PUBLISHED ON : டிச 30, 2012
கங்காதரன், விருதுநகர்: என் முன் பற்களில், சில ஆடுகின்றன; சில நேரங்களில் லேசான வலியும் உள்ளது. இப்பற்களை எடுக்காமல் சிகிச்சை செய்ய முடியுமா?
பற்கள் ஆடுவதற்கு காரணம், அதைச் சுற்றியுள்ள ஈறுகளும், எலும்பும் தேய்ந்து, பற்கள் பிடிமானம் இல்லாமல் போவது தான். பெரும்பான்மையாக ஈறு நோய்களாலும், சில நேரங்களில் கோணலான பல் வரிசையாலும், இது போன்று தேய்மானம் ஏற்படும். அப்போது, இருவகை சிகிச்சை முறைகளை, ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்.
ஒன்று, பற்களின் உட்புறத்தில் இருந்து, அழுக்கு மற்றும் கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும். மற்றொன்று, பற்களின் வெளிப்புறத்தில், 'ஸ்ப்லின்டிங்' எனப்படும் சிகிச்சையை செய்ய வேண்டும். இம்முறையில், ஆடும் பற்களை, அதற்கு இருபுறமும் உள்ள பற்களுடன் இணைத்து விட வேண்டும்.
இப்படி செய்யும்போது, பற்கள் நிலையாக இருக்கும். கிருமிகளை நீக்கிவிட்ட நிலையில், மீண்டும் எலும்பும், ஈறுகளும் பலம் பெற்று, நாளடைவில் ஆடும் பற்கள் குணமடையும்.
லட்சுமணன், விருத்தாச்சலம்: பற்களை அடைப்பதற்கும், 'கேப்' போடுவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
ஒரு பல்லில் சொத்தை சிறிதாக இருக்கும்போது, சொத்தையை அகற்றி விட்டு பல்லை அடைத்து விடலாம். அதே பல்லில், சொத்தை நிறைய பரவி, பல்லின் பகுதியை இழந்து விடும் நிலையில், பல்லை அடைப்பது பயனளிக்காது. பல்லின் பலம் வெகுவாக குறைந்து விடும்.
அப்போது தான், பல்லின் மேல், 'கேப்' போட வேண்டும். மூன்று வகை, 'கேப்'கள் பயன்படுத்தப்படுகின்றன. உலோகத்தால் ஆன, 'கேப்'கள் பலமானவை. ஆனால், வாயினுள், உலோகத்தின் நிறம் தெரியும். உலோகத்தின் மேல், செராமிக் சேர்ந்த, 'கேப்' கடிப்பதற்கு பலமாகவும் இருக்கும். பார்ப்பதற்கும், பல்லின் நிறத்திலேயே இருக்கும். உலோகமே சேர்க்காமல், முற்றிலும் செராமிக்கிலும், 'கேப்' போடலாம்.
முன் பற்களுக்கு, இவற்றை பயன்படுத்தலாம். உலோகத்தின் சுவடே இல்லாமல், இயற்கை பற்கள் போலவே இருக்கும்.
பற்களின் அமைப்பையும், தேவையையும் பொறுத்தே, 'கேப்'கள் தேர்வு செய்யப்படுகின்றன.
டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
94441 54551