PUBLISHED ON : பிப் 02, 2020

தோல், முடி, நகம் ஆகியவற்றை, 600க்கும் மேற்பட்ட நோய்கள் பாதிக்கக் கூடும். உலர்ந்த சருமம் முதல், உயிர்க்கொல்லி நோய்கள் வரை, தோல் நோய்கள் பலதரப்பட்டவை. பல தோல் நோய்கள், ஒரே தோற்றம், அறிகுறிகளை கொண்டவையாக இருப்பதோடு, தோற்றங்கள் உடனுக்குடன் மாறுவதால், நோய்களைக் கண்டறிவது சில நேரங்களில் சிரமமான செயலாகிறது.சாதாரண தோல் நோயாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். மற்ற உறுப்புகளில் வரும் நோய்கள், கண்ணுக்குப் புலப்படாதவை; அறிகுறிகளால் மட்டுமே உணரப்படுகின்றன. ஆனால், தோல் நோய்கள் கண்ணுக்குத் தெரிவதால், அவற்றின் தோற்றம் தரும் அசூயையும், அதனால் எற்படும் மனஉளைச்சலும், ஆற்றாமையும் சொல்லில் அடங்காதவை.
அறிகுறி
தோலின் பரப்பளவு மிகப் பெரியதாக இருப்பதாலும், பல்வேறு காரணிகள் தோல் நோய்களை உருவாக்குவதாலும், பெரும்பாலான தோல் நோய்கள் நெடுங்காலம் இருந்து, மிக மெதுவாக மறையக் கூடியவை.
தோல், முடி, நகத்தை பாதிக்கும் நோய்கள் மிகச் சிலவே. பெரும்பாலான தோல், முடி, நகம் சார்ந்த நோய்கள், உடலின் உள்ளுறுப்புகளிலும், வெளியிலும் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் அறிகுறிகள் தான்.
ஆகவே, முழு உடல் பரிசோதனையும், நோயாளியின் இனம், குடும்பம், உறவுகளின் நலம், வாழும் சூழல், வசிப்பிடத்தின் புவியமைப்பு மற்றும் தட்பவெப்பம், பொருளாதார சூழல், ஊட்டச்சத்து, கலாசாரம் மற்றும் பண்பாடு, உடல் நலம், மன நலம், தொழில், பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்கு, உட்கொள்ளும் மருந்துகள் போன்ற அனைத்து விபரங்களும், தோல் மருத்துவருக்கு மிகவும் அவசியமானது.
விரிவான நேர்காணலுக்கு பின், தோலும், முடியும், நகமும் மிக முக்கியமாக கண், காது, மூக்கு, வாய் மற்றும் பிறப்புறுப்புகளின் உட்புறத்தோலும் முழுமையாகக் காணப்பட்டால் மட்டுமே, ஒரு தோல் மருத்துவர், தோல் நோய்களைப் பிழையின்றி, துல்லியமாக கண்டறிய முடியும்.
வானவில்லின் ஏழு நிறங்களும், தோலின் அறிகுறிகளாகத் தென்படலாம் என்பது, நம்மை வியப்பிலாழ்த்தும். மன உளைச்சலால் ஏற்படும் ஒருவிதக் கரப்பான், கரு நீல நிறத்திலும், ரத்தநாளங்களில் ஏற்படும் நோய்கள் கருஞ்சிவப்பாகவும், நீலமாகவும், ஒவ்வாமை நோய்கள் சிவந்தும், கருத்தும், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் வெளுத்தும் காணப்படலாம்.
எண்ணற்ற மாற்றங்கள்
தோலில் தட்டையாகவும், சற்றே தடித்தும் ஏற்படும் புள்ளிகள், அவற்றின் அளவுக்கும், தன்மைக்கும் ஏற்ப தரம் பிரிக்கப்பட்டு, பல நோய்களைக் குறிக்கின்றன.நீர்க் கொப்புளங்கள், சீழ்க் கொப்புளங்கள், தோல் நலிவு, நீர்க்கசிவு, நகக் கீறல்கள், புண்கள், வடுக்கள் என, எண்ணற்ற மாற்றங்கள் வகைப்படுத்தப்பட்டு, அவை ஒவ்வொன்றும், குறிப்பிட்ட ஒரு பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக அமைகின்றன.
