PUBLISHED ON : டிச 09, 2012

ருமாட்டிக் ஆர்த்ரிட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 சதவீதம் பேர், நுரையீரல் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், நீங்கள் டாக்டரின் ஆலோசனையின்படி, ஸ்டிராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதை நீங்கள் எடுக்காவிட்டால், நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
காயத்ரி, விருதுநகர்: ஐந்து வயதான எனது மகன், பள்ளியில் இருந்து வீடுதிரும்பும்போது, இருமல், சளியுடன் அவதிப் படுகிறான். இதற்கு ஒவ்வொரு முறையும் மருந்து கொடுப்பது அவசியமா?
பொதுவாக பள்ளியில் குழந்தைகள் நோய் கிருமிகளால் எளிதில் தாக்கப்படுகின்றனர். அதற்கு பெற்றோர் பயப்படத் தேவையில்லை. மருந்துகளும் அதிகம் கொடுக்கத் தேவையில்லை. ஒரு குழந்தை வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமி தொற்றால் தாக்கப்படும்போது, அக்கிருமியை எதிர்த்து போராடும் ஆன்டிபடீஸ் அதிகளவில் உருவாக்கப்படுகிறது. இந்த ஆன்டிபாடி உடம்பின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் இக்கிருமிகளை எதிர்த்து பல மெமோரி செல்களையும் உண்டாக்குகிறது.
உங்கள் குழந்தை வளர, வளர, இந்த மெமோரி செல் அதிகமாகும். பிற்காலத்தில் அவனுக்கு சிறுவயதில் தாக்கப்பட்டு இருந்த வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். ஆகையால் உங்கள் குழந்தைக்கு அதிக பாதுகாப்பு தரக்கூடாது. அதேசமயம் அதிக சளி இருமல் இருந்தால் மருந்து கொடுக்கவும் மறக்கக் கூடாது.
முருகேசன், திருச்சி: ஐம்பத்து ஐந்து வயதான எனக்கு, ஒரு ஆண்டாக மூச்சுத் திணறல் உள்ளது. என்னை பரிசோதித்த டாக்டர், நுரையீரல் ரத்த அழுத்த நோய் உள்ளது என்றார். அது என்ன பிரச்னை?
பல்மோனரி ஆர்ட்ரி என்று சொல்லப்படும் ரத்தக்குழாயின் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அதனை நுரையீரல் ரத்த அழுத்தம் என்பர். மற்ற சாதாரண ரத்த அழுத்தத்திற்கும், நுரையீரல் ரத்த அழுத்தத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
நுரையீரல் ரத்த அழுத்த நோய் பல காரணங்களால் ஏற்படுகிறது. பொதுவாக நுரையீரல் நோயின் தன்மை அதிகமாக இருந்தாலும், இருதயம் சம்பந்தமான நோய் இருந்தாலும், நுரையீரல் ரத்த அழுத்த நோய் ஏற்படும். மேலும் எந்த ஒரு காரணமும் இல்லாமலும் இந்நோய் வரலாம். இதை பிரைமரி பல்மோனரி ஹைபர்டென்ஷன் என்பர். உங்களுக்கு நுரையீரல் ரத்த அழுத்தம் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனை வாழ்நாள் முழுவதும் எடுப்பதும் அவசியம்.
மாரியப்பன், மதுரை: நாற்பத்து ஐந்து வயதாகும் எனக்கு, 2 ஆண்டுகளாக, Rheumatoid Arthritis மற்றும் மூச்சுத் திணறல் உள்ளது. இதற்கு ஸ்டீராய்டு மருந்தை எனது டாக்டர் பரிந்துரைத்தார். அதை தொடர்ந்து 2 ஆண்டாக எடுப்பதால், பக்க விளைவுகள் ஏற்படுமா?
ஸ்டீராய்டு மருந்துகள் ஒரு கத்தியைப் போன்றது. இதை நல்லவிதமாகவும், கெட்ட விதமாகவும் பயன்படுத்தலாம். நம் உடலுக்குள்ளேயே அட்ரீனல் என்ற ஸ்டீராய்டு சுரப்பி உள்ளது. நாம் மிகுந்த உடல்நலக் குறைவுடன் இருந்தாலும், மனஅழுத்த நோயுடன் இருந்தாலும், நம் உடம்பிற்கு அதிக ஸ்டீராய்டு தேவைப்படுகிறது. இதனால் அட்ரீனல் சுரப்பி, அதிக ஸ்டீராய்டை சுரக்கிறது.
ஒரு நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது, இயற்கையாக எவ்வளவு ஸ்டீராய்டு சுரக்கிறது என ஆராய்ந்து, பற்றாக்குறை இருந்தால் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கின்றனர். ருமாட்டிக் ஆர்த்ரிட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 சதவீதம் பேர், நுரையீரல் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் டாக்டரின் ஆலோசனையின்படி, ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதனை நீங்கள் எடுக்காவிட்டால், நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், டாக்டர் ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்ளும் ஸ்டீராய்டு மருந்துகளால், கேட்டராக்ட், சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் ஏற்படும். ஆகவே ஸ்டீராய்டு மருந்துகளை டாக்டரின் ஆலோசனையின்படி எடுத்து, பக்கவிளைவுகளை தவிர்ப்பீர்.
டாக்டர் எம்.பழனியப்பன், மதுரை. 94425-24147