PUBLISHED ON : ஜூன் 22, 2014

என் வயது 77. நான் 5 ஆண்டுகளுக்கு முன் இருதய பிரச்னைக்காக 'பேஸ் மேக்கர்' வைத்துள்ளேன். நான் தற்போது விமான பயணம் மேற்கொள்ளலாமா?
'பேஸ் மேக்கர்' என்பது, இருதய மின்னோட்டத்தை சரி செய்யும் ஒரு கருவி. இதில் இரு பாகங்கள் உண்டு. ஒன்று வயர். மற்றொன்று பாட்டரி. வயர் இருதயத்துடன் பொருத்தப்பட்டு இருக்கும். பாட்டரி கழுத்து எலும்புக்கு கீழ் வைக்கப்படுகிறது. பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை, பேஸ்மேக்கரை செக்கப் செய்து, தங்கள் இருதய நிபுணரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம். பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் தாராளமாக விமான பயணம் மேற்கொள்ளலாம். விமான பயணத்தால் பேஸ்மேக்கர் கருவிக்கு எந்த பாதிப்பும் வராது.
என் வயது 75. முழங்கால் மூட்டுவலிக்கு இருவகை மாத்திரைகள் எடுக்கிறேன். தொடர்ந்து எடுக்கலாமா?
வலி மாத்திரைகளை தொடர்ந்து எடுப்பது தவறான பழக்கம். வலிமாத்திரைகளை தொடர்ந்து எடுத்தால் வயிற்றில் அல்சர், சிறுநீரக கோளாறு, இருதய கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. வலி மாத்திரைகளை நான்கைந்து நாட்களுக்குத் தான் உபயோகிக்க வேண்டும். அதற்கு மேல் வலி தொடர்ந்தால், உங்கள் எலும்பு மருத்துவரை சந்தித்து, அதற்கு என்ன சிகிச்சை முறை என கண்டறிந்து, அதனை மேற்கொள்வது தான் சிறந்தது.
எனக்கு இரு ஆண்டுகளாக அவ்வப்போது நெஞ்சில் காரணமேயின்றி, படபடப்பு ஏற்படுகிறது. இது சில மணி நேரம் நீடிக்கிறது. இது எதனால்?
நெஞ்சில் படபடப்பு ஏற்பட, பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு முதலில் ரத்தப்பரிசோதனை அவசியம். இதில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அறிவது அவசியம். இதுதவிர ரத்தத்தில் தைராய்டு பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். இருதயத்தை பொறுத்தவரை, இ.சி.ஜி., எக்கோ, டிரெட்மில் பரிசோதனை அவசியம் தேவைப்படும். இதுமட்டுமின்றி, 'Holter' (24 மணிநேர இ.சி.ஜி.,) பரிசோதனையும் தேவைப்படும். இப்பரிசோதனைகளின் முடிவுக்கு ஏற்ப, சிகிச்சை முறை அமையும்.
எனக்கு இரு மாதங்களாக சிறிது தூரம் நடந்தாலே தொண்டையில் வலி ஏற்படுகிறது. நான், இ.என்.டி., டாக்டரை பார்த்தேன். அவர் அனைத்தும் நார்மலாக உள்ளது என்கிறார். ஆனால் இன்னும் வலி தொடர்கிறதே, நான் என்ன செய்வது?
நடக்கும்போது தொண்டையிலோ, தாடையிலோ, கீழ்வரிசை பற்களிலோ, அழுத்தமோ அல்லது வலியோ ஏற்பட்டால், அது இருதய நோய்க்கான அறிகுறியாக இருக்க வாய்ப்பு அதிகம். நீங்கள் உடனடியாக இருதய நோய் நிபுணர் ஒருவரை சந்தித்து, எக்கோ, டிரெட் மில் பரிசோதனைகளை செய்ய வேண்டும். ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் அவசியம் தேவைப்படும். அவற்றின் முடிவுகளுக்கு ஏற்ப சிகிச்சை முறை அமையும்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452 - 233 7344.