இந்த அறிகுறிகளில், மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள், ஒரே மனிதனின் தோலில், ஒரே நேரத்தில், வெவ்வேறு இடங்களில் தோன்றலாம். அவை, ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளிள் பாதிப்புகளை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சூழல் சார்ந்த மாற்றங்களின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.
முடி உதிர்தல், முடி உடைதல், இள வயதிலேயே முடி நரைத்தல் போன்ற முடி சார்ந்த அறிகுறிகள் அனைத்தும், நம் உடலின் மாற்றத்தையே வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் முக்கியமாக, மரபணு மாற்றங்கள், ஹார்மோன் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைகின்றன.
நகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதன் மூலம், பூஞ்சைக் காளான் தொற்று நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட நாற்பது விதமான நோய்களையும், இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளையும், முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.
'தோல் திசு ஆய்வு'
உதாரணமாக, இதயத்தின் வால்வுகளில் ஏற்படும் நோய்த் தொற்றைக் கூட, நகங்களில் ஏற்படும் நிற மாற்றத்தால் அறிந்துக் கொள்ளலாம்.
தோலில் ஏற்படும் அறிகுறிகள் அனைத்தும், தோலில் எப்போது, எந்தெந்த இடங்களில் முதலில் தோன்றி, எங்கெல்லாம் பரவுகின்றன என்பதைக் குறித்து, பல்வேறு நோய்களைக் கண்டறியலாம்.
உரித்து விரித்தால், 6 அடிக்கு நாலு அடி கொண்ட ஒரு சிறு அறை முழுவதும், தரை விரிப்பாக அமையக் கூடிய விரிந்து பரந்த தோலில், ஒவ்வொரு நோயும், ஒவ்வொரு உடல் உறுப்புகளின் பாதிப்பும், ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு வருகிறது என்பதும், ஒரு வியப்பான தகவல்!
தோலில் ஏற்படும் பல அறிகுறிகள், குறிப்பாக நிற மாற்றங்கள், மேற்கத்திய மனிதர்களின் வெண் தோலை ஒப்பிடும் போது, நம் தோலில் சற்றே வித்தியாசமாகத் தென்படும்.பல நேரங்களில், தோலில் தோன்றும் அறிகுறிகள், புலப்படாமல் போகலாம். பல தோல் நோய்களின் அறிகுறிகள், ஒன்று போல் தோற்றம் அளிக்கலாம். எனவே, தோல் நோய்களைப் பிழையின்றி, துல்லியமாக கண்டுப்பிடிக்க, 'தோல் திசு ஆய்வு' செய்யப்படுகிறது.
தோலின் மேற்புறத்தில் தோன்றும் மாற்றங்களை கண்களாலும், தோலின் திசுவுக்குள் ஏற்படும் மாற்றங்களை நுண்ணோக்கியாலும் ஆய்வு செய்து, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, எந்த ஒரு தோல் நோயையும், மிகத் துல்லியமாகக் வகைப்படுத்தி அறிந்து விட முடியும்.
தோற்ற மாயைகள்
'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்பது போல், தோல் செதில்கள் உதிரும் நோய்கள் எல்லாம், 'சோரியாசிஸ்' அல்ல. தோற்றம் ஒன்று போல் காட்டியும், மாறு வேடங்கள் பல புனைந்தும், மாயங்கள் பல காட்டி, தோல் மருத்துவரை மருளச் செய்யும் ஆற்றல், தோலுக்கும், முடிக்கும், நகத்துக்கும் உண்டு.
தோல், முடி, நகம் சார்ந்த நோய்கள், உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் மாற்றங்களை வெளிப்படுத்தும் தோற்ற மாயைகள் என்பதை, மிகத் தெளிவாக அறிந்தால் தான், தோல் நோயாளியும், தோல் மருத்துவரும் இணைந்து, தோல் நோய்களை துல்லியமாகக் கண்டறிந்து, அகத்திலும், புறத்திலும் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து, அவற்றை உடனே களைந்து, நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்பதே, இந்த வாரம் நாம் அறியும், மிகப் பெரிய உண்மை.
டாக்டர் எஸ். முருகுசுந்தரம்
மருத்துவ இயக்குனர்,
தோல் மருத்துவ மையம்
சென்னை
93811 22225, 93813 22234
