுருள் புகையும், நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
எல்லாவித புகையையும் தவிர்க்க வேண்டும்.
என் வீட்டில் நாய்க்குட்டியை மகள் பராமரிக்கிறார். எந்நேரமும் அதனுடனே இருக்கிறார். ஒரு வாரமாக அவருக்கு இரவில் இருமல் உள்ளது. நாயுடன் இருப்பதால் இருமல் ஏற்படுவதாக தோழி கூறுகிறார். இது சரியா?
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய், பூனை, பறவைகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. செல்ல பிராணிகளில் இருந்து வெளியாகும் கழிவுகள், அதன் ரோமம் மற்றும் பிராணிகளின் தோலில் காணப்படும் உண்ணிப் பூச்சிகள், நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கலாம். நுரையீரலில் ஹைடேடிட் சிஸ்ட்ஸ், நுரையீரல் அலர்ஜி ஏற்படலாம். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், பிராணிகளிடம் இருந்து சற்று தள்ளி இருக்க வேண்டும்.
அவற்றை சமையலறைக்குள்ளும், படுக்கை அறைக்குள்ளும் அனுமதிப்பது நல்லதல்ல. வேண்டுமானால் உங்கள் வீட்டு நாய்க்கு ஒரு அறையை ஒதுக்கிக் கொடுக்கலாம். அல்லது வீட்டுக்கு வெளியில் ஒரு கூடாரம் அமைத்துக் கொடுக்கலாம். உங்கள் மகளை நாய்க்குட்டியிடம் இருந்து சற்று விலகி இருக்கும்படிச் சொல்லுங்கள். அருகில் உள்ள டாக்டரிடம் ஆலோசனை பெற்று, இருமல் மருந்து வாங்கிக் கொடுங்கள்.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147