PUBLISHED ON : மே 26, 2013

* பி.சீனிவாசன், மதுரை: எனது வயது 56. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இல்லை. இதுவரை எந்த உடற்பயிற்சியும் செய்ததில்லை. இந்த வயதில் நடைப்பயிற்சியை துவக்கலாமா?
தற்போதைய நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, நடைப் பயிற்சியை துவக்க, வயது ஒரு பொருட்டல்ல. எந்த வயதில் நடைப் பயிற்சி துவங்கினாலும், அதனால் ஏற்படும் பலன் ஏராளம். குறிப்பாக, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு வராமல் தடுப்பதுடன், இருதயத்துக்கும் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, மனதிலும் நல்ல எண்ணங்களை உருவாக்குகிறது. இருந்தாலும் இதை துவங்கும் முன், முழுஉடல் பரிசோதனை செய்து, மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின், துவங்குவது நல்லது. துவங்கும் போது, பயிற்சியை மெதுவாக துவங்கி, சில மாதங்களுக்குப் பின், தீவிரமாக செய்யலாம்.
* கே.நாராயணன், நத்தம்: எனக்கு, பைபாஸ் சர்ஜரி செய்து, ஒரு மாதமாகிறது. இப்பாதிப்பில் இருந்து மீண்டு, மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்கு வர, பயிற்சிகள் ஏதும் உள்ளனவா?
இருதய நோயை பொறுத்தவரை, மாரடைப்பு வந்தவர்கள், பலூன் மற்றும் 'ஸ்டென்ட்' பொருத்தியவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், அப்பாதிப்பில் இருந்து மீண்டு வர, சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதற்கு தற்போது, சில வழிகாட்டுதல்கள் உள்ளன.
'மறுவாழ்வு மையங்களில்' ஒவ்வொரு வாரத்திலும், ஒருவர் என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், என்றே அட்டவணை உள்ளது.
இதற்கென்றே சில மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இங்கு உள்நோயாளிகளாக தங்கியிருந்தும், வெளிநோயாளிகளாக தினமும் வந்து, 2 மணி நேரம் பயிற்சி பெற்று வீடுதிரும்பலாம். இதை 'கார்டியாக் ரிஹேபிலிடேஷன் சென்டர்' என்பர். இங்கு பயிற்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் கண்காணிப்பிலேயே செய்யப்படும். இதனால், நீங்கள் எளிதில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட, இது உதவும்.
* பி.பாஸ்கரன், ஆண்டிபட்டி: எனக்கு 'ஸ்டென்ட்' சிகிச்சை செய்து, 7 மாதம் ஆகிறது. தற்போது, 'டி.பி' நோய் வந்துள்ளது. இருதயத்திற்கு ஆறுவகை மருந்துகளை எடுத்து வருகிறேன். இத்துடன் நிறைய டி.பி., மருந்தும் தந்துள்ளனர். அனைத்தையும் சேர்த்து எடுக்கலாமா?
இருதய ரத்தநாளங்களில், 'ஸ்டென்ட்' பொருத்தியவர்கள், முதல் ஆறுமாதங்களுக்கு, மருந்து மாத்திரையை வேளை தவறாமல் எடுப்பது அவசியம். ஏனெனில், ஒருமுறை மாத்திரையை எடுக்கத் தவறினாலும், 2ஸ்டென்டுக்குள்', மறுபடியும் அடைப்பு வரும், தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே, இருதய மாத்திரைகளை, ஒருவேளைகூட தவறாமல் எடுப்பது முக்கியம்.
இருதய மருந்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது, டி.பி., போன்ற நோய் ஏற்பட்டாலும், அந்த மருந்தையும் தாராளமாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், சில மருந்துகளின் அளவை கூட்டியோ, குறைத்தோ மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். இதை, உங்கள் டாக்டர் நன்கு அறிவார். டி.பி., நோய்க்கான மாத்திரையை, 9 மாதங்கள் முதல் ஓராண்டு வரை எடுக்க வேண்டும். இருதய மருந்துகளை பொறுத்தவரை, நாளடைவில் குறைக்கலாம். ஆனால், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எடுத்தாக வேண்டும்.
* எம். கிருஷ்ணன், அருப்புக்கோட்டை: எனது வயது 42. ரத்தத்தில் 'டிரைகிளிசரைடு' அளவு 350 மி.கி., என்ற அளவிலேயே உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?
TGL என்ற 2டிரைகிளிசரைடு' என்பது, ரத்தத்தில் உள்ள ஒருவகை கெட்ட கொழுப்பு. சர்க்கரை நோயாளிகளுக்கு, இது அதிகமாகவே உள்ளது. இதன் அளவு, ரத்தத்தில் 150 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும். இதற்கு உணவுக் கட்டுப்பாடு, உணவில் எண்ணெயை தவிர்ப்பது, பால் சார்ந்த உணவுகளை குறைப்பது முக்கியம்.
இதுதவிர, தினமும் நடைப் பயிற்சி அவசியம். சர்க்கரை நோய் இருந்தால், ரத்தத்தில் அதன்அளவை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மருந்துகளைப் பொறுத்தவரை, FIBRATE வகை மருந்துகள், 'டிரைகிளிசரைடை' நன்கு குறைக்கும். இதுதவிர மீன் எண்ணெய் மாத்திரையும் குறைக்கும். 'ஸ்டேட்டின்' வகை மருந்துகளைப் பொறுத்தவரை, 'ROSUVA STATIN' வகை மருந்துகள், கெட்டக் கொழுப்பை நன்கு குறைக்கின்றன.
-டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344