PUBLISHED ON : டிச 09, 2012
பல் டாக்டரிடம் செல்லும்போது அடிக்கடி எக்ஸ்ரே எடுக்க வேண்டியுள்ளது. இதனால் ஏதாவது பாதிப்பு வருமா?
பல் மருத்துவத்தில் எக்ஸ்ரே பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. பற்கள் மற்றும் தாடை எலும்புகளில் ஏற்படும் சில நோய்களை, எக்ஸ்ரேயினால் மட்டுமே துல்லியமாக அறியமுடியும். ஆனால், பற்களுக்காக எடுக்கப்படும், எக்ஸ்ரேயில் இருந்து வரும் கதிர்வீச்சு குறைவான அளவே.
பல நேரங்களில் எந்தப் பல்லில் வலி உள்ளதோ, அதற்கு மட்டும் சிறிய எக்ஸ்ரே எடுக்கப்படும். எல்லா பற்களையும், தாடையையும் சேர்த்து பார்ப்பதற்கு, 'ஓ.பி.ஜி.,' எனப்படும் பெரிய எக்ஸ்ரே எடுக்கப்படும். தற்போது உள்ள நவீன சாதனங்களால், எக்ஸ்ரே கதிர்வீச்சு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ரே கதிர்கற்றையை சிறியதாக்கி, அவை உடலில் படும் இடமும் சிறியதாக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே எடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் படச்சுருள்கள், முன்பைவிட, குறைந்த அளவு கதிர்வீச்சிலேயே தெளிவாக படங்களை பதிவு செய்கின்றன. இதைத் தவிர எக்ஸ்ரே எடுக்கும்போது அதற்கேற்ப ஈயத்தால் ஆன பாதுகாப்பு கவசம் அணிதல் அவசியம். எக்ஸ்ரேவினால் உடலுக்கு தீங்கு வராது.
எனது குழந்தைக்கு, இப்போதுதான் பற்கள் முளைக்க துவங்கியுள்ளன. அவனை எந்த வயதில் பல் டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.
ஒரு குழந்தையை முதன்முதலாக பல் டாக்டரிடம் காட்டுவதற்கு உகந்த வயது 6 மாதம் முதல் ஒருவயது வரை. இதுவே குழந்தையின் வாயையும், பற்களையும் சோதனை செய்ய சரியான நேரம். முதன்முறை பல் டாக்டரிடம் செல்லும்போது, பொதுவான பற்கள் மற்றும் ஈறுகள் பரிசோதனை செய்யப்படும். விரல் சப்புவது போன்று பற்களுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களின் அறிகுறிகள் உள்ளனவா என சோதித்து இருந்தால் தடுக்க வழிகள் கூறப்படும்.
பல்வரிசை சீராக இல்லாமல் இருந்தாலோ, தாடையில் ஏதேனும் குறை இருந்தாலோ இளம் வயதிலேயே சரிசெய்வது எளிது. சிறுவயதிலேயே பல் டாக்டரிடம் அழைத்துச் செல்வது பின்னாளில், பல சிகிச்சையின் மீதுள்ள பயம் இல்லாமல் போகும். இதனோடு சேர்த்து வீட்டிலும், குழந்தையின் பற்களை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும்.
மிருதுவான பிரஷ்ஷால் சிறிதளவு பேஸ்டுடன் பல் தேய்க்க வேண்டும். தூங்கும் முன் பால் குடித்தால் வாயை தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும். குழந்தைகளை, ஆறுமாதத்திற்கு ஒருமுறை பல் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை. 94441 54551