PUBLISHED ON : பிப் 01, 2020

கொரோனா வைரஸ் பற்றி, தற்போது பரவலாக அனைவரும் பேசுகின்றனர். இதைப் பற்றி ஒரு டாக்டராக நான் சொல்வது, பயப்பட அவசியம் இல்லை. சிக்கன் சாப்பிட்டால், மட்டன் சாப்பிட்டால், கொரோனா வைரஸ் வரும் என்பது போன்ற பல வதந்திகள், தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
அசைவ உணவுகள் விற்கப்படும் மார்க்கெட்டில் இருந்து, வைரஸ் பரவியதாக தான் சொன்னார்களே தவிர, அவற்றை சாப்பிட்டதால் பரவியது என, சொல்லவில்லை. எந்த அசைவ உணவாக இருந்தாலும், நன்கு சமைத்து சாப்பிட்டால், கொரோனா வைரஸ் என்றில்லை, வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அரிது.கொரோனா வைரஸ் என்பது, சுவாச மண்டலத்தை பாதிக்கும் தொற்று. சளி, மூக்கில் நீர் வடிவது, இருமல், தும்மல் மூலம் மற்றவர்களுக்கு பரவக் கூடியது.கொரோனா வைரஸ் பாதித்தால், உடனடியாக உயிரிழப்பு ஏற்படுமா என்பது அடுத்த சந்தேகம். அப்படி கிடையாது. மற்ற எல்லா வைரஸ் தொற்றைப் போன்றது தான் இதுவும். எதிர்ப்பு சக்தி உடலில் குறைவாக இருந்தால், உயிரிழப்புக்கு வாய்ப்பு அதிகம்.
வயதானவர்கள், குழந்தைகள், ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நோயாளிகள், எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள், கேன்சர் நோயாளிகளுக்கு, அவர்கள் சாப்பிடும் மருந்துகள், எதிர்ப்பு சக்தியை குறைக்கலாம். இவர்களுக்கு வைரஸ், பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.இந்த வைரஸ் பாதித்தால், தொண்டையில் புண், வீக்கம், சளி, இருமல், காய்ச்சல் வரலாம். பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகளுக்கு, மருந்துகள் உள்ளன. அவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்யலாம்.
ஆனால், கொரோனா வைரசை அழிக்கக் கூடிய மருந்துகள் கிடையாது.தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க, கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கலாம். அதிக நாட்கள் சளி, இருமல் இருந்தால், மூக்கு, வாயை, முற்றிலும் மூடக்கூடிய முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லலாம். இது நமக்கும் பாதுகாப்பு... சுற்றி இருப்பவர்களுக்கும் நம் வாயிலாக தொற்று பரவாது.இருமும் போதும், தும்மும் போதும், மூக்கையும், வாயையும் மூடி தும்முவதற்கும், இருமுவதற்கும் பழக வேண்டும். இருமல், தும்மல் வரும் போது, முழங்கையின் உள்பக்கத்தில் வாயையும், மூக்கையும் வைத்து தும்மினால், அருகில் இருப்பவர்களுக்கு வைரஸ் பரவாது.வெளியில் விளையாடி விட்டு வரும் குழந்தையை, கைகளை நன்றாக சுத்தம் செய்ய பழக்க வேண்டும்.
நாமும், அதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.'கூல் டிரிங்ஸ்' குடித்தால், இந்த வைரஸ் பாதிக்குமா? என, என்னிடம் கேட்கின்றனர். பாட்டில்களில் அடைத்த குளிர் பானங்களை குடிப்பது நல்லதல்ல. ஆனால், வைரசுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. கொரோனாவைப் போன்ற, எந்த புளு வைரசும், குளிர் காலத்தில் அதிகம் பரவும். எவ்வளவு வலிமையான வைரசாக இருந்தாலும், வெயில் காலத்தில், அவற்றால் உயிர் வாழ்வது கடினம். தமிழகத்தை பொறுத்த வரை, தற்போது கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த என்ன செய்யலாம்?
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை, மது, உடலின் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். நாள் ஒன்றுக்கு, இரண்டு கப் காபி குடிக்கலாம். மத்திய நரம்பு மண்டலத்தை துாண்டக் கூடியது காபி. எனவே, நீர்ச்சத்து குறைய வாய்ப்புகள் அதிகம்.வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா தினமும் சாப்பிடலாம். கொய்யா பழத்தில் இருக்கும் அளவுக்கு சத்து, வேறு எதிலும் கிடையாது. டீ அல்லது கொதிக்கும் நீரில், சிறு துண்டு தோல் சீவிய இஞ்சி போட்டு, இரண்டு வேளை குடிக்கலாம். சமையலில் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் பயன்படுத்தலாம். பச்சை காய்கறிகள், கீரை வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை தரக் கூடியவை.
டாக்டர் அஸ்வின் விஜய்,பொது நல மருத்துவர்,சென்னை-9094220777
