PUBLISHED ON : பிப் 10, 2013
பி. ராஜன், மதுரை: எனக்கு 2 மாதங்களுக்கு முன் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், 2 ரத்தநாளங்களில் 30 சதவீத அடைப்பு உள்ளதென தெரிய வந்தது. இதற்கு ஸ்டென்ட் வைப்பது, பைபாஸ் சர்ஜரி போன்றவை தேவையா?
இருதய ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புக்கு மூன்று வகை சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து மாத்திரை சிகிச்சை, பலூன் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை, பைபாஸ் சர்ஜரி சிகிச்சை ஆகியவை அவை. ரத்தநாள அடைப்பு 70 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், மருந்து மாத்திரை சிகிச்சை போதும். இருந்தாலும் இந்த அடைப்பால் ரத்த ஓட்டத்திற்கு பாதிப்பு உள்ளதா என அறிய, 'டாலியம்' பரிசோதனை செய்வது நல்லது.
இன்று ரத்தக்குழாய் அடைப்புக்கு மருந்து மாத்திரை சிகிச்சை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ரத்த சர்க்கரை, ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது, கொலஸ்ட்ராலை சரியாக வைத்துக் கொள்வது, வாழ்க்கை முறை மாற்றம், வேளை தவறாமல் மருந்து எடுத்துக் கொள்வது ஆகியவை மூலம், அடைப்பு பாதிக்காமல் இருக்கவும், அடைப்பு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும் முடியும். எனவே இதுபோன்ற லேசான அடைப்புகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.
ஆர்.குமார், ராமநாதபுரம்: நான் 2 ஆண்டுகளாக தூக்கத்திற்காக 'ஆல்பிரசோலம்'-0.5 மி.கி., என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். இதை தொடர்ந்து எடுக்கலாமா?
தூக்கத்திற்காக மாத்திரை எடுப்பது நல்ல பழக்கம் அல்ல. தினசரி உடற்பயிற்சி செய்து, மதியம் தூங்காமல் இருந்து, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது நல்ல தூக்கத்திற்கு உதவும். இருந்தாலும் நீங்கள் மாத்திரைக்கு அடிமையாகிவிட்டீர்கள். மாத்திரையை நிறுத்த விரும்பி, அதை திடீரென நிறுத்தினால் உங்களால் தூங்க இயலாது. எனவே வாரம் ஒருமுறை, மாத்திரையின் அளவை மெதுவாக குறைத்து, சில வாரங்களில் நிறுத்த இயலும்.
சி.முத்துராமன், ராஜபாளையம்: எனது 28 வயது மகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. எங்கள் பரம்பரையில் யாருக்கும் இருதய நோய் இல்லை. அவனுக்கும் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இல்லை. புகைப்பழக்கம் மட்டும் உண்டு. இந்த வயதில் மாரடைப்பு எப்படி வந்தது?
மாரடைப்பு நோய்க்கு பரம்பரை இருதய நோய், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. இருப்பினும் சிறுவயதில் மாரடைப்பு ஏற்பட முதல் காரணம், இவை அனைத்துக்கும் மேலாக புகைபழக்கமே. இப்பழக்கம் இருதயத்தை கொடூரமாக பாதிக்கிறது. ரத்தநாளத்தில் ரத்தக்கட்டி ஏற்படுத்தி மாரடைப்பு ஏற்படவும் செய்யும். புகைப் பழக்கத்தை நிறுத்தினால் ஒரு இருதய நோயாளிக்கு கிடைக்கும் பலன், பலூன் சிகிச்சை, பைபாஸ் சர்ஜரி சிகிச்சையைவிட மேலானது என்பதே உண்மை. எனவே உங்கள் மகனிடம் புகைப் பழக்கத்தை அறவே நிறுத்தும்படி கூறுங்கள்.
எஸ்.சங்கரன், பெரியகுளம்: எனது வேலை காரணமாக காலையிலேயே அலுவலகம் சென்று விடுகிறேன். நான் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?
தினசரி நடைப் பயிற்சி செய்வது பல வகைகளில் உடலுக்கு பலனளிக்கிறது. குறிப்பாக எடை கூடுவதை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவையும், ரத்தஅழுத்தத்தையும் சரியாக வைத்துக் கொள்கிறது. கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்தி, இருதயத்திற்கு பலவகைகளில் நன்மையை அளிக்கிறது. இதுதவிர மனதுக்கும் பல வகைகளில் நன்மை தருகிறது. தினசரி ரெகுலராக உடற்பயிற்சி செய்வதே முக்கியமானது. சிலவாரம் கடுமையாக பயிற்சி செய்து, பல வாரங்கள் 'லீவு' எடுப்பது தவறானது. நாள்பொழுதில் காலையோ, மாலையோ, நேரம் கிடைக்கும்போது நடப்பதுதான் நல்லது. நடக்கும்போது, வயிறு நிறைய சாப்பிட்டபின் நடக்கக் கூடாது. அதேநேரத்தில் நடப்பதற்கு உகந்த நேரம் எதுவென கேட்டால், அது அதிகாலைப் பொழுதுதான்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 437 0703