PUBLISHED ON : மே 26, 2013

நாற்பது வயதான எனக்கு, ஒரு மாதமாக சளி, இருமல் இருந்ததால், பரிசோதனை செய்தேன். சளி பரிசோதனைக்கு, காலையில் பல் துலக்குவதற்கு முன், வெளிவரும் சளியை பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும் என டாக்டர் கூறினார். இது ஏன்?
சளி பரிசோதனையின் மூலம் நுரையீரலை தாக்கிய கிருமிக்கு, என்ன வகையான மருந்துகள் கொடுக்க வேண்டும் என்று கண்டறியவே இப்பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுவாக இரவில் நீங்கள் தூங்கும்போது, நுரையீரலில் அதிகசளி தேங்கி இருக்கிறது. காலையில் இருமும்போது அதிக சளி கெட்டியாக வெளிவருகிறது. இச்சளியே பரிசோதனைக்கு மிகவும் ஏற்றது.
ஆகவே காலையில் பல் துலக்குவதற்கு முன், வெளியாகும் சளியின் மூலம் சளிபரிசோதனை செய்வது மிகவும் நல்லது. இதனால் உங்கள் நுரையீரலை தாக்கிய கிருமிக்கு சரியான மருந்தை கண்டறிய முடியும்.
எனது கணவருக்கு நுரையீரல் பரிசோதனையின்போது, அவருக்கு டி.பி., நோய் இருப்பதாக மருத்துவர் கூறினார். ஆறுமாதங்கள் தொடர்ந்து மருந்து எடுக்கும்படி கூறினார். இந்நோய் எனக்கும், எனது ஒருவயது குழந்தைக்கும் வரவாய்ப்பு உள்ளதா?
டி.பி., நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போதும், தும்மும் போதும், காற்றின் மூலம் அருகில்உள்ளவர்களுக்கு தொற்றுகிறது. டி.பி., நோய்க்கான மருந்துகளை ஒருவர் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தபின், அவரிடம் இருந்து, அவர் அருகில் உள்ளவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதில்லை. ஆனால் டி.பி.,க்கான மருந்துகளை எடுக்க ஆரம்பிப்பதற்கு முன், அதிகளவில் நோய் தொற்று ஏற்படுகிறது.
உங்கள் கணவர் டி.பி.,க்கான மருந்துகளை எடுக்க ஆரம்பிப்பதற்கு முன், நோய் தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்களும், உங்கள் குழந்தையும், எக்ஸ்ரே, மேன்டேக்ஸ் டெஸ்ட் மற்றும் ரத்தப்பரிசோதனைகள் செய்து, உங்களுக்கு டி.பி., நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதே நல்லது.
எனது வயது 25. கடந்த வாரம் சளி பிடித்திருந்தது. தொடர்ந்து 5 நாட்கள் இருமலும், 6வது நாள் இருமலுடன் சில சொட்டு ரத்தமும் வெளிவந்தது. எனது தாயார் இதைக் கண்டு மிகவும் பயப்படுகிறார். ரத்தம் வந்தால் பயமா?
உங்களுக்கு தொடர்ந்து இருமல் இருந்ததால் தொண்டையில் புண் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் இருமலுடன் சிலசொட்டு ரத்தம் வருவதற்காக பயப்படத் தேவையில்லை. ஆனால் ஒருமுறை ரத்தம் வந்தாலும், உங்கள் நுரையீரல் மற்றும் காது, மூக்கு, தொண்டையினை முழுமையாக பரிசோதிப்பது அவசியம். மேலும் ஒரு நுரையீரல் நிபுணரையும் காது, மூக்கு, தொண்டை நிபுணரையும் ஆலோசித்து ரத்தத்திகான காரணத்தை கண்டறிவது மிகவும் நல்லது.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147