PUBLISHED ON : மே 26, 2013
எனது பல்லில் கொய்யாப்பழ விதை மாட்டிக் கொண்டது. பற்குச்சியால் எடுத்ததில் இருந்து, வலியும், கூச்சமும் உள்ளது. சிறுவிதைகளால் பற்களில் வலிவருமா?
கொய்யாப்பழ விதை மற்றும் பாப்கார்ன் விதை இவை இரண்டும் மிகக் கவனமாக சாப்பிட வேண்டிய உணவுகள். ஏனெனில் இவை பற்களின் நடுவில் மாட்டும்போது, பற்களில் விரிசல்களை உண்டாக்கிவிடும். இதற்கு 'க்ராக்ட் டூத்' என்று பெயர். பற்கள் அதிகமான விசைகளை தாங்கும் சக்தி கொண்டதுதான். ஆனால் இதுபோன்ற சிறிய அளவில் உள்ள கடினமான விதை எதிர்பாராத விதமாக பற்களில் படும்போது, அந்த அழுத்தம் பற்களின் எனாமலை தாண்டி, உள்ளேவரை சென்றுவிடும். இந்த பற்களால் நீங்கள் கடிக்கும்போது, இவ்விரிசல்கள் அதிகமாகும்.
நாளடைவில் இவை ஆழமாக பல்லின் நரம்புவரை சென்றுவிடும். அப்போதுதான் கூச்சம் மற்றும் வலி வரும். சூடான, குளிர்ந்த உணவை உண்ண முடியாது. இவ்விரிசல்களை முதலில் ஒரு சிறிய எக்ஸ்ரே படம் எடுத்து பல்லில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழமாக உள்ளது என பார்க்க வேண்டும். அதற்கேற்ப, சிகிச்சை முறையும் மாறும். பல்லின் வெளிப்புறத்தில் மட்டும் விரிசல் இருந்தால், வெனியர் என்ற வெளிப்புற சிகிச்சை செய்தால் போதும். அதே விரிசல் நரம்பு வரை சென்றிருந்தால், வேர் சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும். பின்னர் அந்தப் பல்லில் கேப் போட்டுவிட வேண்டும். வெகுநாட்களாக கவனிக்காமல் விட்டால், வேரின் நுனிவரை சென்றுவிடும். பின்னர் இதுவே கிருமிகள் உள்ளே போவதற்கான வழியாகும். எனவே கடினமான உணவுப் பொருட்களால் வலி ஏற்பட்டால் உடனடியாக அதனை கவனிப்பது நல்லது.
பற்களை வெண்மையாக்குவதற்காக 'பிளீச்சிங்' சிகிச்சை செய்ததால், பல்லில் லேசான கூச்சம் உள்ளது. இது எதனால்?
பற்களை பிளீச்சிங் செய்வதற்கான மருந்தில், 'பெராக்ஸைட்' எனப்படும் ரசாயனம் உள்ளது. இது பற்களுக்குள் ஊடுருவி மஞ்சள் தன்மையை நீக்கி, வெண்மையாக்கும். அவ்வாறு செய்யும்போது சிலசமயங்களில், பற்களின் நரம்பில் லேசான எரிச்சலை ஏற்படுத்தும். பிளீச்சிங் சிகிச்சைக்கான மருந்துகளை பல்டாக்டரின் மேற்பார்வையில்தான் உபயோகிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் மட்டுமே இவற்றை பற்களில் தங்கவிட வேண்டும்.
அதிகநேரம் பற்களில் இருந்தால் அதிக வெண்மையாகும் என்பது தவறு. அதிகநேரம் பெராக்ஸைட் பற்களில் பட்டால் கூச்சம் அதிகமாக இருக்கும். சரியான நேரம் பிளீச்சிங் செய்தாலும் ஒரு சிலருக்கு லேசான கூச்சம் வரக்கூடும். இது சிலநாட்களில் அல்லது ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும். அதுவரை சூடான அல்லது குளிர்ந்த மற்றும் புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதோடு சேர்த்து கூச்சத்தை குறைப்பதற்கென தனியாக டூத்பேஸ்டுகள் உள்ளன. அவற்றை பற்களில் நன்றாக தேய்த்து அப்படியே ஒரு சிலநிமிடங்கள் விட்டு, பின்னர் வாயை கழுவ வேண்டும். இதன்மூலம் சிலநாட்களிலேயே கூச்சம் வெகுவாக குறையும். பல்கூச்சம் குறையும் வரை மிகவும் மிருதுவான பிரஷ்ஷையே உபயோகிக்க வேண்டும். இதுபோன்ற சில எளிய வழிமுறைகளால் பிளீச்சிங் சிகிச்சை மூலம் ஏற்படும் கூச்சத்தை முற்றிலும் குணமடைய செய்யலாம்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441- 54551